இந்த ஆண்டில் நல்ல விஷயம் நடக்கும் என்று காத்திருக்கிறேன் – விஷ்ணு விஷால்

2

நடிகர் விஷ்ணு விஷால் சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியாளர்களை சந்தித்தார். அதன்போது மனம் திறந்து அவர் பேசியதாவது…

சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. முதலில் ‘காடன்’ வெளியாகிறது. அதைத்தொடர்ந்து என்னுடைய தயாரிப்பில் ‘எஃப் ஐ ஆர்’  வெளியாகவிருக்கிறது. ‘மோகன்தாஸ்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறேன். ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன். ‘ஜீவி’ படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். வேறு சில படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அதற்கடுத்து மீண்டும் சொந்த பட நிறுவனம் சார்பாக புதிய படம் தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் தன்னம்பிக்கையுடன் பணியாற்ற காத்திருக்கிறேன்.

இந்த ஆண்டிலேயே பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன். திருமண தேதி இன்னும் தீர்மானிக்கவில்லை. முடிவான உடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.

826 நாட்களுக்குப் பிறகு நான் நடித்த திரைப்படம் ஒன்று திரையில் வெளியாகிறது. இடைப்பட்ட காலத்தில் எனக்கு ஆதரவளித்த ஊடகவியலாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘ராட்சசன்’ படத்தின் படப்பிடிப்பின்போது  என்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட விவாகரத்து தருணங்களின் போதும் எனக்குப் பக்கபலமாக இருந்து சொந்த வாழ்க்கைக்கு மதிப்பளித்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சினிமா கடினமான காலகட்டத்தில் இருக்கும் பொழுது உங்களை போன்ற நடிகர்கள் சம்பளத்தை குறைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்..?

நான் ‘ராட்சசன்’ படத்தில் நடிக்கும் பொழுது 60 லட்ச ரூபாய் சம்பளத்தை குறைத்துக்கொண்டேன். ஒரு தயாரிப்பாளராக இருப்பதால் மற்றொரு தயாரிப்பாளரின் வலியை உணர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன். ஆனால் இதை நான் யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க இயலாது. படப்பிடிப்பின்போது படத்தின் தரத்திற்காக படப்பிடிப்பு நாட்கள் அதிகரிக்கப்படும் பொழுது தயாரிப்பாளர் படும் வேதனையை நான் நேரில் கண்டிருக்கிறேன். இதன் காரணமாக ‘ராட்சசன்’ படம் வெற்றி பெறும் என்ற உறுதியாக நம்பினேன். அதற்காகவும் நான் என்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டேன். அடிப்படையில் நான் ஒரு எம்பிஏ பட்டதாரி என்பதால் என்னுடைய வணிக எல்லை எது என்பது குறித்தும், திரை வணிகம் குறித்தும் எனக்கு ஓரளவுத் தெரியும்.

திரை உலகை பொறுத்தவரை நீச்சல் தெரியாத ஒருவரை கடலில் தூக்கி வீசியது போன்ற நிலையில் தான் என்னுடைய தொடக்க காலகட்ட பயணம் இருந்தது. ‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தான், என்னாலும் இனிமேல் துணிந்து நீச்சலடித்து வெற்றிபெற முடியும் என்ற தன்னம்பிக்கை பிறந்தது.

காடன் அனுபவம்?

எல்லா எமோஷன்களையும் கொண்ட கேரக்டர் அது. இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். யானையுடன் பணியாற்றியது மறக்க முடியாத சம்பவம். இயக்குநர் பிரபுசாலமனுடன் பணியாற்றியதும் மறக்க முடியாதவை தான். அவருடைய ஸ்டைலே தனிதான். பார்வையாளர்களுக்கு பயனுள்ள தகவலை வழங்கி சமூகத்தின் மீதான அக்கறையை மேம்படுத்தும் பொறுப்புணர்வு மிக்கவர்.

Leave A Reply

Your email address will not be published.