’செல்ஃபி’ -விமர்சனம்!

0

டிகர்கள்: ஜிவி பிரகாஷ், கௌதம் மேனன், வர்ஷா போலம்மா, வித்யா பிரதீப் மற்றும் பலர்.

இசை: ஜிவி பிரகாஷ்

ஒளிப்பதிவு: விஷ்ணு ரங்கசாமி

எடிட்டிங்: S.இளையராஜா

தயாரிப்பு: DG ஃபிலிம் கம்பெனி

இயக்கம்: மதி மாறன்.

வெளியீடு : கலைப்புலி தாணு

ஹீரோவாக வரும் ஜி.வி.பிரகாஷ், தன் அப்பா வாகை சந்திரசேகர் ஆசை மற்றும் கட்டாயத்தின் பெயரில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்து விருப்பமில்லாமல் இன்ஜினீயரிங் படிக்கிறார். அப்படிபடிக்கும் போதே பணம் சம்பாதிக்க ஆசைப்படும் ஜி.வி.பிரகாஷ், கல்லூரியில் மாணவர்களை சேர்த்து விடும் புரோக்கர் வேலை பார்க்கிறார். முதலில் சிறியதாக சம்பாதிக்கும் ஜி.வி.பிரகாஷ், பின்னர் பெரிய லாபத்திற்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதாவது ஏற்கனவே அந்த தொழிலில் இருப்பவர்களுக்கும் ஹீரோவிற்கும் இடையே மோதல் உண்டாகிறது. இறுதியில் ஜி.வி.பிரகாஷ் அந்த மோதலில் இருந்து விடுபட்டாரா? இல்லையா? சிக்கலை எப்படி சமாளித்தார்? என்பதே கதை.

ஜி.வி.பிரகாஷ், கல்லூரி மாணவனாக கனல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். நட்பு, அப்பா பாசம், காதல், சண்டைக் காட்சி, என நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக அப்பா வாகை சந்திரசேகரிடம் கோபித்துக் கொள்வது.. பின்னர் அவரைப் பற்றி தெரிந்தவுடன் வருந்துவது என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். காலேஜில் மாணவரை சேர்க்க செய்யும் உள்ளடி வேலைகளில் சிறப்பாக நடித்துள்ளார். மேலும் இறந்து போன நண்பனின் அம்மாவிடம் கலங்கிப்போய் நிற்கும்போதும், கோபத்தைக் காட்டும் போதும் கைதட்டல் பெற்றிருக்கிறார்.

கல்லூரியில் இடம் வாங்கித்தரும் தரகராக ரவி வர்மா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் கவுதம் மேனன். அசத்தலான வில்லன் வேடத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்திருக்கிறார். நாயகி வர்ஷா பொல்லம்மா ஜி.வி.பிரகாஷுக்கு உறுதுணையாக நடித்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் நண்பராக வரும் டி.ஜி.குணாநிதி, நடிப்பில் கண்கலங்க வைத்திருக்கிறார். இவருக்கு முதல் படமே சிறப்பான அறிமுகம்.

பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ்குமார். விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் மிரட்டலாக உள்ளது.கதை முழுவதிலும் ஸ்டண்ட் காட்சிகள் தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தது. இளையராஜாவின் படத்தொகுப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.

நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதங்கள் ஒரு பக்கம் நடந்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில், எந்த தேர்வாக இருந்தாலும் கல்லூரிகளின் வசூல் வேட்டையை யாராலும் தடுக்க முடியாது, என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் மதிமாறன், அதை கமர்ஷியலாகவும் கையாண்டிருப்பது ரசிக்க வைக்கிறது. தெளிவான திரைக்கதை அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத காட்சிகள் என்று கட்டிப்போடுகிறார் இயக்குனர் மதி. போலியான பெற்றோர்கள் காட்சி நல்ல திருப்பமாக அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார் மதிமாறன்.

மொத்தத்தில், கல்வி ஆசைக் கொண்ட பெற்றோகளுக்கு அங்குள்ள மாஃபியாக்களின் சுயரூபத்தை வெளிச்சமிட்டு காட்டும் படமிது

Leave A Reply

Your email address will not be published.