சுல்தான் (பட விமர்சனம்)

4

படம்: சுல்தான்
நடிப்பு: கார்த்தி, ராஷ்மிகா மந்தன்னா (அறிமுகம்), நெப்போலியன், லால், யோகிபாபு, சிங்கம்புலி, பொன்வண்ணன், மாரிமுத்து, பிரின்ஸ், சென்றாயன், மயில்சாமி, சதீஷ், ஹரீஸ் பெரடி, ராமசந்திர ராஜு, நவாப் ஷா, அர்ஜெய், மற்றும் சுல்தான் பாய்ஸ் 100 பேர்
பாடல் இசை: விவேக் மெர்வின்
பின்னணி இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: சத்யன் சூர்யன்
தயாரிப்பு: ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு
இயக்கம்: பாக்யராஜ் கண்ணன்

கொலை அடிதடி என்று 100 ரவுடிகளை  வைத்துக்கொண்டு கட்டபஞ்சாயத்து செய்கிறார் நெப்போலியன். அவரது மனைவி அபிராமி கர்ப்பமாக இருக்கிறார். எதிரிகள் சிலர் நெபோலியனை தீர்த்துக்கட்ட வீட்டுக்குள் நுழையும்போது  பிரசவ வலியில் அபிராமி துடிக்க எல்லோரும் எழுகின்றனர். ஒரு பக்கம் பிரசவம் நடக்க மறுபக்கம் வீட்டுக்குள் புகுந்தவர்களை நெப்போலியனின் ரவுடி கூட்டம் அடித்து விரட்டுகிறது. கலவரத்துக்கிடையில்  ஆண் குழந்தை பெற்றுகொடுத்து கண்ணை மூடுகிறார் அபிராமி. குழந்தைக்கு சுல்தான் என பெயரிடும் மாமன் லால் மற்றும் 100 ரவுடி பாய்ஸ் சேர்ந்து வளர்க்கின்றனர். தாயின் வயிற்றிலிருக்கும்போதே நல்ல பிள்ளையாக வளரவேண்டும் என்று போதனை கேட்டு சுல்தானாக வளரும் கார்த்தி  ரோபோ படிப்பை முடித்து பெரிய  தொழில் தொடங்க எண்ணுகிறார். வெளிநாடு செல்ல திட்டமிடுகிறார். இந்நிலையில்  சேலம் பகுதி கிராமத்திலிருந்து வரும்  விவசாயிகள் தங்கள் ஊரையும் விவசாயிகளையும் அழிக்கும் ரவுடியை  ஒழிக்க கோருகின்றனர். அதை ஏற்று சத்தியம் செய்கிறார் நெப்போலியன். இதற்கிடையில் நடக்கும் துப்பாக்கி சூட்டில் நெப்போலியன் காயம் அடைகிறார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடையும் கார்த்தி மனம் நொந்து ஊருக்கு செல்ல முடிவு செய்கிறார்.  இந்நிலையில் படுக்கையிலேயே மரணத்தை தழுவுகிறார் நெப்போலியன். தங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது போலீஸ்தான் என்பதை அறிந்து கமிஷனரை  சந்தித்து பேசுகிறார் கார்த்தி. ரவுடி கூட்டத்தை என் கவுன்ட்டரில் சுட்டுத்தள்ளுவேன் என கமிஷனர் எச்சரிக்க அவரிடம் பேசி  6 மாதம் டைம் வாங்கும் கார்த்தி 100 பேரையும் நல்லவர்களாக்குவதாக வாக்கு தருகிறார். இதற்கிடையில் நெப்பொலியன் செய்த சத்தியத்தை காப்பற்ற  ரவுடிகளுடன் சேலம் பகுதி கிராமத்துக்கு செல்ல முடிவு செய்கிறார் லால்.  கார்த்திக்கு தெரியாமல் காரியத்தை செய்ய எண்ணும்போது கார்த்தியும் அவர்களுடன் ஊருக்கு வருவதாக கூறுகிறார். 100 பேரை நல்லவர்களாக்க கார்த்தி எண்ணுகிறார். லாலின் ரவுடி கூட்டமோ மற்றொரு ரவுடிகூட்டத்தை அழிக்க எண்ணுகிறது. இவர்கள் கிராமத்துக்குள் வந்தததும் அங்கு நடக்கும் அதிரடி திருப்பங்கள் கடும் மோதலாக மாறுகிறது. இறுதியில் ஜெயிப்பது யார் என்பதற்கு விடை தருகிறது கிளைமாக்ஸ்.

கார்த்திக்கு இமேஜை பல மடங்கு உயர்த்தும் படமாக சுல்தான் உருவாகி இருக்கிறது.

கார்த்தி  சவுக்கை கையில் வைத்திருக்கும் போஸ்டர் ஒன்று  சில தினங்களுக்கு முன் நெட்டில் வைரலானது. அந்த காட்சிதான் படத்தில் கார்த்தியை ஆக்‌ஷன் களத்துக்குள் இறக்கும் பிள்ளையார் சுழி என்பது படம் பார்க்கும்போது புரிகிறது. நடுவீதியில் பெரியவரை கட்டிவைத்து கே ஜி எஃப் வில்லன் ராம்சந்திர ராஜு சவுக்கால் அடித்து பதறவிடும்போது அந்த சவுக்கை பிடித்து இழுத்து ராம்சந்திர ராஜுவை கார்த்தி திருப்பி வெளுக்கும் போது அனல் பறக்கிறது. இரும்பு ராடை எடுத்து ரவுடி, கூட்டத்தை அடித்து துவம்சம் செய்து மிரள வைக்கிறார் கார்த்தி.

ராஷ்மிகாவை பெண் பார்க்க வரும் யோகிபாபு பெண்ணை எனக்கு பிடிக்க வில்லை என்று கூற கார்த்தியோ ராஷ்மிகாவை தான் கட்டிக்கொள்ள தயாராக இருப்பதாக கூறுவது சுவராஸ்யம்.

கார்த்தியை காரணமில்லாமல் ராஷ்மிகா ஏற்க மறுத்து ஒதுங்குவதும் ஒரு கட்டத்தில் இந்த பூமியில் நெல் விதைத்து யார் பசுமையாக்குகிறானோ அவனைத்தான் மணப்பேன் என்று தனது முடிவை சொல்லி காட்சிக்கு வலு சேர்க்கிறார். கண்டதும் காதல்,  கொண்டதே கோலம் என்றில்லாமல் காதலுக்கும் ஒரு அர்த்தம் கற்பித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியதை காட்டுகிறது.

100 ரவுடிகளையும் நல்லவர்களாக அவர்களை விவசாயிகளாக மாற்றி கையில் கலப்பை கொடுத்து வயலில் இறக்கிவிடும் கார்த்தியின் தந்திரம் வித்தியாசமான அணுகுமுறை.  கறி சோறு சாப்பிடும் ரவுடிகள் வயலில் உழைத்த பின் களி திண்பதும், கழனி உழுவதுமாக காட்சிகள் இறக்கை கட்டி பறக்கிறது.

கார்த்தியின் சொல்லுக்கு கட்டுப்பட்டிருக்கும் 100 ரவுடிகளும் லால் இறந்ததும் அவருக்கு எதிராக திரும்பி தனி ஆளாக கார்த்தியை விட்டு பிரியும்போது ஒற்றை ஆளாக நிற்கும் கார்த்தியால் ஊரை அழிக்க வரும் ராமசந்திர ராஜு கூட்டத்தின் அராஜகத்தை எப்படி தடுக்கப்போகிறார் என்ற டென்ஷனை உருவாக்குகிறது. சரியான நேரத்தில் வரும் சுல்தான் பாய்ஸ் கார்த்திக்கு கைகொடுத்து களத்தில் குதிக்கும்போது அரங்கில் ஆரவாரம் அதிர்கிறது.

ராஷ்மிகா தமிழில் அறிமுகமாகும் படம் இது. ஏற்கனவே நடிப்பில் இவர் படுசுட்டி என்பதை தெலுங்கு படங்களில் நிருப்பித்திருக்கிறார் இதில் கூடுதலாக காதலில் படுகெட்டி என்பதை நிரூபித்திருக்கிறார். பல இடங்களில் அவர் வாய்பேசுவதற்கு பதில் கண்கள் பேசுவது ராஷ்மிகாவின் ஸ்பெஷல் வெளிப்பாடு.

நெப்போலியன் கெஸ்ட் ரோலில் வந்தாலும் படத்துக்கான லீடை சரியாக எடுத்துக்கொடுத்திருக்கிறார். கார்த்தியின் மாமனாக வந்து அள்ள அள்ள குறையாத நடிப்பை கொடுத்திருக்கிறார் லால். 100 ரவுடி பாய்ஸ்களும் ஆடியன்ஸை மிரள வைக்கின்றனர். யோகிபாபு, சதீஷ், சிங்கம்புலி, மயில்சாமி, மாரிமுத்து, பொன்வண்ணன் இந்த கூட்டத்திலும் காணாமல் போகாமல் தங்கள் பங்கை சரியாக செய்து இடம் பிடிக்கின்றனர்.

100 ரவுடிகள், இன்னொருபக்கம் 100 பேர் என்று ஒரு பெரும் கூட்டத்தை வைத்து அசராமல் காட்சிகளை படமாக்கி தெறிக்க விட்டிருக்கிறார் இயக்குனர் பாக்யராஜ்  கண்ணன்.  எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு  செலவுக்கு அஞ்சாமல் படத்தை நிறைவாக தயாரித்திருக்கின்றனர்.
காட்சியிலும் பிரமாண்டம் தெரிய வேண்டும் கதையிலும் அழுத்தம் இருக்க வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டு அசத்தல் ஒளிப்பதிவில் அசர வைக்கிறார் சத்யன் சூர்யன்.

விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ஆரவாரமிடுகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை நிமிர வைக்கிறது. சண்டை காட்சிகளுக்கு தனி கவனம் செலுத்தியிருக்கும் ஸ்டண்ட் மாஸ்டருக்கு கைதட்டல் தரலாம்.

சுல்தான் – திணற வைக்கும் ஆக்‌ஷன் படம்.

Leave A Reply

Your email address will not be published.