காவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும்!

ம நீ ம தலைவர் கமல்ஹாசன் அறிக்கை

0

காவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்  இது குறித்த அவர் வெளி யிட்டுள்ள அறிக்கயில் கூறியதாவது:

“நடந்தாய் வாழி காவேரி” என்று பாடும் நம்மை “நின்றாய் நீ காவேரி” என்று வாடும் நிலைக்குத் தள்ளுகிறது கர்நாடக அரசு.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்காக 1890-ல் அன்றைய மைசூர் மாகணத்திற்கும் சென்னை மாகாணத் திற்கும் இடையே பேச்சுவார்த்தை; 1892-ல் ஒப்பந்தம்; மீண்டும் 1924-ல் ஒப்பந்தம்; 50 ஆண்டுகள் கழித்து 1974-ல் ஒப்பந்தம் புதுப்பிப்பதில் சிக்கல்; 1991-ல் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு; 2007-ல் இறுதித் தீர்ப்பு; 2013-ல் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியீடு; 2018-ல் காவிரி மேலாண்மை வாரியம் என 130 ஆண்டுகளாக காவிரி விவகாரம் என்பது இரு மாநிலங்களுக்கிடையே தீராத பிரச்னையாக, உறவுகளைச் சீர்குலைக்கும் சிக்கலாக நீடிக்கிறது.

தடையேதுமின்றி ஓடிக் கொண்டிருக்க வேண்டிய நதியில் ஏற்கனவே பல அணைகளைக் கர்நாடக அரசு கட்டிவிட்டது. மேலும் ஒரு அணையைக் கட்டி தமிழக விவசாயிகளின் வாழ்வை கேள்விக் குறியாக நினைக்கும் கர்நாடக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

இருமாநிலங்களும் தங்களுக்குள் தீர்த்துக் கொள்ளமுடியாமல் போகும் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னைகளை உரிய வழிமுறைகளின் மூலம் தீர்த்துவைக்கவேண்டிய தார்மீகப்பொறுப்பு, அரசியல்சாசனப் பொறுப்பு மத்திய அரசிற்கு இருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக மத்திய அரசு அதை உணரவில்லை என்பதே வரலாறு.

தமிழ்நாட்டின் சார்பாக நமது நீர்பாசனத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரைச் சந்திக்கும் போது, அவரிடம் உங்கள் விருப்பமில்லாமல் மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித் திருந்தார்.

 

கர்நாடக முதல்வர்  எடியூரப்பா ஜல்சக்தித் துறை அமைச்சரைச் சந்தித்தபோது வெகு விரைவில் உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிக் கிறேன் என்று உறுதி யளித்திருக்கிறார். இந்த இரண்டு செய்திகளும் சம்பந்தப்பட்டவர்களால் பத்திரிகையாளர்களிடம் பகிரப்பட்டுள்ளது. அப்படி யெனில் ஜல்சக்தித் துறை யாரிடம் சொல்வது உண்மை? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? அது நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி செயல் படுமா அல்லது ஓட்டு அரசியலுக்கு எது உகந்ததோ அதைச் செய்யுமா?

தமிழ்நாட்டுப் பிரதிநிதி சந்திக்கும்போது தமிழ் நாட்டுக் குரலிலும், கர்நாடக மாநிலத்தின் பிரதிநிதி சந்திக்கும்போது கர்நாடகக் குரலிலும் பேசுவது தேசத்தின் அமைதிக்கும் ஒற்று மைக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல். இது அரசியல்சாசனத்தின் மாண்பைக் குலைக்கிறது.

அரசியல் காரணங் களுக்காக காவிரி பிரச்னையில் கர்நாடகத்தின் பக்கமாகவே மத்திய அரசு சாய்ந்திருப்பது வழமை. இந்த அநீதிப் போக்கு இனியும் தொடர்வது நியாயமல்ல. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் குரல் தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும். நீதியின் குரலாக ஒலிக்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு கமல் ஹாசன் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.