விவேக் இயக்கவிருந்த படத்தை உருவாக்குவோம் : நடிகர் உதயா உருக்கம்

2

விவேக் மறைவு குறித்து அவரது நண்பரும் நடிகருமான உதயா பகிர்ந்துக்கொண்டார். அவர் கூறியதாவது:

விவேக் சார் நேற்று மறைந்துவிட்டார் என்று நம்பவே முடியவில்லை. அவர் மறைந்துவிட்டார் என்ற வார்த்தையைகூட எனக்கு சொல்ல தோன்ற வில்லை. அவர் நம்முடன் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார். நான் நடித்த முதல் படமான திருநெல்வேலியில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அன்று முதல் அவருடன் எனது நட்பு தொடர்கிறது. என்னுடைய வெல் விஷாராகவும் சரியான நேரத்தில் ஆலோசனைகள் சொல்லும்குருவாகவும் இருந்தார்.

இசைவிழா மேடைகளில் பேசும்போதும் மற்றவர்களிடம் பேசும்போது என்னைப்பற்றி சொல்வார். நல்ல பையன் உதயா, நன்றாக வருவான் என்று சொல்வார். எனக்கு எப்போதும் ஊக்கம் அளித்துக்கொண்டே இருப்பார். சினிமாவில் நீ நன்றாக வருவாய், வெற்றி பெறுவாய் அதற்கு உன்னுடைய இத்தனை வருட உழைப்பே சான்று என்பார். அவர் சொந்தமாக படம் இயக்கவும் எண்ணியிருந்தார். அதுபற்றி என்னிடம் கூறி என் படத்தில் நீயும் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறாய் என்றார். அவரை தலைவா என்றுதான் நான் கூறுவேன். கண்டிப்பாக உங்கள் படத்தில் சிறு பாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன். உதவி இயக்குனராகவும் பணியாற்றுவேன் என்றேன். அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தாலும் மிக நெருக்கமான நண்பர்களாக சிலர் பெயர்களை சொல்வார் அதில் என் பெயரும் சொல்வார். அப்துல்கலாம் ஐயாவிடம் அவர் பேட்டி எடுத்தபோதுகூட நான் எப்போதே சொன்ன ஒரு கவிதையை அவரிடம் சொன்னதாக என்னிடம் தெரிவித்தார்.மரங்கள் நடும் பணியை செம்மையாக செய்து பல லட்சம் மரங்களை நட்டார். அவரது குடும்பத்தாரை எண்ணும்போது மிகுந்த வேதனையாக் இருக்கிறது.

இப்போது நான் நடிக்கும் படத்திலும் நல்ல ஒரு விஷயம் செய்து தருகிறேன் அதற்கு சம்பளம் வேண்டாம் என்று சொல்லி 6 நாட்கள் நடித்துக்கொடுத்தார். விவேக் சார் உடல் எடுத்துச்செல்லப்பட்ட வேனில் அவர் அருகிலேயே நின்றுகொண்டு அவர் முகத்தை பார்த்தபடியே சென்றேன். அவரது உடலை சுமந்து, தகன மேடை வரை கொண்டு சென்றேன். ஆனாலும் அவர் நம்முடன் இல்லை என்று என்னால் நம்பமுடியவில்லை. அவர் நம்முடனேதான் இருக்கிறார். அவர் இயக்க வேண்டும் என்று எண்ணிய படத்தை அவரது நண்பர்கள் இணைந்து உருவாக்குவோம்.

இவ்வாறு உதயா கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.