பீஸ்ட் புரொமோசன் நிகழ்ச்சியில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

0

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ வரும் 13-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். வழக்கமாக நடிகர் விஜய் படம் ரிலீசாகும் சமயத்தில் அப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடத்தப்படும். ஆனால் தற்போது வெளியாக உள்ள பீஸ்ட் படத்துக்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சை கேட்கவும், அதில் அவர் சொல்லும் குட்டி ஸ்டோரியை கேட்கவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பர். ஆனால் இந்த முறை இசை வெளியீட்டு விழா நடக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆனால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகர் விஜய். இயக்குனர் நெல்சன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தன்னைப் பற்றியும், பீஸ்ட் படத்தைப் பற்றியும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக இதில் குட்டி ஸ்டோரியும் சொன்னார். முதலில் நெல்சன் கேட்டபோது ஸ்டாக் இல்லப்பா என கிண்டலடித்த விஜய், பின்னர் புல்லாங்குழலையும் கால்பந்தையும் ஒப்பிட்டு ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றை சொன்னார்.

அப்போது நடிகர் விஜய் கூறிய கதை இதுதான்:

காற்று எப்படியெல்லாம் பயன்படுதுன்னு ஒரு கதை படிச்சேன். ஒரு நாள், புட்பால் கேட்டுதாம், புல்லாங்குழலைப் பார்த்து, ’இங்க பாரு எனக்குள்ளயும் காத்துதான் இருக்கு, ஒனக்குள்ளயும் காத்துதான் இருக்கு. உன்னை உதட்டுல வச்சு முத்தம் கொடுக்கிறாங்க, என்னைத் தூக்கிபோட்டு மிதிக்கிறாங்க, ஏன்? அப்படின்னு கேட்டுச்சாம்.

அதுக்கு புல்லாங்குழல் சொல்லுச்சாம், ‘ரொம்ப சிம்பிள். நீ வாங்குற காற்றை எல்லாம் நீயே வச்சுக்கிற. யாருக்கும் கொடுக்க மாட்டேங்கிற, அதனால உதை வாங்குற. ஆனா நான், எனக்குள்ள வர்ற காற்றை இசையா மாத்தி மத்தவங்களுக்கு கொடுக்கறேன். மத்தவங்களுக்கு கொடுக்கிறவங்க முத்தமிடப்படுவாங்க. உதவாம சுயநலமா இருந்தா உன்னை மாதிரி மிதிதான் வாங்குவாங்க. அதனால இனிமேலாவது நாலு பேருக்கு பயன்படு, சரியா?ன்னு போயிடுச்சாம் புல்லாங்குழல். அதனால புட்பாலை விட புல்லாங் குழலா இருக்க, நாம ட்ரை பண்ணலாம்’.

இவ்வாறு நடிகர் விஜய் கூறினார். இந்த கதை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.