காதம்பரி (பட விமர்சனம்)

2

படம்: காதம்பரி
நடிப்பு: அருள், காஷிமா ரஃபி, அகிலா நாராயணன், சர்ஜுன், நின்மி, பூஷிதா மகாராஜன், முருகானந்தம்
இசை: ப்ரித்வி
ஒளிப்பதிவு: விடிகே.உதயன்
தயாரிப்பு: அரோமா ஸ்டுடியோஸ் அருள்
எழுத்து இயக்கம் : அருள்

காதலி காஷிமா மற்றும் நண்பர்களுடன் வெளியூர் செல்கிறார் ஹீரோ அருள். அபர்ந்த  மலைப்பாதையில் செல்லும்போது  சிறுவிபத்தில் சிக்குகிறது கார். மேற்கொண்டு செல்ல முடியாமல் திணறும் அவர்கள் அங்கிருக்கும் பங்களா ஒன்றில் தங்குகின்றனர். அங்குள்ள  மரப்பெட்டி அறையிலிருந்து கதறல் சத்தம் கேட்க  அதைக் கேட்டு அங்கு செல்லும் ஹீரோவும் தோழியும் சிறுமியை மீட்டு வெளியே அழைத்து வருகின்றனர்.   அந்த சிறுமி 40 வருடமாக அந்த அறையில் அடைப்பட்டு கிடப்பதாக சொல்லி அதிர்ச்சி தருகிறார். பிறகுதான் சிறுமியின் உடம்பில் சூனியகாரி ஆவி புகுந்திருப்பது தெரிகிறது. அவள் மற்ற எல்லோரையும் சாகடிக்க முயல்கிறாள். அதில் யாரெல்லாம் பிழைக்கிறார்கள் என்பதற்கு படபடப்புடன் பதில் சொல்கிறது காதம்பரி.

ஹீரோவாக நடித்திருப்பதுடன் எழுதி இயக்கி படத்தையும் தயாரித்து தியேட்டரில் ரிலீஸும் செய்திருக்கிறார் அருள். பொறுப்புக்களை அதிகம் தலையில் சுமந்திருக்கிறார். சிறிய பட்ஜெட் படமென்றாலும் வழக்கமான பேய் கதையாக இல்லாமல் சூனியகாரி கதையாக அமைத்திருப்பது புதுசு.

ஹீரோ  இயக்குனர், தயாரிப்பாளர் என பொறுப்பு ஏற்றிருந்தாலும் தனது பாத்திரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல் மற்ற பாத்திரங்களுக்கும் சம்பங்கு வழங்கி நடிக்க வைத்திருக்கிறார் அருள்.

டாக்குமெண்ட்ரி எடுக்கிறேன் என்று செல்போனும் கையுமாக அலையும் நின்மி கலகலப்பாக பேசி மவுனத்தை கலைக்கிறார். அவர் உடம்பில் சூனியகாரி ஆவி புகுந்தவுடன்  கலகலப்பு மாறி அலறல், மிரட்டல் என வித்தியாசமாக முகபாவத்தை வெளிப்படுத்துகிறார்.

சிறுமியின் உடம்பில் பேய் இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு சில காட்சிகள் முடிந்தபின் சொன்னாலும் அது சூனியகாரியின் ஆவி என்று சொல்லி கதையில் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கிறார்கள். சிறுமி பூஷிதா அப்பவித்தனம். அடாவடித்தனம் என மாறுபபட்ட நடிப்பை அளித்திருக்கிறார்.

ஹீரோவின் நண்பர் உடம்பிற்குள் ஆவி புகுந்துகொண்டதும் விக்டர் பாத்திரத்தில் நடித்திருக்கும் சர்ஜுன் குரலை மாற்றிப்பேசி நேக்காக அகிலாவின் உடம்பிற்குள் புகுந்ததும், அகிலா வில்லி ரேஞ்சுக்கு மாறிவிடுகிறார். அண்ணன் உடம்பையே பலி கேட்டு தங்கை அகிலா உடம்பிலிருக்கும் ஆவி நேருக்கு நேர் மோதுவது விறுவிறுப்பு.

சூனியகாரி, ஆவி என்று கதை திகில் பாதையில் சென்றாலும் ஹீரோ அருளுக்கும், காஷிமா ரஃபிக்குள்ளும் ஒரு காதல் பிணைப்பை ஏற்படுத்தி கடைசியில் காதலா? ஆவியா? என்று புதிர்போட்டு சரியான விடை தருகிறார் இயக்குனர்.

வாய்பேசாத தாத்தாவாக வரும் மகாராஜன் கதாப்பாத்திரம் திடீரென்று சுடப்பட்டவுடன் கதையின் போக்கு வேறு பக்கம் திசை திரும்புகிறது. போலீஸ் கதாப்பாத்திரம் எதிர்பாராமல் வந்தாலும் அராஜகம் செய்யாமல் மற்றவர்களை காப்பாற்ற போராடுவது ஆறுதல். காமெடிக்கும், காதல் டூயட்டுக்கும் படத்தில் இடமில்லாததால் கதையின்போக்கு திசை மாறாமல் பயணிக்கிறது.

விடிகே உதயன் ஒளிப்பதிவு ஒ கே. ப்ரித்வி இசை ஓவர் லோடு ஆகாமல் அளவோடு ஒலிக்கிறது.

காதம்பரி- திகிலூட்டுவாள்.

 

Leave A Reply

Your email address will not be published.