தீதும் நன்றும் (பட விமர்சனம்)

19

படம்: தீதும் நன்றும்
நடிப்பு: ராசு ரஞ்சித், , ஈசன்,  அபர்ணா பாலமுரளி, லிஜோமோல், இன்பா, சந்தீப்ராஜன், காலயன் சத்யா, கருணாகரன்
இசை: சி.சத்யா
ஒளிப்பதிவு: கெவின் ராஜ்
தயாரிப்பு: என் எச் ஹரி சில்வர் ஸ்கிரீன்ஸ் எச். சார்லஸ் இம்மானுவேல்
இயக்கம்: ராசு ரஞ்சித்
வட சென்னையில் மீன் மார்க்கெட்டில் வேலை செய்யும்  தாஸ் (ஈசன்), சிவா (ராசு ரஞ்சித்) நண்பர்கள். திடீரென்று இவர்கள் கொள்ளை சம்பவத்திலும் ஈடுபடுகின்றனர். மற்றொரு தோஸ்த் மாறா இவர்களுடன் கூட்டணி சேர்ந்து கொள்ளையடிக்கிறான்.டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்கும்போது போலீசிடம் சிக்குகின்றனர். மூவரில் மாறா தப்பிச் சென்றுவிட தாஸ். சிவா போலீசிடம் சிக்கிக்கொள்கின்றனர். ஒருவருடம் ஜெயில் தண்டனை அனுபவிக்கின்றனர். விடுதலையாகி வரும்போது தாஸை மனைவி ஏற்க மறுக்கிறாள். இனி தப்பு செய்ய மாட்டேன் என்று சொல்லி மனைவியுடன் இணைகிறான், திடீரென்று இவர்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட பணம் இல்லாமல் தாஸ் திண்டாடுகிறான். அந்த நேரத்தில் வரும் மாறா (சந்தீப் ராஜன்) அவர்களுக்கு பண ஆசை காட்டி மீண்டும் தப்பு செய்ய தூண்டுகிறான். இதில் தாஸ் கதை முடிகிறது. நண்பனை கொன்றவனை சிவா பழிவாங்குவதே கிளைமாக்ஸ்.

ரவுடியிஸம், கொள்ளை என கதைக் கரு அமைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் வட சென்னை பகுதி கதை என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. முதல் காட்சியிலேயே பெட்ரோல் பங்க் கொள்ளையை அரங்கேற்றுகின்றனர் தாஸாக வரும் ஈசன், சிவாவாக வரும் ராசு ரஞ்சித், மாறாவாக வரும் பிரதீப். அதே இடத்தில் பங்கு பிரிகின்றனர்.

அபர்ணாவை சீக்கிரமே திருமணம் செய்துகொண்டு குடும்பம் குழந்தை என்று குடும்ப சிக்கலலில் ஆழ்கிறார்  ஈசன். திருட்டு வழக்கில் ஜெயிலுக்கு சென்று வந்ததால் தனக்கு குழந்தை முகத்தை கூட காட்டமாட்டேன் என்று  அபர்ணா கதவை சாத்தியதும் கதறி அழும் ஈசன் உருக்கம் காட்டுகிறார்.

ராசு ரஞ்சித், லிஜோமோல் மீது காதல் கொண்டு அவர் பின்னால் சுற்றுவதும் விட்டருகே ஃபாலோ செய்து திடீரென்று யாருக்கோ நடக்கும் நிச்சயதார்த் தத்தை லிஜோ மோலுக்குதான் நடக்கிறது என்று எண்ணி அந்த வீட்டுக்குள் நுழைத்து ரகளை செய்துவிட்டு அது வேறு ஒரு பெண்ணுக்கு நடக்கும் நிச்சயதார்த்தம்  என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைவதும் உடனே அவர்களை அந்த குடும்பத்தினர் துரத்தி துரத்தி அடிப்பதும் செம சீன். ராசு, ஈசன் நண்பராக வரும் அந்த குண்டு நபர் அடிக்கும் லூட்டி காமெடி ரகளை.

அபர்ணா முரளிக்கு நடிக்க நல்ல வாய்ப்பு. காதலியாக கசிவதும், குழந்தைக்கு தாய் ஆகி கஷ்டத்தில் தவிப்பதுமாக பெயரை தக்க வைக்கிறார். லிஜோ மோல் காதலில் போக்கு காட்டி ராசுவை அலையவிடுவது காதல் சீண்டல்கள். கண்களால் கவிதை மொழி பேசி கவர்கிறார் லிஜோ. வெள்ளை தாடி மீசை வில்லன் புது ஸ்டைலில் கவர்கிறார்.

ஹீரோவாக நடித்திருக்கும் ராசு ரஞ்சித் இயக்குனராகவும் பொறுப்பை தக்க வைத்திருக்கிறார். திரைக்கதையில் குழப்பம் இல்லாமல் எதிர்பாராத திருப்பங்களுடன் காட்சிகளை அமைத்து ஷாக் தந்திருக்கிறார். சி. சத்யா இசையும், கெவின் ராஜ் ஒளிப்பதிவும் பக்க பலம்.
தீதும் நன்றும்- இன்னொரு சுப்ரமணியபுரம்.

Leave A Reply

Your email address will not be published.