திரையுலகின் பொக்கிஷம் பிலிம்நியூஸ் ஆனந்தன் நினைவு நாள்

0

புரட்சி தலைவர் எம் ஜி ஆர் 1958ம் ஆண்டு  நாடோடி மன்னன் படத்தை தயாரித்துக் கொண்டிருந்த நேரம். அவரது ஆபீஸ் மேனேஜர் ஆர்.எம்.வீரப்பன் மேஜையில் அப்படத்தின் ஸ்டில்கள் இருப்பதைப் பார்த்தார் ஆனந்தன். அப்போதெல்லாம் பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது வழக்கம். அந்த நேரத்தில்  “ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா” என்று கேட்டார் ஆனந்தன்.

“பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், யார் கொடுத்தால் என்ன நீங்களே கொடுங்களேன்” என்ற கூற . அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளுக்கும் எடுத்துச் சென்று கொடுத்தார். ஸ்டில்கள் எல்லா பத்திரகிகளில் பிரசுரமாகின. இதற்காக  பிலிம் நீயூஸ் ஆனந்தனை தனிப்பட்ட முறையில் அழைத்து எம்.ஜி.ஆர். பாராட்டினார். இந்த நிகழ்வுதான் தமிழ் சினிமாவில் பி.ஆர்.ஓ. என்ற தொழில் பிரிவு உதயமாகக் காரணம். தமிழ் சினிமாவின் முதல் பத்திரிகை தொடர்பாளரும், ‘தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம்’ என்று போற்றப்படுகிறார்.

‘நாடோடி மன்னன்’ தொடங்கி 1,500 படங்களுக்கு மேல் பி.ஆர்.ஓ. எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பிரஸ் ரிலேசன் பொறுப்பாளராக (பிஆர்ஓ) பணியாற்றிவர் ஆனந்தன். தென்னிந்திய திரைப்பட வர்த்தக கூட்டமைப்பின் பத்திரிகையில் பணியாற்றிய போது, திரைப்பட ஸ்டுடியோக்களை வலம் வந்து, குறுகிய காலத்தில் நிறைய திரைப்படங்கள் குறித்த தகவல்கள், புகைப்படங்களை திரட்டினார். தனது அர்ப்பணிப்பு மிக்க முயற்சியால் 6,000 படங்கள் பற்றிய அரிய தகவல்களை திரட்டியுள்ளார்.அரிய புகைப் படங் களைத் திரட்டி இவர் நடத்திய ஒரு பிரம்மாண்ட கண்காட்சி, திரையுலகின் வரவாற்றைஎடுத்துச் சொன்னதுடன்  நற்பெயரையும், பெருமையும் பெற்றுத் தந்தது.

கலா பீடம், கலைச்செல்வம், கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் பிலிம் நியூஸ் ஆனந்தன். 2002-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் அதிமுக தலைமையிலான அரசு, இவர் சேகரித்து வைத்திருந்த விவரங்கள், புத்தகங்கள், புகைப்படங்கள் போன்ற சேகரிப்புகளை அரசு வாங்கி பாதுகாத்திட ரூ.10 லட்சம் வழங்கியது.  மேலும், அவர் எழுதிய ‘சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு’ எனும் நூலை வெளியிடுவதற்கு நிதியுதவி வழங்கியது.

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், முந்தைய ஆண்டில் வெளியான படங்களின் விவரங்களை ஒரு புத்தக வடிவில் வெளியிட்டு சினிமா செய்தியாளர்களிடம் அன்பளிப்பாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தற்போது இதே பணியை பிலிம் நியூஸ் ஆனந்தன் மகன் டைமண்ட்பாபு செய்து வருகிறார்

தமிழ்த் திரைப்படத் துறை தொடர்பான வரலாற்றை அறிந்துகொள்ள முற்படுபவர்களுக்கு பிலிம்நியூஸ் ஆனந்தன் பதிவு செய்த ஆவணங்கள், தகவல்கள்தான் ஆதாரமாக விளங்கும் என்ற அளவுக்கு இவரது அர்ப்பணிப்பு மிக்க பணி வியக்கத்தக்கது. ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனின் மறைவு இன்றளவும் தமிழ்த் திரையுலகுக்கு பேரிழப்பு. அவரது புகழ் தமிழ் திரையுலகம் உள்ள அளவு நீடித்து நிற்கும். அவரது 5ம் ஆண்டு நினைவு நாளான இன்று அவர் நினைவை போற்றுவோம்.

Leave A Reply

Your email address will not be published.