கருவாப்பயா பாடல் புகழ் தூத்துக்குடி கார்த்திகா ரிட்டர்ன்ஸ்

19

தமிழில் தூத்துக்குடி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா. அந்தப்படத்திற்கு பிறகு ‘தூத்துக்குடி கார்த்திகா’ என்று அழைக்கப்படும் அளவுக்கு அந்தப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. குறிப்பாக அந்தப்படத்தின் ‘கருவாப்பையா’ என்கிற பாடலை கேட்கும்போதே, இப்போதும் கார்த்திகாவின் முகம் தான் ஞாபகத்துக்கு வரும். அதேபோல ‘பிறப்பு’ படத்தில் அவர் ஆடிப்பாடிய, ‘உலக அழகி நான் தான்’ பாடல், அந்த சமயத்தில் பள்ளிக்குழந்தைகளின் மேடை நடனத்துக்கான பொருத்தமான பாடலாக அமைந்தது.

இடையில் சில நாட்கள் திரையுலகை விட்டு ஒதுங்கி மும்பை சென்றுவிட்ட கார்த்திகா தற்போது மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.. இதுபற்றி கார்த்திகா நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது ;

“தமிழில் படங்களில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் தான், திடீரென தங்கையின் படிப்புக்காக மும்பை சென்று தங்க வேண்டிய சூழல் உருவானது. அப்போதும் கூட சில படங்களில் நடிக்க அழைப்பு வந்தும் ஏற்க முடியாத நிலையில் இருந்தேன். இடையில் சென்னை வந்தபோது, வெளியில் சென்ற இடங்களில் ரசிகர்கள் பலரும், “இத்தனை நாளாக “எங்கே சென்றீர்கள்..? நீங்கள் ஏன் மீண்டும் நடிக்க கூடாது ?” என தவறாமல் கேட்டனர். உடன் இருந்த உறவினர்கள் கூட, உன்னை எவ்வளவு பேர் மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.. அதற்காகவது மீண்டும் நீ நடிக்கவேண்டும் என கூறினார்கள். அப்போதுதான் ரசிகர்களின் அன்பை இவ்வளவு நாள் நான் மிஸ் பண்ணியிருக்கிறேன் என புரிந்தது.

அந்தசமயத்தில் தான் தெலுங்கு, தமிழ் என இருமொழிகளில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. இதுதான் சரியான தருணம் என அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. அதில் ஒப்பந்தமான நேரம், அந்தப்படங்கள் மூலமாக இன்னும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்க அழைப்பு வந்துள்ளது. அதேபோல இங்கே தமிழிலும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இனி வெள்ளித்திரையில் என்னை அடிக்கடி நீங்கள் பார்க்கலாம்” என்கிறார் கார்த்திகா.

இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய சீரியல்களில் நடிக்கவும் கார்த்திகாவுக்கு அழைப்பு வந்தது. அந்த சமயத்தில் தான் தமிழ், தெலுங்கு என இருமொழி படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது. அதுமட்டுமல்ல, அனுஷ்கா நடித்த அருந்ததி படம் போல இன்னொரு கதையில் நடிக்க இருக்கிறார். அதனால் இப்போதைக்கு தொடர்ந்து வெள்ளித்திரையிலேயே கவனம் செலுத்தலாம் என முடிவு செய்துள்ளார் கார்த்திகா.

Leave A Reply

Your email address will not be published.