கலாபவன் மணி காலமான நாளின்று

1

மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய ரசிகர்களை தனது திறமையால் கட்டிப் போட்டவரின் மரணத்தை இன்று வரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தனது ஏழ்மை நிலையிலிருந்து தனது திறமைகளை வெளிக்காட்டி, கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்ட ராமன் மணி என்ற கலாபவன் மணி என்ற ஆட்டோ ஓட்டுனர், தேசிய விருதுகளையும், கேரள அரசின் விருதுகளையும் வாங்கிக் குவித்து, தென்னிந்திய சினிமா வரலாற்றில் தனக்கென முத்திரையைப் பதித்தவரிவர் என்றாலும் இந்த கலாபவன் மணியின் திரைப்பட வெற்றி என்பது சாமானியர்களின் வெற்றி.

திறமையிருப்பவன் யாராக இருந்தாலும் திரைத்துறையில் சாதிக்க முடியும் என்பதற்கு மணி ஒரு வாழும் உதாரணமாக இருந்தார்.

மணியின் பூர்வீகம் கேரளாவிலுள்ள சாலக்குடி. வாழ்க்கையை ஓட்டுவதற்க்காக ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கையை தொடங்கிய மணியின் மிமிக்ரி திறமையை கொச்சியிலுள்ள கலாபவன் மிமிக்ரி ட்ரூப் பட்டை தீட்டியது. இந்த ட்ரூப்பிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள்தான் இயக்குனர்கள் சித்திக், லால், ஜெயராம் போன்ற பல கலைஞர்கள். கலாபவனும், ஹரிஸ்ரீயும் கேரள மிமிக்ரி கலைஞர்களின் தாய் வீடுகள் எனலாம்.

1995 -இல் அக்ஷரம் படத்தில் நடிப்பதற்கு முன், கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பே கலாபவன் மணி ஒருசில படங்களில் தலை காட்டினார். ஆனாலும், அக்ஷரம்தான் அவரது முதல் படமாக ரசிகர்கள் மனதில் தங்கியுள்ளது.

அதற்கு அடுத்த வருடம் வெளிவந்த சல்லாபம் படம் கலாபவன் மணி என்ற நடிகனை அடையாளம் காட்டியது. மஞ்சு வாரியர் அறிமுகமான இந்தப் படத்தில் திலீப் நாயகனாக நடித்திருந்தார். மணிக்கு சின்ன வேடம். ஆனாலும், யார் இந்த நடிகன் என்று பார்வையாளர்களை கேட்க வைத்தார் மணி. அதன் பிறகு தொடர்ச்சியாக படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

மணியின் திரை வாழ்க்கையில் 2000 -ஆம் ஆண்டு முக்கியமானது. அவர் கண் தெரியாதவராக நடித்த, வாசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் கேரளாவில் வெற்றிகரமாக ஓடியதுடன் மணிக்கு நடிப்புக்கான சிறப்பு ஜுரி தேசிய விருதையும், கேரள அரசின் சிறந்த நடிகருக்குமான விருதையும் பெற்றுத் தந்தது. இந்தப் படம்தான் காசி என்ற பெயரில் தமிழில் விக்ரம் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.

நகைச்சுவை வேடங்களிலிருந்து குணச்சித்திரம், வில்லன் என்று வேறு தளங்களுக்கு மணி செல்ல ஆரம்பித்தார். தமிழில் அவரது வரவு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்துடன் அமைந்தது. ஜெமினி படத்தில் மிமிக்ரியுடன் அவர் செய்து காட்டிய வில்லத்தனங்கள் மறக்க முடியாதவை.

தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் தனக்கேயான முத்திரையை மணி பதிக்க தவறியதில்லை. ஆமென் படத்தில் வயதான இசைக்கலைஞனாக அவரது நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. வயதான மேக்கப்பிலும், அதற்கு உயிரூட்டிய நடிப்பிலும் நாம் மணிக்குப் பதில் ஒரு இசைக்கலைஞனையே கண்டார்கள்.

பாபநாசம் படத்தில் அவரது குரலும், அதிலுள்ள கம்பீரமும் அப்படியே இருந்தாலும், நோய் அவரது தோற்றத்திலிருந்த கம்பீரத்தை குலைக்க ஆரம்பித்திருந்தது. அவரது மரணம் எதிர்பாராதது. அவரது நாடன் பாட்டுகளும், மாப்பிள்ள பாட்டுகளும், ஆன்மீக பாடல்களும் மணி என்ற சாலக்குடிக்காரனின் அடையாளமாக இருந்தன. மேடையில் தனது நாடன் பாட்டுகளால் நம்மை மகிழ்வித்த அந்த கலைஞன் மணிக்கு கல்லீரல் நோய் பாதிப்பு ஏற்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம் தேதி அவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் அவரது உடலில் மீதைல் ஆல்கஹால் கலந்திருப்பது தெரியவந்ததை அடுத்து போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் எனக் குறிப்பிட்டு விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக கலாபவன் மணி இம்மரணத்திற்கு முன்னர் நண்பர்களுடன் மது அருந்திய சம்பவம் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்களிடமிருந்து எந்த உண்மையும் பெறமுடியாத நிலையே ஏற்பட்டது. இதனால் நம்பிக்கை இழந்த கலாபவன் மணியின் மனைவி நிம்மி சிபிஐக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை ஏற்ற கேரள நீதிமன்றம் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றியது.அவர்களும் இம்மரண முடிச்சை அவிழ்க்க தினறிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே உண்மை

Leave A Reply

Your email address will not be published.