‘நடிப்புக்கொரு நாசர்’ பிறந்த தினமின்று!

7

இயக்குனர் கே.பாலச்சந்தர் எத்தனையோ பேரை அறிமுகம் செய்திருந்தாலும் அத்தனை பேரும் சினிமாவில் வெற்றி பெற முடிந்ததில்லை. அவர் செய்த அறிமுகங்களில் முத்தான , அவர் பெருமைப்பட்ட மற்றதோர் அறிமுகம் நடிகர் நாசர் ஆவார். அவரின் திறமை மீது அபார நம்பிக்கை வைத்தவர் அவர் பெயரை சினிமாவுக்காக மாற்றாமல் தன் கல்யாண அகதிகள் படத்தின் டைட்டில் ஸ்க்ரோலில் இவரை நாசர் முகம்மது[அறிமுகம்] என்றே அறிமுகம் செய்தார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
ஆம்1985 ஆம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் படத்தில் குடிப்பழக்கத்தால் மனைவியை [ஒய்.விஜயா] தன் நண்பனுக்கே கூட்டிகொடுக்கும் ஒரு இழிபிறவி கதாபாத்திரத்தில்தான் இவரை அறிமுகம் செய்தார்.

ஆனாலும் தமிழ் சினிமாவில் அரிதாரம் அற்ற அரிதான கலைஞர்களில் முக்கியமானவர். ‘நடிப்புக்கொரு நாசர்’ என்று பெயர் பெற்ற இவர் இதே மார்ச் 05 (1958)-ல் சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகேயுள்ள மேலேரிப்பாக்கம் என்ற கிராமத்தில் பொறந்தவர்

அங்கிருந்து செங்கல்பட்டு நகருக்குக் குடிபெயர்ந்த நாசர். பள்ளிப்பருவம் முடிந்து சென்னை தாம்பரத்தில் இருந்த கிறிஸ்தவக் கல்லூரியில் பி.யூ.சி முடித்தபின் இந்திய விமானப்படையில் சேர்ந்து சிலகாலம் பணிபுரிந்தார்.

ஆனால் நாசரின் அப்பாவுக்கோ மகனை நடிகனாக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. இதனால் விமானப்படை வேலையை விட்டுவிட்டு வரும்படி அப்பா வற்புறுத்த, அதை ஏற்று வேலையையும் விட்டுவிட்டு வந்த மகனை தமிழ்நாடு அரசின் திரைப்படக் கல்லூரியின் நடிப்புப் பிரிவில் பிடிவாதமாகச் சேர்த்துவிட்டார். பின்னர் தென்னிந்திய வர்த்தக சபை நடத்தி வந்த நடிப்புப் பள்ளியிலும் பயிற்சிபெற்றபின் நாடகங்களில் நடித்துக்கொண்டே திரை வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, சக திரைப்படக் கல்லூரி மாணவரும் நாசரின் நண்பருமான யூகி சேது இயக்கிய ‘கவிதை பாட நேரமில்லை’ படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகி நடிக்கத் தொடங்கினார். ஆனால் அதன்பிறகு ஒப்பந்தமான கே.பாலசந்தரின் ‘கல்யாண அகதிகள்’ (1985) படம் முந்திக்கொண்டது.

பின்னாளில். வில்லன், நாயகன், குணச்சித்திரம் என 400 படங்களைத் தாண்டிவிட்ட நாசர், ‘ஆவாரம் பூ’ படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். சிறந்த வில்லன் நடிகர் விருது, சிறந்த துணை நடிகருக்கான விருது, தமிழக அரசின் கலைமாமணி, ஆந்திர அரசின் நந்தி விருது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கலைச் செல்வன் விருது என பெற்ற விருதுகள் ஏராளம். ஆனால் “ மக்கள் தரும் அங்கீகாரமே எல்லாவற்றையும்விட சிறந்த விருது” எனக் கூறும் நாசர் சினிமாவில் ஈட்டிய பொருளை ‘அவதாரம்’, ‘தேவதை’, ‘மாயன்’ போன்ற நேர்த்தியான படங்களை எடுக்க முதலீடு செய்தவர். உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் உடம்பை வருத்திக்கொள்ள விரும்பமாட்டார்.

ஜிம் சென்று உடற்பயிற்சி செய்யாத நடிகர்களில் நாசரும் ஒருவர். காலை 5 மணிக்கு எழுந்து 30 நிமிடம் யோகா, 10 நிமிடம் மூச்சுப் பயிற்சி, பின் 45 நிமிடம் நடைப்பயிற்சி. இவற்றோடு வீட்டு வேலைகளையும் பகிர்ந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் நாசர்.

நடைப் பயிற்சிக்கு புறப்படும் முன் சமையல் அறையில் இருக்கும் பாத்திரங்களைக் கழுவி அடுக்கி வைப்பது.வீட்டைத் துடைப்பது, காரைக் கழுவுதல், தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுதல் ஆகியவற்றில் ஈடுபடுவார். அதில் கச்சிதமும் ஒழுங்கும் இருக்கும். இப்படி வீட்டு வேலைகள் செய்யும் நாட்களில் யோகா செய்யமாட்டார். `வீட்டில் உள்ள வேலைகளில் ஈடுபாட்டுடன் மனதைச் செலுத்தி ஈடுபட்டால் அதுவே யோகாவுக்கு இணையானது’ என்பது நாசரின் பார்வை.

நடிகன் என்பதையும் தாண்டி ஆர்வமுள்ள வாசிப்பாளியாகவும் வாழும் நாசருக்கு Filmnews 24/7 சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Leave A Reply

Your email address will not be published.