நடிகை ராஜசுலோசனா நினைவஞ்சலி!

3

திருவல்லிக்கேணி திருமலாச்சாரி தேசிய மேல்நிலைப் பள்ளி. முதல் வகுப்பில் சேரக் காத்திருந்தது அந்த அரும்பு. “கண்ணு… உன் பெயர் என்ன சொல்லும்மா… ?” என ஆசிரியை கேட்டதும், குழந்தை மழலை உச்சரிப்பில் “ராஜீவலோசனா” என்றது. ‘ராஜசுலோசனா’ என்று பதிவேடுகள் புதிதாக எழுதிக்கொண்டன. அதுவே நிலைத்தும்விட்டது.

சிறுமி பிறந்தது 1934 ஆகஸ்டு 15 – விஜயவாடாவில். அம்மா தேவகி. அப்பா பக்தவசல நாயுடுவுக்கு ரயில்வேயில் பணி. தாத்தா காலத்திலேயே சென்னையில் குடியேறிய குடும்பம். வாய்ப்பாட்டு, வயலின் என்று ராஜசுலோசனாவுக்கு எட்டு வயதில் சப்தஸ்வரமும் பழக்கமானது. ஏவி.எம்.மின் ’வேதாள உலகம்’ படத்தில் லலிதா – பத்மினியின் நாட்டியத்தைப் பார்த்ததும், ஆடுவதில் ஆர்வம் அதிகரித்தது. மனம் விட்டு இசை ஆசிரியை பங்கஜத்திடம் அதைக் கூறினாள். ‘சரஸ்வதி கான நிலையம்’ ராஜசுலோசனாவுக்கு ஜதி சொல்லிற்று.சீக்கிரத்திலேயே அரங்கேற்றம் கண்டார். ராஜசுலோசனாவின் முதல் பரத நாட்டிய நிகழ்வு உச்ச நீதிமன்ற நீதியரசர் பி.எல். வெங்கட்ராமஅய்யர் தலைமையில் நடந்தது. ராஜசுலோசனாவுடன் நடனம் பயின்ற மற்றொரு மாணவி, நடிகை ‘ தாம்பரம் லலிதா.’

எம்.சி. சி. மைதானத்தில் லலிதா நாட்டியக் குழுவினரின் நிகழ்ச்சி. நடன மாது ஒருவர் வரவில்லை. ராஜசுலோசனா தன் தோழிக்குக் கால் கொடுத்தார். பாம்பாட்டியாகவும்  கிருஷ்ணராகவும் ஆடிப் பாடினார்.அதை நேரில் கண்டு ரசித்தவர் கன்னட சினிமா இயக்குநர் சின்ஹா. ராஜசுலோசனாவை நடிக்கக் கூப்பிட்டார். வீட்டில் எதிர்ப்பு அணிவகுத்தது. ஆருடம் பார்த்தனர் பெற்றோர். ‘ஒப்பனை ஒளி வீசத் திரையில் மின்னுவார்’ என்றே அத்தனை பண்டிதரும் அடித்துச் சொன்னார்கள். ராஜசுலோசனாவின் முதல் படம் ஹொன்னப்ப பாகவதர்-பண்டரிபாய் நடிக்க, கன்னடத்தில் ‘குணசாகரி’ எனவும், தமிழில் ‘சத்தியசோதனை’ எனவும் தயாரானது. மிகச் சிறிய வேடம். நடனம் ஆடவும் முடிந்தது. ஏ.பி. நாகராஜனின் ‘நால்வர்’, ‘மாங்கல்யம்’ ஆகியன ராஜசுலோசனாவைப் பரவலாக அறிமுகப்படுத்தின.

டி.ஆர். ராமண்ணாவின் ‘குலேபகாவலி’யில் ராஜசுலோசனா முதன்முதலாக எம்.ஜி.ஆருடன் நடித்தார். ராஜசுலோசனா ஆடிப் பாடிய ‘என் ஆசையும் உன் நேசமும் ரத்த பாசமும்’ ‘குலேபகாவலி’யைக் கூடுதல் குஷிப்படுத்தியது. அதன் வெற்றியைத் தொடர்ந்து ராஜசுலோசனா இல்லாமல் சினிமாவே வராது என்ற நிலை.

1959 பொங்கல் வெளியீடு ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’. ஓஹோவென்று ஓடிற்று. ராஜசுலோசனாவை மேலும் பிரபலமாக்கியது. ‘அமுதும் தேனும் எதற்கு’ இரவுகளை சாஸ்வதமாக இனிக்கச் செய்கிறது. அண்ணாவின் ‘நல்லவன் வாழ்வான்’ திரைப் படத்தில் கவிஞர் வாலி எம்.ஜி.ஆருக்கு எழுதிய முதல் பாடலில் (சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்) ஆடிப்பாடும் வாய்ப்பு ராஜசுலோசனாவுக்குக் கிடைத்தது. அதன் மற்றொரு டூயட்டான ‘குற்றால அருவியிலே குளித்ததைப் போல் இருக்குதா’ பட்டிதொட்டிகளிலும் பட்டையைக் கிளப்பியது.

இதே ராஜசுலோசனாவுக்கு குணவதி – அடாவடிப் பெண் என இரு வேடங்களில் ‘கவிதா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியது மாடர்ன் தியேட்டர்ஸ்.அதற்கு முக்கிய காரணம், அவர்களது 100 நாள் படமான ‘கைதி கண்ணாயிரம்’. அதில் ராஜசுலோசனா இடம் பெற்ற ‘கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்’ பாடல் பெற்ற வரவேற்பு.

‘படித்தால் மட்டும் போதுமா’- வெற்றிச் சித்திரத்தில் நடிகர் திலகத்தின் மனைவியாக ராஜசுலோசனாவின் குணச்சித்திர நடிப்பு கொடிகட்டிப் பறந்தது. சிவாஜி குடித்துவிட்டு வந்து ராஜசுலோசனாவிடம், ‘நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை’ – என்று உள்ளக் குமுறலை உதடுகளில் உயிரூட்டிப் பாடி நடித்திருப்பார்.பெரிசுகள் இன்னமும் தங்கள் இதயத்தில் பச்சை குத்திக்கொண்ட காட்சி அது!

‘இதயக்கனி’யில் ராஜசுலோசனா ஏற்ற கொள்ளைக் கூட்டத் தலைவி வேடம் எவரும் எதிர்பாராதது. ஜேம்ஸ்பாண்ட் ஜெய்யுடன் ராஜசுலோசனா மோதிய ‘துணிவே துணை’ எமர்ஜென்ஸி காலத்தில் வசூலில் முரசு கொட்டியது. ரஜினியுடன் ராஜசுலோசனா நடித்த ‘காயத்ரி’ பரபரப்பாக ஓடியது.

ராஜசுலோசனாவின் கடைசி தமிழ்ப் படம் வெள்ளிவிழா கொண்டாடிய டி.ராஜேந்தரின் ’எங்க வீட்டு வேலன்’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று ஐந்து மொழிகளிலும் சொந்தக் குரலில் பேசி நடித்தவர் ராஜசுலோசனா.பிரபல தெலுங்கு டைரக்டர் சி.எஸ். ராவ் – ராஜசுலோசனாவின் கணவர்.

அண்ணா, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி. ராமாராவ், ஜெயலலிதா என்று ஐந்து முதல்வர்களுடனும் பணியாற்றியவர் ராஜசுலோசனா.

Leave A Reply

Your email address will not be published.