மீனா குமாரி காலமான நாளின்று

0

நம் நாட்டின் சினிமா தொடங்கிய காலகட்டத்தில் ரசிகர்களையும், படைப்பாளிகளையும் ஒரு சேர தன் வசப்படுத்தியிருந்த `மகா நடிகை’ என்றால் இந்த மீனா குமாரிதான்

முதன் முதலில் ஃபிலிம் ஃபேர் விருது பெற்ற நடிகை என்ற பெருமைக்குரியவர் பழம்பெரும் நடிகை மீனா குமாரி. இந்திய சினிமாவின் வரலாறு இவரது பங்களிப்பைப் பற்றி எழுதாமல் நிறைவு செய்ய முடியாது. நடிகை, பாடலாசிரியர், பாடகி என பன்முகத் திறமை கொண்டவர் மீனா குமாரி. அவரது வாழ்க்கை துயரமானது. துயரங்களின் நாயகி என்றே அழைக்கப்பட்ட மீனா குமாரி வறுமை காரணமாக ஆறு வயதிலேயே திரைத்துறைக்குள் நுழைந்தவர்

30 வருடங்களுக்கும் மேலாக 90 திரைப்படங்கள் நடித்தவர். ஒரே ஆண்டில் மூன்று ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்குத் தேர்வான ஒரே நடிகை என்ற வரலாற்றுச் சாதனையும் படைத்தவர்.

தனிப்பட்ட வாழ்க்கையில், அப்பாவின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம், அந்தத் திருமண வாழ்க்கையின் வலிகள், அந்த வலியை நீக்க மருந்தாக நாடிய மது, அந்தப் போதை பழக்கமே உடலை உருக்கி, 38 வயதிலேயே, தன் சாதனைகளை மட்டுமே ரசிகர்களின் நினைவுகளில் வைத்துவிட்டுச் சென்றவர் மீனா குமாரி.

1933-ம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியாவின் கீழிருந்த பாம்பாயில் பிறந்த இவரின் நிஜப்பெயர், மெஹஜபின் பானு ( Mahjabeen Bano). இந்தித் திரைப்பட இயக்குநர் விஜய் பட் இயக்கிய, `லேதர்ஃபேஸ்’ என்ற திரைப்படத்தில் ஆறு வயதில் நடிக்கத் தொடங்கினார். அதன்பிறகு, தன் நடிப்பு மற்றும் குரல் வளத்தால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். உருது மொழியில் கவிதைகள் எழுதுவதிலும் மீனா குமாரிக்கு ஆர்வம். அவர் இறப்புக்குப் பிறகு, அவரின் இரண்டு கவிதை தொகுப்பு புத்தகங்களைப் பிரபல பாடலாசிரியர் குல்சார் வெளியிட்டார்.

தன் நிஜ வாழ்க்கையில் பெரும்பாலும் கண்ணீர், தனிமை, ஏமாற்றம், வலிகளையே சந்தித்தவர் மீனா குமாரி. அவர் நடித்த படங்களின் கதாபாத்திரங்களும் அப்படியே இருந்தன. தேசிய ஊடகங்கள் பலவும் இவர் வேதனைப்படுவதற்காகவே பிறந்திருக்கிறாரா என்பன போன்ற விவாதங்களை நடத்தியதுண்டு. ஆனால், கலைத்துறையில் இவரின் திறமையை மிஞ்ச ஆளே இல்லாமல் இருந்தது. மீனா குமாரியின் குரல், பொக்கிஷமான ஒன்றாகவே கருதப்பட்டது. இவரின் காலகட்டத்துக்கு நடிகையான மதுபாலா, “மிகவும் வித்தியாசமான கவர்ச்சிகரமான குரல்” என்று மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.

`சாஹிப் பிபி அவுர் குலாம்’ (Sahib Bibi Aur Ghulam), `பகீஸாஹ்’ (Pakeezah), `பாய்ஜு பவ்ரா’ (Baiju Bawra ), யஹுதி (Yahudi), `பஹு பேகம்’ (Bahu Begum) எனப் பல சூப்பர் ஹிட் படங்களில் இவரின் கதாபாத்திரம் பரவலாகப் பேசப்பட்டது. 1963-ம் ஆண்டில், `சாஹிப் பிபி அவுர் குலாம்’ படத்தின் `சொட்டி பாஹ’ கதாபாத்திரத்துக்கும், `ஆர்த்தி’ படத்தின் ஆர்த்தி குப்தா கதாபாத்திரத்துக்கும், `மைன் சுப் ரஹுங்கி’ படத்தின் காயத்ரி என்ற கதாபாத்திரத்துக்கும் என ஒரே ஆண்டில் மூன்று ஃபிலிம்ஃபேர் விருதுக்குத் தேர்வானார். ஒரே ஆண்டில் மூன்று திரைப்படங்களுக்குத் தேர்வான ஒரே நடிகை என்ற வரலாற்றைப் படைந்தார் மீனா குமாரி.

இந்தி நடிகர் தர்மேந்தரா உட்பட சில இளம் நடிகர்களுடன் காதல் என்கிற செய்திகள், அவரை எப்போதுமே சுற்றித் திரியும். அதற்குக் காரணம், பல இளம் நடிகர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வழங்கி உதவினார். மீனா குமாரியின் அன்பைப் பலரும் பயன்படுத்திக்கொண்டனர் என்றும் கூறப்படுவதுண்டு.

1952-ம் ஆண்டு, கமல் அம்ரோஹி என்ற தன்னைவிட வயதில் மிக மூத்தவரான இந்தித் திரைப்பட இயக்குநரை மணந்தார் மீனா குமாரி. கணவனின் சந்தேக நோய், மீனா குமாரியின் வாழ்க்கையைக் குலைத்தது. அவரை அடித்தும் மிரட்டியும் துன்புறுத்தினார் கமல் அம்ரோஹி. சண்டையும் சச்சரவுமாக 10 வருடங்கள் கழிந்த திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டார் மீனா குமாரி. இந்த மன உளைச்சல் காரணமாக, குடிக்க ஆரம்பித்து, அதற்கு அடிமையானார். 1968-ம் ஆண்டு, கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றியது. 4 வருட போராட்டத்துக்குப் பிறகு, 1972 இதே மார்ச் 31 ம் தேதி மரணமடைந்தார் இந்த `ட்ராஜிடி க்யூன்’! (துயரங்களின் ராணி)

Leave A Reply

Your email address will not be published.