எல்லோர் மனதிலும் வாழும் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் ..

வாழ்க்கை குறிப்பு..

13

கே.பி சார்  நினைவு தினம் (இன்று டிசம்பர் 13). இவரது வரலாறை ஒரு பக்கத்தில் எழுதிவிட முடியாது. ஒரு சிறு குறிப்பை காணலாம்.

கைலாசம் என்கிற கே.பாலசந்தர்  ஜூலை 09, 1930  நன்னிலம், தஞ்சாவூர் பிறந்தார் இவரது தந்தை தண்டபாணி. தாயார் சரஸ்வதி. மகனாக ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பை தன்னுடைய சொந்த ஊரிலேயே முடித்த கே. பாலச்சந்தர் 1949 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், சென்னையில் உள்ள ஏ.ஜி அலுவலகத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்த அவர், பணியில் இருந்து கொண்டே நாடகங்களில் நடித்து வந்தார். மேஜர் சந்திரகாந்த்,  எதிர் நீச்சல், நாணல், வினோத ஒப்பந்தம் போன்றவை அதிக வரவேற்பைப் பெற்ற நாடகங்களாகும்.

மேடை நாடகத் துறையில் இருந்து திரை துறை=க்கு வந்த கே. பாலச்சந்தர்  1965 ஆம் ஆண்டு  “நீர்க்குமிழி” திரைப்படத்தை டைரக்ட் செய்தார். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் திரைக்கதை செல்லும் பாணியில் புதுமையை புகுத்திய கே. பாலச்சந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’, ‘சிந்து பைரவி’, ‘இருகோடுகள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘தில்லு முல்லு’ போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

‘இருகோடுகள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய நான்கு படங்களும் இவருக்கு ‘தேசிய விருதை’ பெற்றுத்தந்தன.

இந்தியில் “ஏக் துஜே கேலியே” மற்றும் தெலுங்கில் “மரோ சரித்ரா” மற்றும் “ருத்ர வீணா”, கன்னடத்தில் “அரலிதா ஹூவு” போன்ற மிகச்சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார்.  ‘கவிதாலயா’  தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தாயாரித்து இருக்கிறார்.

1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிகளில்டிவி சீரியல்களில் தனது கவனத்தை  செலுத்திய கே. பாலச்சந்தர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான “ரயில் சிநேகம்” பரபரப்பாக பேசப்பட்டது.  ‘கையளவு மனசு’, ‘ரகுவம்சம்’, ‘அண்ணி’ போன்ற தொலைக்காட்சி தொடர்கள் இவருடைய டிவி படைப்புகளாகும். தமிழ் சினிமாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசனை உருவாக்கி தந்தவர்தான் கே.பி.

கே.பாலசந்தர் வாங்கி குவித்த விருதுகள் ஏராளம்.

1987 – இந்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது.
2005-ல் சத்தியபாமா பல்கலைக்கழகத்திடமிருந்தும், 2005-ல் அழகப்பா பல்கலைக்கழகத்திடமிருந்தும், 2007-ல் சென்னை பல்கலைக்கழகத்திடமிருந்தும் ‘கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கப்பட்டது.
1969-ல் ‘இருகோடுகள்’, 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’, 1981-ல் ‘தண்ணீர் தண்ணீர்’, 1984-ல் ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1988-ல் ‘ருத்ரவீணா’, 1991-ல் ‘ஒரு வீடு இருவாசல்’, 1992-ல் ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களுக்காக ‘தேசிய விருதுகளை’ வென்றுள்ளார். மேலும், 2011-ல் ‘தாதாசாஹெப் பால்கே’ விருதும் வழங்கப்பட்டது.


1981 – “ஏக் துஜே கேலியே” என்ற இந்தித் திரைப்படத்திற்காக ‘ஃபிலிம்பேர் விருது’.
1974-ல் ‘அவள் ஒரு தொடர் கதை’, 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’, 1978-ல் ‘மரோ சரித்திரா’ (தெலுங்கு), 1980-ல் ‘வறுமையின் நிறம் சிவப்பு’, 1981-ல் ‘தண்ணீர் தண்ணீர்’, 1984-ல் ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1985-ல் ‘சிந்து பைரவி’, 1989-ல் ‘புது புது அர்த்தங்கள்’, 1991-ல் ‘வானமே எல்லை’, 1992-ல் ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களுக்காக தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. மேலும், 1995- ல் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.
1968-ல் ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘தாமரை நெஞ்சம்’, 1978-ல் ‘தப்பு தாளங்கள்’, 1980-ல் ‘வறுமையின் நிறம் சிவப்பு’, 1980-ல் ‘அக்னி சாட்சி’, 1989-ல் ‘புது புது அர்த்தங்கள்’, 1992-ல் ‘வானமே எல்லை’, 1992-ல் ‘ரோஜா’, 1993-ல் ‘ஜாதி மல்லி ‘போன்ற திரைப்படங்களுக்காக ‘தமிழ்நாடு அரசு மாநில விருது’ வழங்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அரசிடமிருந்து ‘கலைமாமணி விருது’, ‘அண்ணா விருது’, ஆந்திரபிரதேச அரசிடம் இருந்து ‘நந்தி விருது’, ‘எம்.ஜி.ஆர் விருது’, ‘கலைஞர் விருது’, ‘திரைப்பட உலக பிரம்மா’, ‘பீஷ்மா விருது’, ‘கலையுலக பாரதி’ என மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார்.

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் படங்களில் கே பி டச் என்ற ஒரு ஹைலைட் இருக்கும். துணிச்சலான கதைகளங்களை திரைப்படங்களாக்கியவர்  எல்லோர் மனதிலும் வாழும் அவரை இயக்குனர் சிகரம் என்று தலைக்குமேல்  தூக்கி வைத்துகொண்டாட அவரது திறமையான படைப்புகளே காரணம்.

 

Leave A Reply

Your email address will not be published.