காடன் (பட விமர்சனம்)

3

படம்: காடன்
நடிப்பு: விஷ்ணு விஷால். ராணா, புல்கிட் சாம்ராட், ஜோயா ஹுசைன், ஸ்ரேயா பில்கன்கர்,
இசை: ஷாந்தனு மொய்த்ரா
ஒளிப்பதிவு: ஏ.ஆர்.அசோக்குமார்
தயாரிப்பு: ஈராஸ் இண்டர்நேஷனல்
இயக்கம்: பிரபு சாலமன்

காலம்காலமாக காட்டுப் பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை தங்கள் ஆதிக்கத்தின் வைத்திருந்த ராணாவின் ஜமீன் மூதாதையர்கள் பிறகு அதை மிருகங்களின் இருப்பிடமாக விட்டுச்செல்கின்றனர். காட்டுப் பகுதியிலே யே வளர்ந்து மிருகங்களின் நண்பாராக இருக்கிறார் ராணா. அந்த காட்டில் யானைகளின் வழித்தடத்தை அழித்து நவீன குடியிருப்பு பகுதியை உருவாக முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்குகிறார் மந்திரி ஒருவர். யானைகள் குடியிருப்பு பகுதியில் வராமலிருப்பதற்காக 6 கி மீட்டர் தூரத்துக்கு காம்பவுண்டு சுவர் கட்டப்படுகிறது. யானைகள் வழித்தடத்தை அழித்து காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டதால்  யானைகள் பரிதவிக்கின்றன. காம்பவுண்டை சுவற்றை அகற்றி மீண்டும் யானைகளின் வாழ்விடத்தை மீட்டு தர போராடுகிறார் ராணா. ஆனால் பிரதம மந்திரையை வைத்து குடியிருப்பு பகுதியை திறக்க மந்திரி ஏற்பாடு செய்கிறார். ராணாவின் போராட்டம் மக்கள் போராட்டமாகிறது. அதன் முடிவு என்னவாகிறது என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

பாகுபலி படத்தில் ஆஜானபாகு தோற்றத்தில் நடித்த ராணா இப்படத்தில் காட்டில் வாழும் ஜமீன் வாரிசாக கிட்டதட்ட காட்டு மனிதாக மாறி இருக்கிறார். மிருகங்களுடன் வாழ்ந்தாலும் மொழி பிரச்னை இல்லாமல் தமிழ். ஆங்கிலம் எல்லாம் பேசுகிறார்.

தலையை இப்படியும் அப்படியும் காகம்போல் அசைத்துப் பார்த்து உடல்மொழியை வித்தியாசமாக மாற்றி கதாபாத்திரத்துக்கு புதிய வடிவம் தந்திருக்கிறார் ராணா. விலங்குகளுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் எல்லோருமே ராணாவின் கோபத்துக்குள்ளாகின்றனர். மக்களை தாக்கும் போலீஸாரை தூக்கி வீசி பந்தாடுவது, கோர்ட்டில் நீதிபதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது என  தடாலடி செய்து பரபரப்பை ஏற்படுத்துகிறார்.

சிறையில் அடைக்கப்படும் ராணாவுக்கு மின்சார ஷாக் கொடுத்து அவரை சித்ரவதை செய்து ரசிக்கும் மந்திரியின் கொடூர புத்தி வில்லத்தனத்தின் உச்சமாக இருக்கிறது.

தங்களது கூட்டத்தை சேர்ந்த கண்ணாம்மா என்ற யானையை ராணா சுட்டுக்கொன்றதாக எண்ணி அவரை யானைகள் கூட்டம் துரத்துவது ஷாக்.

யானைப்பாகனாக விஷ்ணுவிஷால் நடித்திருக்கிறார். யானையுடன் நெருக்கமாக பழகினால் மட்டுமே அவர் இந்தளவுக்கு நெருக்கமாக யானைகளின் பக்கம் செல்ல முடியும் என்பது அவரது இயல்பான நடிப்பு உணர்த்துகிறது. ஜோயாவை ஒருதலையாக காதலிப்பதும் பிறகு தனது யானை விபத்தில் இறப்பதை கண்டு கதறுவதுமாக தன்னுடைய இருப்பிடத்தை தக்கவைத்துக்கொள்கிறார் விஷ்ணு விஷால்.

பிரபு சாலமன் இப்படியொரு படத்தை எடுக்க எண்ணியது அவர் இயக்கிய கும்கி படத்தின் மற்றொரு பரிமாணம் என்றே சொல்லாம். அதில் இளம் ஜோடியின் காதலை மையப்படுத்தி இருந்தார் இதில் முழுக்க யானைகளின் வாழ்வாதாரத்தையும் காடுகளின் அவசியத்தையும் மையப்பட்டுத்தி இருக்கிறார்.

ஏ.ஆர் அசோக்குமார் காட்சிகளை தெளிவாகவும் அழகாகவும் படமாக்கி இருக்கிறார்.  .ஷாந்தனு மொய்த்ரா இசை காட்சிகளை ஓவர் டேக் செய்யாமல் பயணிக்கிறது.  ரசூல் பூக்குட்டி நுணுக்காமான ஒலிப்பதிவு பலம்.

காடன் – யானைகளின் காவலன்

 

Leave A Reply

Your email address will not be published.