ஹேப்பி பர்த் டே ராஜ்கிரண்

0

ஆயிரம் தேனீக்கள் தொடர் முயற்சி அழகான தேன் கூடு அதைப் போன்றே வெற்றியின் ரகசியம் விடா முயற்சியில் தான் இருக்கும்.முயற்சியில் தேனீயாக இருந்தால் வெற்றி எல்லோருக்கும் தேனாக இனிக்கும் என்று தேனொழுகப் பேசுகிறார் இன்றைய பர்த் டே பாய் ராஜ்கிரண்.. இவரிடம் சகல விஷயங்களையும் அலசலாம்..

இன்று அவரிடம் நம் கட்டிங் கண்ணையா பேசும் போது கூட, “விவசாயி அரசியலுக்கு வந்தா அது குறித்து யாரும் விசனபடுவதில்லை.. ஒரு ரியல் எஸ்டேட் ஓனர் வந்தாலும் அப்படியே.,. ஆனா சினிமாவில் உள்ளோர் அரசியலுக்கு வந்தா மட்டும் தனிப் பார்வையும் கொஞ்சம் கீழான பார்வையும் இருக்குது. ஒரு விஷயம் தெரியுமா? அரசியல் வயப்படாதவன் உலகத்தில் யாருமே இல்லை. ஏன்னா, அரசியல் எடுக்கிற ஒவ்வொரு முடிவும் உங்களையும், என்னையும்தான் பாதிக்குது. அரசியலில் இல்லாத ஆள்னு இங்கு ஒருத்தரும் இல்லை. அப்படி யிருக்க, சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்து பேசுவதை சிறுமைப்படுத்துவது சின்னப்புள்ளத்தனமா இருக்கு. இந்திய தேசத்தில் ஓட்டுரிமை இருக்குற யார் வேணும்னாலும் அரசியலுக்கு வரலாம். யார் கட்சி ஆரம்பித்தாலும் அவங்க ளுடைய கொள்கையைச் சொல்லப் போறாங்க. எதுவா இருந்தாலும் மக்கள்தான் முடிவுபண்ணப்போறாங்க.” என்றாராம்

அதே ராஜ்கிரணிடம் அடுத்ததாக ‘இப்போது ரிலீஸாகும் படங்கள் பெரும்பாலும் ஓடுவதில்லையே” என்று கேட்ட போது, “ “அந்தக் காலத்தில் தயாரிப்பாளரும் கதை பற்றிய ஞானத்துடன் இருப்பார். ஓரளவுக்குக் கையிலும் பணம் வெச்சிருப்பார். கதை எழுதவும் ஒரு கூட்டம் இருக்கும். அவங்க கிட்ட கதை கேட்டு, பிடிச்சுப்போனால் கதைக்கு யாரெல்லாம் நடிச்சா நல்லாருக்கும்னு யோசிப்பார். மத்தவங்க கிட்டேயும் கலந்து யோசிச்சுட்டு நடிக்குறவங்களுக்கு ஒரு தொகையை அட்வான்ஸா கொடுத்துட்டு வருவார். ஆனால் இன்னைக்கு எல்லாமே தலைகீழா மாறிப்போச்சு. சினிமா உலகம் ரொம்ப வேகமா போயிட்டிருக்கு. தயாரிப்பாளர்கள் யாரும் இப்போ கதை கேட்குறது கிடையாது. அதனால், கதை ஆசிரியர்கள்ங்கிற இனமே இப்போ இல்லை.கதை இல்லாத சினிமா என்பது தலை இல்லாத உடல் என்பதால் பல படங்கள் பெட்டிக்குள் அடக்கமாயிடுது” என்று சொல்லி சிரித்தாராம்.

போன ஆண்டு ஆசிரியர் தினத்தன்று 1955 முதல் 1966 வரையில் பள்ளியில் படித்துள்ள நடிகர் ராஜ்கிரண், முதல் வகுப்பில் இருந்து ஒவ்வொரு ஆசிரியர் பெயரையும் மறக்காமல் குறிப்பிட்டு ஃபேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவிச்சி ருந்தார்..ஆம்.. “ஆசிரியர் தின நன்னாளில் எனக்கு கல்விப்பிச்சை அளித்த ஆசிரியப் பெருந்தகையினர் அனைவரையும் நினைத்து மகிழ்கிறேன்” என்று குறிப்பிட்டு ஆசிரியர்களின் பெயர்களை வரிசைப்படுத்தியுள்ளார் ராஜ்கிரண்.இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா ஆரம்பப் பள்ளியில் முதல் வகுப்பு ஆசிரியர் மோசஸ், இரண்டாம் வகுப்பு ஆசிரியர் குமார், மூன்றாம் வகுப்பு ஆசிரியை ஆசீர்வாதம், நான்காம் வகுப்பு ஆசிரியை செல்லம், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் மாதவன் என பெயர்களைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிச்சிருந்தார்.

கூடவே , சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு ஆசிரியர் சுப்பிரமணியம், ஏழாம் வகுப்பு ஆசிரியர் நைனார் முஹம்மது, சிறப்பு தமிழாசிரியர் நடராஜன், எட்டாம் வகுப்பு ஆசிரியர் கேசவன், ஹமீதியா மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் ஜனார்த்தனன், பத்தாம் வகுப்பு ஆசிரியர் ராஜு, பதினொன்றாம் வகுப்பு ஆசிரியர் ஜெகந்நாதன், சதக்கத்துன் ஜாரியா பள்ளிகளின் தலைமை ஆசிரியர் செல்வம், ஹமீதியா மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜார்ஜ் ஆகிய ஆசிரியர்களுக்கும் நன்றிகளை காணிக்கையாக்கி “அவர்களெல்லாம் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாவிடினும், அவர்கள் மனச்சாந்தியுடனும், சமாதானத்துடனும் நிறைவோடு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்றும் ராஜ்கிரண் நெகிழ்ந்து இருந்தார். இதை இங்கே குறிப்பிடக் காரணம் தன் வாழ்க்கையை கடந்தோர் சகலரையும் இன்றைக்கும் முழுமையாக நினைவில் வைத்து இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளதான்

‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் நடிகனாக நமக்குப் பரிச்சயமான ராஜ்கிரண் நடிகர் மட்டுமல்ல. இவரின் வாழ்க்கை, நிச்சயம் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும். அதற்காக, அவரைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு கதை ஒன்றிருக்கிறது.

“சினிமா என்னுடைய லட்சியம். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றே ஊரிலிருந்து ஓடிவந்தேன்” என்கிற சீனெல்லாம் ராஜ்கிரணிடம் இல்லை. இராமநாதபுரத்துக் காரரான இவருக்கு நன்றாக படித்து ஐபிஎஸ் எக்ஸாமெழுதி மிடுக்கா காக்கி யூனிஃபார்மில் உலா வர வேண்டும் என்பதே ஆசை. ஆனால், வீட்டுச் சூழல் இவரை 16 வயசிலேயே வேலை செய்ய சென்னைக்கு அழைத்துவருகிறது. எங்கெங்கோ வேலை தேடிப் பிறகு, சினிமா விநியோக கம்பெனி ஒன்றில் பணியில் சேர்கிறார். வந்த இடத்தில் ஜஸ்ட் 4.50 ரூபாய் மட்டுமே தினக்கூலி வாங்கி வேலை செய்தார். ஆனாலும் ஆரவமாகி கொஞ்சம் கொஞ்சமாக சினிமா விநியோகத்தில் எக்ஸ்பெர்ட் ஆகிறார்.

சில முதலாளிகளின் உதவியோடு தனியாக அலுவலகம் போட்டு, திரைப்பட விநியோக வேலையைத் துவங்குகிறார். 70களில் கோடம்பாக்கத்தில் ‘ஏசியன் காதர்’ என்றால் எல்லோருக்கும் தெரியும். இவர் படத்தை கையில் எடுத்தாலே வெற்றிதான் என பேசப்பட்டது. ஆனால், உடனிருந்த சிலர் போக்கால் நிர்வாகம் நொடிந்து போன நிலையில். தொடங்கிய இடத்திற்கே வந்து நின்றார் ராஜ்கிரண்.

ஆனாலும் எப்போதும் உண்மையை பேச முற்படும் ராஜ்கிரண் முதலில் பணியாற்றிய முதலாளிகளே, மீண்டும் உதவி செய்கிறார்கள். இந்த முறை விநியோகம் இல்லை, படத்தைத் தயாரிக்க நினைக்கிறார். ஏசியன் காதர் ராஜ்கிரணாக அறிமுகம் ஆகிறார். ஏசியன் பிக்சர்ஸ் நிறுவனம், ரெட் சன் ஆர்ட் நிறுவனமாக உயிர்பெற்றது. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தானே தயாரித்து, ஹீரோவாகவும் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இவர் மட்டுமல்ல, ஆல் டைம் காமெடி கிங்காக இருக்கும் வடிவேலுவை இந்தப் படத்தில் அறிமுகம் செய்ததும் இவர் தான்.இது குறித்து வந்த சர்ச்சை குறித்து கேட்ட போது’ இப்ப அது வேணாம்’ என்று ஒதுக்கி தள்ளினார்

சமூகம் சார்ந்த எதாவது ஒரு கருத்தை தன்னுடைய படத்தின் மூலம் சொல்லிவிட வேண்டும் என்று நினைப்பார் ராஜ்கிரண். இது குறித்து நம் கட்டிங் கண்ணையா விடம், “இது பத்தி நிறைய பேர்கிட்டே சொன்னதுதான்.. இந்த’சினிமாங்கிறது ஒரு வெகுஜன ஊடகம். இங்கே என்ன சொன்னாலும் அது மிகச் சுலபமா மக்கள்கிட்ட போயிடும். அப்படியான துறையில் இறைவன் என்னையும் அங்கம் வகிக்க பணித்துள்ளான். அதனால சமூகச் சீர்கேட்டுக்குக் காரணமான விஷயங்களைச் சொல்ற படங்கள் வேண்டாம்னு நிராகரிச்சுடுவேன். பண்ற ஒவ்வொரு படத்துலயும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கணும் நினைச்சேன்.. இப்பவும் நினைக்கிறேன். தவிர, இதுவும் எப்பவோ சொன்னதுதான் – நான் செய்யறது கலைச்சேவை, லொட்டு லொசுக்குனு எல்லாம் சொல்ல மாட்டேன். இது பக்கா வியாபாரம். பணம் போட்டு உழைக்கிற மற்ற வியாபாரங்களைப்போல் இதுவும் ஒரு வணிகம். ஆனாலும் இங்கே நான் பூ ,கற்பூரம்; சந்தனம், ஊதுவத்தி மட்டுமில்லாம காய்கறி., பழங்கள் எல்லாம் சேல்ஸ் பண்ணுவேன். ஆனா, ஒரு போதும் சாராயம் விக்க மாட்டேன்… செம்மரம் கடத்த மாட்டேன். அது எனக்கு வேண்டாம் . இதை மன்சில் வச்சிதான் குடி ஒருவனின் வாழ்க்கையை எப்படியெல்லாம் சீரழிக்கும் என்பதை சொல்லும் படமா என் ராசாவின் மனசிலே உருவாச்சு.” அப்படீன்னார்

இப்படி ஏகப்பட்ட எனர்ஜிட்டிக் சிந்தனையும் வாழ்க்கையும் கொண்ட ராஜ்கிரணுக்கு ஜஸ்ட் நம்ம ஆந்தை சினிமா அப்டேட் குழு சார்பில் வாழ்த்து சொல்ல கால் பண்ணியதால் கிடைத்த தகவல்களை அரசியல் களத்தில் இருக்கும் நம் கண்ணையா லேட்டாக அனுப்பியதை இன்றே -இப்போது பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்..

Leave A Reply

Your email address will not be published.