விசு – காலமான தினமின்று

2

1945ஆம் ஆண்டு பிறந்த விசுவின் முழுபெயர் M.R விஸ்வநாதன். இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம் 1986-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருதை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘விசு’ இடத்தில் வைத்துப் பார்க்க இன்னொருவர் இன்னும் பிறக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ரசிகமனம் அப்படித்தான் சொல்கிறது. மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம், குடும்பம் ஒரு கதம்பம், தில்லு முல்லு (திரைக்கதை மட்டும்), திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி, டெளரி கல்யாணம், வரவு நல்ல உறவு என்று எத்தனை குடும்பப் பாங்கான திரைப்படங்கள்.

நண்பர் ஒருவர் முன்னெப்போதோ வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அலுவலக வேலை காரணமாக ஐந்தாறு மாதங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சீனாவில் தங்கியிருக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு. அப்போதெல்லாம் பணி முடிந்து அறைக்கு வந்தால் ஹோவென்ற தனிமை உணர்வை விரட்ட அவருக்குத் துணை இருந்தது விசுவின் திரைப்படங்கள் மாத்திரமே என்றார். இதென்னடா புதுக்கதையாக இருக்கிறதே என்று கேட்டால், ஆமாம், எனக்கு தனிமையில் குடும்பத்தின் அருகாமையை உணர விசுவின் படங்களே ஆறுதலாக இருந்தன. என்றார் அவர்.

இப்படி குடும்பத்தை விட்டு விலகி தூரதேசங்களில் தங்க நேர்ந்து விட்டவர்களுக்கு ஒருகாலத்தில் மட்டுமல்ல இன்றும் கூட ஆறுதல் அளித்துக் கொண்டு தான் இருக்கின்றன விசுவின் திரைப்படங்கள்.

அது போகட்டும்.. இன்று மறைந்து விட்ட விசு நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்ட விஷயத்தை நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கிறார்.

அதில் தில்லு முல்லு திரைப்பட அனுபவம் பற்றிய கேள்விக்கு விசுவின் பதில்;

தில்லு முல்லு படத்துக்கான திரைக்கதையை நான் பயந்து கொண்டே தான் எழுதினேன். ஏன்னா, படத்துல இருக்கற ரஜினி வேற, நான் நேர்ல, நிஜத்துல பார்க்கற ரஜினி வேற. அதனால எனக்கு அந்தப் படம் பயமா இருந்துச்சு. அதுல ரஜினிய நடிக்க வைக்கிறது சரியா, இல்லையான்னு சொல்லக்கூடிய உரிமை கூட எனக்கு அப்போ இல்லை. நான் அந்த டிஷ்கசன்ல சும்மா கவனிச்சிட்டு இருக்கேன். அவ்ளோ தான். அந்தப் படத்தைப் பொருத்தவரை ரஜினி தான் சரிங்கிற முடிவை எடுத்தவர் தி ஒன் அண்ட் ஒன்லி பாலசந்தர். எப்பேர்ப்பட்ட டைரக்டர்! அவர் சொல்லிட்டார். அதெல்லாம் சரியா வரும்டான்னு. அவ்ளோ தான். படம் ஹிட்.

அந்தப் படம் வெளிவந்தப்புறம் பலருக்கு ஹைக் இருந்தது நிஜம். ரஜினி, பாலசந்தர், நான் எங்க எல்லாரையும் தாண்டி அந்தப் படத்தால பலபடி மேல போனார் நடிகர் தேங்காய் சீனிவாசன். அவருக்கு இந்தப் படத்தால நல்ல ஹைக் கிடைச்சுது. என்னா மாதிரியான ஆர்டிஸ்ட் எல்லாம் அந்தப் படத்துல நடிச்சாங்க! செளகார் ஜானகி அம்மா. அவங்க அந்த பாத்ரூம் குழாயைப் பிடிச்சிட்டு மேல ஏறுவாங்களே, அது ஸ்க்ரீன்ல வந்துச்சே, எல்லாரும் பார்த்திருப்பாங்க. அதை அவங்க நிஜமாவே ஸ்பாட்ல செஞ்சாங்கன்னா பார்த்துக்கோங்க. என்னா மாதிரியான நடிப்பு அது!

அப்புறம் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ விசு என்ற பெயரோடு, ‘அரட்டை அரங்கம்’ விசு என்ற பெயரும் இவருக்கு வந்துவிட்டது. சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘அரட்டை அரங்கம்’ நிகழ்ச்சி வழியே விசு க்களிடம் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து 13 ஆண்டுகள் அந்த நிகழ்ச்சியை வழங்கியவர், பின்னர் ஜெயா டி.வி-யில் ‘மக்கள் அரங்கம்’ என்ற பெயரில் ஆறரை ஆண்டுகள் நடத்தியிருக்கிறார். ஒரு மனிதர் கிட்டத்தட்ட 20 ஆண்டு காலம் மக்களையும், மக்கள் சார்ந்தப் பிரச்சினை களையும் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவது என்பது பெரிய வேலை. அதை ஈடுபாட்டோடு செய்தது, படைப்பாளி விசுவுக்கு சமூகத்தின் மேல் உள்ள அக்கறையையே வெளிப்படுத்தியது.

இடையில் ’கொஞ்சம் யோசிப்போம்’ என்ற பெயரில் ஒரு நாடகம் போட்டார். அது இன்றைக்கு நிலவும் சமூகம், அரசியல் பிரச்சினைகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட நாடகம். சுறுசுறுப்புக்குப் பெயர் போன விசுவால் சும்மாவே இருக்க முடியாது.

அவர் நடத்திய ‘அரட்டை அரங்கம்’ நிகழ்ச்சி மூலம் வெளிச்சத்துக்கு வந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சாய்ராம் பொறியியல் கல்லூரியில் சேர்த்து படிக்கும் வாய்ப்பை பெற்று, இன்றைக்கு நல்ல வேலைகளில் இருக்கிறார்கள்.

விசுவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா என்ற பெண்ணை, இன்றைக்கு தேசிய அளவில் கவனத்தை பெற்றிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அரட்டை அரங்கத்தில் கலந்துகொண்ட திருப்பூரைச் சேர்ந்த விசாலாட்சி என்ற பெண் இன்றைக்கு அந்த ஊரின் மேயராக இருக்கிறார்.

ஏவி.எம் நிறுவனத்தின் ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் சிறந்த முறையில் கதை, திரைக்கதை, வசனம் எழுதியதற் காக விசு அவர்களுக்கு பேசிய சம் பளத்தைவிட அதிகமாக பணம் கொடுத் தார், ஏவி.எம்.சரவணன் சார். மகிழ்ச்சி யோடு பெற்றுக்கொண்ட விசு, ‘‘ஏவி.எம் நிறுவனத்தில் ஒரு படம் இயக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்’’ என்றார்.

அதற்கு சரவணன் சார், ‘‘நீங்க இப்போது ஒரே நேரத்தில் மூணு, நாலு படங்கள் பண்றீங்க. நம்ம நிறுவனத்தோட படத்துல மட்டும் கவனம் செலுத்துற சூழல் அமையும்போது சொல்லுங்க’’ என்றார்.

அதே போல அந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு விசு அவர்கள், சரவணன் சாரிடம், ‘‘இப்போது தயாராக இருக்கிறேன். கதையும் இருக்கிறது’’ என்றார். அந்தக் கதையை சரவணன் சார் கேட்டார்கள். அவருக்கு பிடித்து விட்டது.

அதுதான் 1986ம் வருசம் ஜூலை 18ம் தேதி, ரிலீஸான ‘சம்சாரம் அது மின்சாரம்’. அந்த படம் தயாரானது குறித்த அனுபவத்தை விவரிச்சு விசு பேசறப்போ, “’சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் கதையைச் சொன்னேன். ஏவிஎம்.சரவணனும் பாலசுப்ரமணியமும் ஓகே சொன்னார்கள். இந்தப் படத்துக்கு பட்ஜெட் பதிமூணரை லட்சம் ரூபாய். அவுட்டோர், மற்றச் செலவுகள் என்றெல்லாம் பார்த்தால், மொத்தம் 18 லட்சம் ரூபாய்க்குள் செலவானது.

ஏவிஎம்மில், வீடு செட் போட்டுக் கொடுத்தார்கள். மொத்தம் 41 நாட்களில் மொத்தப் படத்தையும் எடுத்து முடித்துவிட்டோம். அதற்கு நடிகர் நடிகைகளின் ஒத்துழைப்பும் மிக முக்கியக் காரணம். படத்தில், இந்தந்த கேரக்டருக்கு இவர்கள்தான் நடிகர் நடிகைகள் என்று ஏற்கெனவே திட்டமிட்டிருந்தேன். அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அப்போதுதான் ஒருநாள், ஏவிஎம். சரவணன் சார், என்னை அழைத்தார். ‘படம் நல்லாருக்கு. ஆனா கொஞ்சம் காமெடி குறைச்சலா ‘ட்ரை’யா இருக்கு. ஒண்ணு செய்யலாமா’ன்னு கேட்டார். சொல்லுங்க சார்னு சொன்னேன்.

‘அந்த வீட்ல ஒரு வேலைக்காரக் கேரக்டரை கொண்டுவாங்க. அதுல மனோரமா ஆச்சி நடிச்சா, படத்தையும் காமெடியாக்கிருவாங்க’ன்னு சொன்னார். அவர் சொன்னதுல எனக்கும் உடன்பாடுதான். அப்புறம், கதைல, மனோரமா ஆச்சி கேரக்டரை உள்ளே செருகிட்டு, கொஞ்சம் கொஞ்சமா நான் முதல்ல பண்ணின காட்சிகளை உருவி எடுத்துட்டேன். மனோரமாவும் தன் நடிப்பால அந்தக் கேரக்டரே கொண்டாட வைச்சாங்க.அந்தக் காலத்துல, தயாரிப்பாளர்கள் இயக்குநர்களை மதிச்சாங்க. அவங்களோட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. அந்தக் கதைக்குள்ளே ‘இன்வால்வ்’ ஆனாங்க. இப்போ, அப்படியெல்லாம் இல்லை.

இப்படி எல்லாம் விசு தெரிவிச்சிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.