எதற்கும் துணிந்தவன் -விமர்சனம்!

5

நடிப்பு: சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ், வினை, ஜெய் பிரகாஷ், தேவதர்ஷினி மற்றும் பலர்

தயாரிப்பு: கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்

இசை: இமான்

ஒளிப்பதிவு: ரத்னவேலு

இயக்கம்: பாண்டிராஜ்

ராமநாதபுரத்தில் வக்கீல் தொழில் பார்த்துக் கொண்டு தன் குடும்பத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாய் வாழ்ந்துக் கொண்டு கூடவே சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக ஏற்படும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் ஒருவராக இருந்து வருகிறார் சூர்யா . அவர் ஊருக்கு பக்கத்து ஊரில் இருக்கும் வினய் ஊருக்கும் இடையே ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பிளவு ஏற்பட்டு இருக்கிறது. அதாவது சூர்யா ஊர் பெண்களை வினய் ஊர்காரங்களுக்கும் இந்த ஊர் பெண்களை அந்த ஊர் காரங்களுக்கும் கட்டித் தர முடியாது என பிரச்சனை கிளம்பிய நிலையில், வில்லன் வினய் சூர்யா ஊர் பெண்களை காதல் வலையில் விழவைத்து ஆபாச படம் எடுப்பது என படு மோசமான காரியங்களை செய்வதால் அடுத்தடுத்து இளம் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதன் காரணத்தை அறிய முற்படும் போது சூர்யாவின் குடும்பமும் வில்லன் வினய் பிடியில் சிக்கி கொள்கிறது  பிறகென்ன.. அதிலிருந்து ஹீரோ மீள்வதுதான் இந்த எதற்கும் துணிந்தவன் படக் கதை. தமிழகம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்திய பொள்ளாச்சி ஸ்மார்ட் போனால் ஏற்பட்ட சீரழிவை முன்னிலைப்படுத்த முயன்று இருக்கிறார் இயக்குநர். .

சூர்யா சில பட இடைவெளிக்குப் பின்னர் முன்னரே சொன்னது போல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக நடித்து வழக்கம் போல ஸ்கோர் செய்திருக்கிறார்  ஜெய் பீம் படத்தை போன்று இதிலும் கண்ணபிரான் என்ற பெயர் கொண்ட வக்கீல் ரோல் என்றாலும் கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரிதளவில் இல்லை. ‘நான் கோட்டு போட்டா ஜட்ஜ் வேற, வேட்டிய கட்டுனா, நான்தான்டா ஜட்ஜ்’ என்று சூர்யா பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும், அதிரடியான சண்டைக் காட்சிகளையும் கண்டு தியேட்டர் அதிர்கிறது. கதாநாயகி பிரியங்கா மோகனின் மெச்சூர்டான நடிப்பால் கவர்கிறார்.

வில்லனாக வரும் வினய் பாச் மார்க் வாங்குகிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர், இளவரசு, தேவதர்ஷினி ஆகியோர் தங்களின் பங்களிப்பை நிறைவாக வெளிப்படுத்தியுள்ளார்கள். சூரி & புகழ் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். ரத்னவேலும் கேமரா ஒர்க் பிரமிக்க வைக்கிறது. இமான் பாடல்களை விட பின்னணி இசையில் அதிக காட்டி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் தீம் மியூசிக் சூப்பர்.

உள்ளங்கைக்கு வந்து விட்ட செல்போனால் விளையும் சில தவறான நிஜ சம்பவங்களைக் கோர்வையாக்கி காட்ட முயன்றிருக்கும் பாண்டிராஜின்.வசனங்கள் – குறிப்பாக . “ஆண் பிள்ளைகளை அழக்கூடாது எனச் சொல்லி வளர்ப்பதைவிட, பெண்களை அழ வைக்கக் கூடாது என சொல்லி வளர்க்க வேண்டும்”, “ஒரு வீடியோ வெளியானால் அதற்காக வெட்கப்பட வேண்டியது அந்த வீடியோவில் இருப்பவர்கள் அல்ல, அதை எடுத்தவர்கள்” ”  பெற்றோர்கள் பிள்ளையை பெற்றால் மட்டும் போதாது பிள்ளைகளுக்கு இது சரி இது தவறு என்று கற்றுக்கொடுப்பதே நல்ல வளர்ப்புக்கு அடையாளம்”போன்றவைகள் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியவை.

ஆக., ஒரு சினிமா என்பது பொழுது போக்கு சாதனம் என்பதுடன் அதன் மூலம் சமூகத்துக்கு நல்ல கருத்துகளை சொல்ல வெண்டும் என்பதை கடைப்பிடித்திருக்கும் சூர்யா & பாண்டிராஜ் கூட்டணி வென்று விட்டார்கள் என்றே சொல்லலாம்.

ஆணோ, பெண்ணோ – பெற்ற குழந்தைகளோடு ஒவ்வொரு குடும்பத்தினரும் காண வேண்டிய படமிது

Leave A Reply

Your email address will not be published.