நடிகர் விவேக் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் விஜய்

0

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் வீட்டிற்கு, நடிகர் விஜய் இன்று காலை நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தியதாக ‘புதிய தலைமுறை’ உள்ளிட்ட தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடிகர் விவேக் கடந்த 17 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையிலும் விவேக்கின் மறைவிற்கு ஏராளமான திரைத்துறையினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

விவேக்கின் மறைவிற்கு முன்பாகவே நடிகர் விஜய் பெயரிடப்படாத ‘விஜய் 65’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பிற்காக கடந்த 6ஆம் தேதி ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவுக்குச் சென்றிருந்தார். தொடர்ச்சியாக 16 நாட்கள் படப்பிடிப்பில் இருந்ததால் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த விஜய் வரமுடியவில்லை.

இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்து ஜார்ஜியாவிலிருந்து நேற்று தமிழகம் திரும்பினார் விஜய். அவர் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும் புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்த நிலையில், இன்று காலை நடிகர் விவேக்கின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

தமிழன், குஷி, யூத், பத்ரி, பிரியமானவள், நேருக்கு நேர், திருமலை என ஏராளமான  திரைப்படங்களில் விஜய்-விவேக் கூட்டணி நகைச்சுவையில் கலக்கியுள்ளனர். கடைசியாக விஜய்யுடன் ‘பிகில்’ படத்தில் விவேக் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.