காலமான தன் ரசிகர் முத்துமணி மனைவியிடம் போனில் பேசி ஆறுதல் சொன்ன ரஜினிகாந்த்!

0

சூப்பர் Sடார் ரஜினிகாந்த் முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தைப் பார்த்து பிரமித்து போய்,முதன் முதலாக ‘கவர்ச்சி வில்லன் ரஜினி ரசிகர் மன்றத்தை’ ஆரம்பித்தவர் மதுரை முத்துமணி. அந்த வகையில் தனக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் தொடங்கியவர் என்பதால் ரஜினியும் இவர் மீது அன்பு காட்டிவந்தார். தாய், தந்தையை இழந்த முத்துமணிக்கு 1993ல் தன் வீட்டு பூஜை அறையிலேயே திருமணம் செய்துவைத்தார் ரஜினி. 2020ம் ஆண்டு உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முத்துமணி சிகிச்சை பெற்றபோதும்கூட, அவருக்கு ஆறுதல் சொன்ன ரஜினி சில உதவிகளையும் செய்தார்.

இந்த நிலையில், கடந்த 9ம் தேதி அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு இரங்கல் தெரிவித்து ரஜினி சார்பில் யாராவது மதுரைக்கு வருவார்களா, அல்லது ரஜினி போனில் பேசுவாரா என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களுக்கு இருந்தது. இந்த நிலையில், நேற்று முத்துமணியின் மனைவி லட்சுமியை ரஜினி போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்கள் இடையே நடந்த உரையாடல் இதோ…

“வணக்கம் சார்…”

“சாரிம்மா… 5 நாளா உடம்பு சரியில்ல எனக்கு”

“அப்படிங்களா சார், என்ன சார் உடம்புக்கு?”

“கோல்டு அன்ட் ஜொரம்மா… கம்ப்ளீட்டா 5 நாளா… அதனால பேச முடியல…”

“பரவால்ல சார்… மாசக் கணக்குல ஆஸ்பத்திரியில இருந்தப்ப எல்லாம் அவரு பிழைச்சி வந்திட்டார் சார். இப்ப 5 நாள்தான் முடியாம இருந்தாங்க. இப்படியாகிடுச்சி. எனக்குகூட ஒண்ணும் இல்ல. ஒரே பொண்ணு. மேரேஜ் கூட பண்ணி வெக்காம போயிட்டாரேன்னு தான் கவலையா இருக்குது.”

“அதுக்கு ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்மா…”

“இப்ப தான் ட்வல்த் படிக்கிறா… கல்யாணமாகி 12 வருஷம் கழிச்சித்தான் குழந்தை பிறந்தது.”

“அதைப் பத்தி கவலைப்பட வேண்டாம்மா. நான் பார்த்துக்கிறேன். சென்னை வந்தா வீட்டுக்கு வாங்க”

“சரிங்க சார்.”

“ரொம்ப நன்றி மா.”

இது குறித்து முத்துமணியின் மனைவி லட்சுமியிடம் கேட்டபோது, “நேற்று மாலை 6.45 மணி அளவில் ரஜினி சார் பேசுனாங்க. முத்துமணி இறந்தது ரொம்ப ரொம்ப வருத்தம்மா. கவலைப்படாதீங்கம்மா. கேல்டா இருந்ததால தான் பேச முடியல. பொண்ணை பற்றி ஒன்னும் யோசிக்காதீங்க. இந்த கால கட்டம் முடிஞ்த பிறகு நீங்களும் பொண்ணும் சென்னைக்கு வாங்க என்றார். ரஜினி சார் பேசியதே எங்களுக்கெல்லாம் ரொம்ப ஆறுதல். ஏன்னா, அவரை எங்க குடும்பத் தலைவராகத்தான் நாங்க நினைக்கிறோம். எங்களுக்கு எப்ப கல்யாணம் பண்ணி வெச்சாரோ அப்ப இருந்தே அவர்தான் எங்க குடும்பப் பெரியவரு. வீட்ல நல்லது கெட்டது எதுனாலும் அவர்கிட்டதான் முதல்ல சொல்லுவோம். அப்படித்தான் என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லாதபோது 2 முறை போன் பண்ணி நலம் விசாரிச்சாரு” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.