சாதிய கெடுபிடிகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் ‘உலகம்மை’!

0

விஜய் பிரகாஷ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள ‘உலகம்மை’, திருநெல்வேலியை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான வாழ்வியல் திரைப்படமாகும். மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் வீ.ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

’96’ படத்தில் நடித்த கவுரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் இருவரும் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் நடிகர்கள் மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர், பிரணவ் அருள்மணி, காந்தராஜ்,  ஜேம்ஸ், சாமி, ஜெயந்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த ‘உலகம்மை’ படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.  பேராசிரியர் குபேந்திரன் வசனம் எழுதியுள்ளார், கே.வி.மணி ஒளிப்பதிவு செய்துள்ளார், சுரேஷ் அர்ஸ் படத் தொகுப்பாளராகவும், வீரசிங்கம் கலை இயக்குநராகவும் பங்காற்றியுள்ளனர். பாடல் வரிகளை இளையராஜா, முத்துலிங்கம், சரவணன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

‘சாதி சனம்’, ‘காதல் F.M.’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரான விஜய் பிரகாஷ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

பிரபல தமிழ் எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் புகழ் பெற்ற நாவலான ‘ஒரு கோட்டுக்கு வெளியே’-வை அடிப்படையாகக் கொண்டு இந்த ‘உலகம்மை’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் இமயம்  பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் பிரகாஷ், தான் கல்லூரி நாட்களிலேயே சு.சமுத்திரத்தின் கதைகளால் ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் விஜய் பிரகாஷ் பேசுகையில், “எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ நாவல் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, அதை திரைப்படமாக எடுக்க நான் விரும்பினேன்.

நெல்லை மாவட்டத்தின் பின்னணியில் 1970-களில் இந்தப் படத்தின் கதை நடக்கிறது. உலகம்மை என்ற கிராமத்துப் பெண்ணைச் சுற்றியே கதை நகர்கிறது. மாரிமுத்து நாடார் மற்றும் பலவேச நாடார், உலகம்மை மற்றும் அவரது தந்தை மாயாண்டி நாடாரை பழி வாங்குகிறார்கள்.

அந்தக் காலத்தில் நிலவிய சாதிய அமைப்பை உலகம்மை எப்படி எதிர்க்கிறாள் என்பதைத்தான் இந்தப் படம் சித்தரிக்கிறது. சமூக வாழ்வியல் திரைப்படமான உலகம்மையின் முக்கிய அம்சங்களில் இளையராஜா இசையமைத்த நான்கு பாடல்களும் பின்னணி இசையும் அடங்கும்…” என்றார்.

வரும் மே மாதம் இந்த ‘உலகம்மை’ படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.