கவுண்டமணி பிறந்தநாள் சிறப்பு தகவல்கள்

1

 

கலைவானர் என் எஸ் கே தொடங்கி சந்திரபாபு, நாகேஷ் முதல் தற்போதைய வடிவேல், விவேக் வரை எத்தனையோ காமெடி நடிகர்கள் தமிழ்சினிமா ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு பாணியை அமைத்து வெற்றிநடை போட்டவர்கள். யாருடனும் யாரையும் ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. ஒவ்வொரு தலைமுறையிலும் நகைச்சுவைக்கென இருக்கும் அளவு கோள்கள் மாறி வந்திருக்கின்றன. எனவே என் எஸ் கே யுடனோ, நாகேஷுடனோ, வடிவேலுடனோ கவுண்டமணியை ஒப்பிடக் கூடாது.

நாடக நடிகராக இருந்த கவுண்டமணி பெரும் போராட்டங்களுக்குப் பின் 70 களின் மத்தியில் சொல்லிக் கொள்ளும் படியான வேடங்களை தமிழ் சினிமாவில் பெற்றார். அன்றிலிருந்து 2000 ஆவது ஆண்டு வரை கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்தார். இந்த 25 ஆண்டுகளில் அவருடைய கேரியர் மூன்று முறை சரிவை சந்தித்தது. ஒவ்வொருமுறை கவுண்டமணி சரிவில் இருந்து மீளும் போதும் முன் இருந்த அந்தஸ்தை விட கூடுதல் அந்தஸ்துடனேயே வலம் வந்தார்.

கவுண்டமணியின் பெரும் பலம் என்பது அவர் ஏற்று நடித்த வித்தியாச வேடங்களே. அன்றாட வாழ்வில் நாம் காணும் சாமானியர்கள் அமைப்பை எதிர்த்தோ, புனிதத்தை எதிர்த்தோ பேசுவது போல அமைக்கப்பட்ட வேடங்களே அவரை காலம் கடந்து பேச வைத்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலோனோரின் மனதில் படிந்திருப்பது அவர் செந்திலை திட்டி செய்த காமெடிகள்தான். சிலர் செந்தில் இருந்ததுதான் கவுண்டரின் பலம் என்று சொல்வார்கள். அது முற்றிலும் தவறான கருத்து. செந்தில் இல்லையென்றால் ஒரு முருகன் அவருக்கு கிடைத்திருப்பார். செந்தில் இல்லாமலேயெ கவுண்டர் பல படங்களில் அதகளம் பண்ணியிருப்பார். கவுண்டமணி இல்லாத செந்தில் சோபித்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

கவுண்டமணியின் திரை வாழ்வை பின்வரும் பகுதிகளாக பிரிக்கலாம்.

1. 76ல் தொடங்கி 81 வரை ஏற்று நடித்த வேடங்கள். இதில் கிராமத்து, சிறுநகர எளிய மனிதர்களின் வேடத்திலேயே பெரும்பாலும் நடித்திருப்பார். அவர்கள் தொழில் சார்ந்து பழகும் மக்களிடையே நிகழ்த்தப்படும் (கிழக்கே போகும் ரயில், சுவரில்லாத சித்திரங்கள்) நகைச்சுவையே பிரதானமாக இருக்கும் இந்தப் படங்களில்.

2.1982 முதல் 86 வரையிலான காலம். 82ல் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான பயணங்கள் முடிவதில்லை பெரும் திருப்புமுனையைக் கொடுத்தது. பின் 84ல் வெளியான வைதேகி காத்திருந்தாளில் செந்திலுடன் இணைந்து நடித்த காட்சிகளின் வெற்றி. 86வரை இந்த வெற்றிப்பயனம் தொடர்ந்தது.

3. 86 முதல் 88 வரை பணம் பத்தும் செய்யும், பிறந்தேன் வளர்ந்தேன், கிளி ஜோசியம் உட்பட 10 படங்களில் நாயகனாக நடித்தார். எதுவும் வெற்றி பெறவில்லை. சில வெளிவரவில்லை. இது ஒரு தேக்க நிலைக் காலம்.

4. 89 முதல் 95 வரை 89ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தின் மூலம் உச்சத்துக்குப் போனது கவுண்டமணியின் மார்க்கெட். பின் 95 வரை சீராக சென்றது. 90 களில் செந்திலை பல படங்களில் கழட்டிவிட்டு புது துணையைப் பிடித்தார் கவுண்டமணி. வேறு யாரும் இல்லை, அந்தந்த பட கதாநாயகர்கள் தான். வேலை கிடைச்சிடுச்சு, நடிகன் போன்ற படங்களில் கதாநாயகனுடனேயே வலம் வரும் வேடம் கிடைத்தது, அவை மிகவும் ரசிக்கப்படவும் அது தொடர்கதையானது. கனவுப் பாட்டில் கூட கதாநாயகனுட ஆடினார் கவுண்டமணி (ஜெண்டில்மேன்). இதே நேரத்தில்தான் வடிவேலும், விவேக்கும் சொல்லிக்கொள்ளும் படியாக வளர்ந்து கொண்டிருந்தார்கள்.

5. 96 முதல் 99 வரை 96ல் உள்ளத்தை அள்ளித்தா கொடுத்த மிகப் பெரிய வெற்றிக்குப் பின் கதாநாயகர்களுக்கு சமமான கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கினார். அஜீத்,விஜய் போன்ற அப்போது வளர்ந்து கொன்டிருந்த நடிகர்களுக்கும் கவுண்டமணியின் தயவு தேவைப்பட்டது.

கவுண்டமணியின் ஆரம்பகால படங்களைப் பார்த்தோமானால் (1976 – 81) அவரது குரலில் ஒரு நெகிழ்வு இருக்கும். வசனம் பேசும் போது குழைந்தே பேசுவார். உடலிலும் ஒரு விறைப்புத்தன்மை இல்லாமல் தளர்வாகவே இருக்கும்.

16 வயதினிலே – ரஜினியின் (பரட்டை) அல்லக்கை

போகும் ரயில் – மனைவியின் தங்கையை ரசிக்கும் தொழிலாளி

சிகப்புரோஜக்கள் – கமல் நிறுவன மானேஜர்

சுவரில்லாதசித்திரங்கள் – டெய்லர்

இந்த படங்களில் எல்லாம் கேரக்டரை மீறி கவுண்டமணி தெரியமாட்டார். சரோஜா, ம்ம் பார்த்து, போம்மா போன்ற வசனங்களை அவர் இப்படங்களில் மிக குழைவான குரலிலேயே உச்சரிப்பார். மேற்கண்ட படங்களை இயக்கியவர்கள் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ். இந்த இயக்குனர்களின் ஆளுமை காரணமாக அவர் இப்படி நடித்தாரா?

கலைவானர் – சமூக கருத்துக்கள் + வார்த்தை விளையாட்டு

சந்திர பாபு, நாகேஷ் – வாழ்கைத்துணைக்காகவோ, செல்வத்துக்காகவோ ஏங்கும் வேடங்கள் பெரும்பாலும். டைமிங், ஸ்லாப்ஸ்டிக், வசன உச்சரிப்பு மூலம் அதை மெருகேற்றுவார்கள்.

நாகேஷ் மறைவையொட்டி பல பதிவர்கள் சிறப்பான பதிவுகளை எழுதினார்கள். அதில் பலரும் குறிப்பிட்ட அம்சம், நாகேஷின் குரலை யாரும் அதிகமாக மிமிக்ரி செய்யவில்லை. காரணம் அவர் பாத்திரங்களுக்கேற்ப்ப மாடுலேஷனை மாற்றுவதே என்று. உண்மை. அவர்கள் கேரக்டருக்கேற்ற தொனியிலேயே பேசினார்கள்.

எம் ஆர் ராதாவை காமெடி நடிகர் என்ற வட்டத்துக்குள் அடைக்க முடியாது. ஆனால் அவர் செய்த காமெடிகளில் சமுதாய குத்தல்கள் பெரும் பங்கு வகிக்கும். ஆனால் அவரது குரல் அதட்டும் தொனியில் இருக்காது. சாமானியர்களின் வார்த்தைப் பிரயோகங்கள் அதிகமாக இருக்காது. பாலையாவும் அதட்டும் குரலில் காமெடி செய்ததில்லை.

கே ஏ தங்கவேலுவின் பாணியானது இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட ஆட்களிடையே நடக்கும் சம்பவங்கள், அதை தொடர்ந்த உரையாடல் என வசனங்களின் மூலம் நகைச்சுவை வெளிப்படும். இவர் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசவேண்டும் என்ற கொள்கையுடன் இருந்தார். வி கே ராமசாமியின் நகைச்சுவையும் இந்த வகையில் வரும். ஆனால் அவர் இரட்டை அர்த்த வசனங்களை சிறிது கலப்பார்.

இவர்களது பாதிப்பினாலோ அல்லது நாடக அனுபவங்களாலோ கவுண்டமணி தன் ட்ரேட் மார்க் குரலை ஆரம்பத்தில் பயன்படுத்தவில்லை. சாதாரண இடதுகை பந்து வீச்சாளராக, கீழ் வரிசை மட்டையாளராக இருந்த ஜெயசூரியாவை அர்ஜுன ரனதுங்கா ஓப்பனிங் இறக்கியபின் தானே அவருக்குள் இருந்த சிங்கம் வெளியே வந்தது. அதுபோல் கவுண்டமணிக்கு கிடைத்தவர் ஆர் சுந்தர்ராஜன். அவரது முதல் படமான பயணங்கள் முடிவதில்லையில் குரலை உயர்த்திப் பேசும் கவுண்டமணியை மக்களுக்கு அறிமுகம் செய்தார். அது பின் ஒரு பாணியாக மாறி இன்றுவரை வெற்றி நடை போடுகிறது.

இந்த சென்னை மாநகரத்திலே என்று கவுண்டமணி ஆரம்பிக்கும் போதே தியேட்டர் சிரிக்க ஆரம்பித்தது. அதற்க்கு முக்கிய காரணம் ரிப்பீட் ஆடியன்ஸ். டேப் ரெக்கார்டர் அதிகமான சென்று அடையாத வேளையில் பாடல்களைக் கேட்பதற்க்காவே அந்த படத்தை திரும்பத் திரும்ப பார்த்தவர்கள் அதிகம். இரண்டு மூன்று முறை அந்த வசனங்களைக் கேட்டவுடன் அந்த பாணியில் பொதுமக்களும் தங்களுக்கிடையே பேசத் தொடங்கினர். இந்த வகையில் வடிவேலு மிகவும் அதிர்ஷ்டகாரர். அவரது காமெடி சாட்டிலைட் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப் படுவதால் மிகப் பெரிய ரீச் அவருக்கு கிடைக்கிறது.

தொடர்ந்து அவருக்கு கிடைத்த ஆர் சுந்தர்ராஜனின் படங்களான நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள் ஆகியவற்றில் இந்த வகை காமெடி பெரிதும் பேசப்பட எல்லா இயக்குனர்களும் (மணிரத்னம் உட்பட) இந்த பாணிக்கு மறுப்பு சொல்லவில்லை. மணிவண்ணன் இயக்குனரான பின்னும், சத்யராஜ் நாயகனான பின்னும் கவுண்டமணிக்கு விளையாட பெரிய களம் கிடைத்தது எனலாம். ராமராஜன், சரத்குமார் ஆகியோரின் ஆரம்ப காலப் படங்களுக்கும், கார்த்திக்,பிரபு ஆகியோரின் இரண்டாம் கட்டப்படங்களுக்கும் கவுண்டமணியின் தேவை அதிகமாக இருந்தது.

கவுண்டமணியின் குரல் பலரும் சொல்வது போல அதிகாரத்திற்க்கு எதிராகவும், புனிதத்திற்க்கு எதிராகவும், மக்களின் அன்றாட அர்த்தமில்லா செயல்களுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியது. அவர் குரல் எழுப்பாத ஏரியாவே இல்லை எனலாம். அந்த மாதிரி கேள்விகளை ரசிக்கும்படிக் கேட்க அவரது குரல்வளம் உறுதுணையாக இருந்தது.

அரசியல்வாதிக்கெதிராக (சட்ட மன்றம்)- அக்கா அந்தக் கருமத்துக்கு படிப்பே தேவையில்லை. ஊர்ல நொண்டு நொசுக்கான், பெட்டிக் கடையில கருப்பட்டி திருடிட்டு ஓடினது, துண்டு பீடி குடிச்சது எல்லாம் அங்க தான் இருக்கு. (தாய்மாமன்)

நடிகர்களுக்கெதிராக – இந்த விளம்பரம் நமக்குத் தேவையா?. நடிகருங்க தான் தனக்குத் தானே போஸ்டர் அடிச்சு ஒட்டிக்குறாங்க.பொறந்த நாள் கொண்டாடுறாங்க. அதுவும் 33 வயசுக்கு மேல போக மாட்டேங்கிறாங்க (கரகாட்டக்காரன்)

வைதீகர்கள் – காலையில ஒன்னறை குண்டா புளியோதரையை சாப்பிட்டிட்டு வந்து ரிக்சால வந்து உட்கார்ந்து கோவிந்தான்னுச்சு டயர் வெடிச்சுருச்சு (ரிக்சாமாமா)

பிறந்த வீட்டு ஆட்கள் மேல் அதிக பாசம் காட்டும் பெண்கள் – உங்க அக்காவுக்கு ஆட்டுக்கால் சூப்பு வைக்கத்தெரியும்னு எனக்கு இன்னைக்குத் தாண்டா தெரியும் (கன்னிராசி)

கோவிலில் அதிகமாக வேண்டும் பக்தர்கள் – நீ உண்டியல்ல போடுற ஐஞ்சு காசு பத்து காசுக்கு லட்சாதிபதியாக்குன்னுல்லாம் வேண்டக்கூடாது. கைகால் இழுத்துக்காம இருக்கணும்னு வேண்டிக்க (கோட்டை வாசல்)

மூட நம்பிக்கை – ஐயோ ஒத்தப் பிராமணன் எதிர்ல வந்துட்டான்னு வீட்டுக்குள்ளே போறியே நீ என்ன கப்பல் வாங்கவா கிளம்பிப் போற. தெரு முக்கு கடையில ரெண்டு ரூபாய்க்கு சாமான் வாங்கப் போற.(கோட்டை வாசல்)

விசேஷத்துக்கு அலங்கரிக்கும் பெண்கள் – யார் வீட்டு கல்யாணத்துக்கோ இவளுக தீபாவளி கொண்டாடுறாள்கயா (தாய்மாமன்)

நடுத்தர வர்க்கம் – ஒரு பிச்சக்காரனுக்கு கூட பொண்ண குடுப்பேன்றிய எங்க எனக்கு கட்டி வை (உடன்பிறப்பு)

கண்ணில் கட்டுடன் வரும் போது சிரிப்பவர்களிடம் – உங்க பொண்டாடியெல்லாம் ஐஸ்வர்யா ராயா – கண்ணு இருக்கேனு நீங்க சந்தோசப்பட்டுக்க. இதுக்கு கண்ணு இல்லாமலேயே இருக்கலாம்டா (வில்லாதி வில்லன்)
தொழிலதிபர் – குண்டூசி விக்கரவனெல்லாம் தொழிலதிபர்ன்னுக்கிறாய்ங்க (மன்னன்)

நடிகை – சரிம்மா அப்படியே ஒரு தொழிலதிபர கட்டீட்டு பாரின் போயிடு

பஞ்சாயத்து – ஒரு ஆலமரம் கிடைச்சுட்டா போதுமே, நாலு தலைமுறையா தொவைக்காத ஜமுக்காளம், நசுங்கிப் போன சொம்போட ஆரம்பிச்சுடுவீங்களே.

பரிவட்டம் – நாலு முழ துணி, இதை தோளல போட்டா துண்டு, இடுப்புக்கு கீழ கட்டுனா கோமனம், இதை தலையில கட்ட இவ்வளோ போட்டி. பரிவட்டம் சொரிவட்டம்னுக்கிட்டு (இரண்டும் ஆஹா என்ன பொருத்தம்)

அதிகாரி – கோழி கிறுக்கின மாதிரி ஒரு கையெழுத்து. இதப் போட இங்க தள்ளனுமாம், அங்க தள்ளணுமாம் (இந்தியன்)
இதுபோல அன்றாட வாழ்வில் நாம் தட்டிக் கேட்க நினைக்கும் பல சங்கதிகளை அவர் தனக்கே உரிய பாணியில் தட்டிக் கேட்டார். அதற்க்கு அவரது குரலும், உபயோகப்படுத்திய வார்த்தைகளும் மிகவும் உதவின.

1999க்குப் பிறகு அவரது உடலிலும், குரலிலும் ஒரு தளர்ச்சி ஏற்பட்டது. கண்ணன் வருவான், உனக்காக எல்லாம் உனக்காக படங்களில் அது தெளிவாக தெரிந்தது. அவருடைய பாணிக்கு அவரது குரல் முக்கியம். அந்த வளம் குறைந்தது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

கவுண்டமணி ஏற்று நடித்த வேடங்களை திரைக்கதையில் அதன் பங்கு என்ற வகையில் ஆறு வகையாகப் பிரிக்கலாம்.

1. 1976 முதல் 1981 வரை ஏற்று நடித்த கதையை நகர்த்த உதவும் வேடங்கள்.

2. 1982ல் வெளியான பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல் படங்களின் மூலம் கிடைத்த பிரபலம், 84ல் வெளியான வைதேகி காத்திருந்தாளில் உச்சத்துக்கு போனது. அதனால் அவருக்கு கிடைத்த தனி காமெடி டிராக்குகள். இதற்க்கும் படத்தின் மையக்கதைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.

3. 1985 முதல் 87 வரையில் இவர் கதாநாயகனாக நடித்த சில படங்கள் (பணம் பத்தும் செய்யும், பிறந்தேன் வளர்ந்தேன்)

4. 1990ல் வெளியான பி வாசு இயக்கிய வேலை கிடைச்சுடுச்சு திரைப்படத்தில் கதாநாயகன் சத்யராஜுடன் இணைந்து படம் முழுவதும் வரும் வேடத்தில் நடித்தார். இந்தப் படத்தின் வெற்றியாலும், இந்த இணைக்கு கிடைத்த வரவேற்பாலும் தொடர்ந்து கதாநாயகர்களுடன் பவனி வர ஆரம்பித்தார். சத்யராஜுடன் 20 படங்கள் வரையிலும் இவ்வாறு நடித்தார். இந்த காலகட்டத்தில் பீல்டில் இருந்த எல்லா நாயகர்களுடனும் அட்டகாச பவனி வந்தார். சில படங்களில் நாயகிகளை விட நாயகனுடன் இவரது காட்சிகள் அதிகம் இருக்கும்.

5. வி சேகர் போன்ற இயக்குனர்களின் படங்களில் ஏற்று நடித்த நகைச்சுவையுடன் கூடிய குணசித்திர வேடம். (பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும் போன்ற படங்கள்)

6. மிக அரிதாக நடித்த வில்லன் வேடங்கள் (ரகசிய போலிஸ் 115(சரத்,நக்மா), ஞானப்பழம், முத்துக் குளிக்க வாரியளா?,சக்கரவர்த்தி)

இது தவிர சில படங்களில் கதாநாயகனுடனான நகைச்சுவைக் காட்சிகளும் இருக்கும், தனி டிராக்கும் இருக்கும்.இதில் எந்த காட்சிகள் அதிகம் வருகிறதோ அந்த வகையில் சேர்த்துவிடலாம்.

கவுண்டமணியின் காமெடி டிராக்குகள்

படத்துடன் ஒட்டாத காமெடி டிராக் என்பது கலைவானர் என் எஸ் கிருஷ்ணன் காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. அப்போதைய தயாரிப்பளார்கள் படத்தில் பெப் குறைவதாக கருதினால் நேரே கலைவானரிடம் வருவார்கள். அவரும் எடுத்த படத்தைப் போட்டுப் பார்த்துவிட்டு அந்த கதைக்கு எந்த மாதிரியான களத்தில் நகைச்சுவை டிராக் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து அதன்படி நடித்து தருவார். இந்த டிராக்குகளுக்காவே பல படங்கள் அப்போது ஓடின.

இதேபோல் பல நகைச்சுவை நடிகர்களும் தனி டிராக்கில் காமெடி புரிந்துள்ளார்கள். இப்பொழுது வடிவேல்,விவேக் வரை இது தொடர்ந்து வருகிறது. தங்கவேல் (கல்யாணப் பரிசு), சுருளிராஜன் (மாந்தோப்புக் கிளியே), வடிவேலு (கண்ணாத்தாள், நேசம் புதுசு) என சொல்லிக் கொண்டே போகலாம்.

கவுண்டமணிக்கு பெரும் பெயரை வாங்கித் தந்தவை இம்மாதிரியான டிராக்குகளே.

வைதேகி காத்திருந்தாள் – ஆல் இன் ஆல் அழகுராஜா

உதயகீதம் – சிறு திருட்டு செய்பவரில் இருந்து போலி சாமியார்

பகல்நிலவு – சிறு உணவகம் நடத்தும் ஜார்ஜ் குட்டி

உன்னை நான் சந்தித்தேன் – ஹோட்டல் சப்ளையர்

கீதாஞ்சலி – வாடகை குதிரை நடத்துனர்

இதயகோயில் – சிகை அலங்கார நிபுணரில் இருந்து கர்நாடக சங்கீத பாடகர்

நானே ராஜா நானே மந்திரி – ஒத்தமீசை குப்புசாமி

மண்ணுக்கேத்த பொண்ணு – நாட்டு வைத்தியர்

கரகாட்டக்காரன் – தவில் வித்வான்

தங்கமான ராசா – ஊமையாய் நடிக்கும் பாடகராகும் ஆசை உள்ள திருடன்

நல்லதை நாடு கேட்கும் – சாட்டையால் அடித்து பிட்சை கேட்பவர்

ஊருவிட்டு ஊரு வந்து – பேயோட்டி

புதுப்பாட்டு – பழங்கால நாணயத்துக்கு பணம் கிடைக்கும் என்பதால் அதை வைத்திருப்பவரை தாங்குபவர்

இம்மாதிரி பல படங்களில் அவர் தனி காமெடி டிராக்கில் நடித்தார். இந்தப் படங்களில் ஓரளவு கதை இருக்கும். இளையராஜாவின் அருமையான பாடல்கள் இருக்கும். பெரும்பாலும் மிகை ஹீரோயிசம் இருக்காது. இம்மாதிரிப் படங்களுக்கு அனைத்து தரப்பினரையும் தியேட்டருக்கு அழைத்துவர கவுண்டமனியின் காமெடி உதவியது. இந்தப்படங்களின் வசனக் காட்சிகளை (டாக்கி போர்ஷன்) இரண்டு மூன்று முறைக்கு மேல் இப்போது பார்க்க முடியாது. ஏன் பாடல்காட்சிகளை கூட பார்க்க முடியாது. பாடல்களை சலிக்காமல் கேட்கலாம், நகைச்சுவைக் காட்சிகளை சலிக்காமல் பார்க்க முடியும்.

1990ல் வேலை கிடைச்சுடுச்சுவின் வெற்றிக்குப் பின் அவர் கதாநாயகனுடன் இணைந்து பல படங்களில் தோன்றினாலும், சில படங்களில் தனி டிராக்குகளிலும் வெற்றிநடை போட்டார்.

சின்னதம்பி – மாலைக்கண் நோய் உள்ள சமையல்காரர் பாத்திரம்

சின்னக் கவுண்டர் – சலவைத் தொழிலாளி

சூரியன் – பன்னிக்குட்டி ராமசாமி என்ற உள்ளூர் அரசியல்வாதி

ஆவாரம் பூ – தச்சர்

சின்ன வாத்தியார் – இரண்டு பொண்டாட்டி ஜோசியர்

கோட்டைவாசல் – கோவில் அர்ச்சகர்

தங்கமனசுக்காரன் – கிடாரிஸ்ட்

கிழக்குகரை – நாகரீக ஆசை பிடித்தவர்

ஊர் மரியாதை – கிராமத்து மைனர்

பெரிய கவுண்டர் பொண்ணு – கொல்லர்

ராசாத்தி கோவில் – நாவிதர்

ஜல்லிக்கட்டுகாளை – எண்ணெய் மில் ஊழியர்

பெரியமருது – ஈயம் பூசுபவர்

ரசிகன் – போலிஸ் ஏட்டு

கூலி – மில் கேண்டின் உரிமையாளர்

மாமனிதன் – சுடுகாட்டு பணியாளர்

அவதார புருஷன் – பிக் பாக்கெட் பெரியசாமி

டேவிட் அங்கிள் – லாரி உரிமையாளர்

சூரிய பார்வை – அமெரிக்க ரிட்டர்ன்

எதிரும் புதிரும் – ஜோசியரால் ஏமாறுபவர்

இவையெல்லாம் சில படங்கள் தான். முழுத் தொகுப்பு அல்ல.

இந்த டிராக்குகளை கவுண்டமணிக்கு எழுதிக் கொடுத்தவர்கள் ஏ வீரப்பன் மற்றும் ராஜகோபால். இந்த எழுத்தாளர்கள் கொடுப்பது வெறும் ஸ்கெலிடன் மட்டுமே. அதற்க்கு உயிர் கொடுத்து திரையில் உலாவ விடுவது கவுண்டமணியின் தனித்திறமை. ஒரு எடுத்துக்காட்டு மட்டும் பார்க்கலாம். வெளியாகி 16 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நம்மை சிரிக்க வைப்பது சூரியனில் வரும் கூப் சீன். கதையில் பார்த்தால், கதாநாயகனை அந்த கூப்பில் வேலைக்கு சேர்ப்பதற்க்காக அழைத்து வரும் காட்சி. இந்த காட்சிக்கு ஸ்க்ரிப்டில் இவ்வளவு துல்லியமாகவா வசனம் இருந்திருக்கும்?. அதற்க்கு உயிர் கொடுத்து அந்த காட்சியில் பேசப்பட்ட அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா, ஒரெ குஷ்டமப்பா, எம்மெல்லே நாலயே முடியலயாம் போன்ற வசனங்களை பட்டி தொட்டியெல்லாம் பேசவைக்க கவுண்டமணியால்தான் முடியும்.

அடுத்து இந்த டிராக்குகளின் குறையாக சொல்லப்படுவது செந்திலை எட்டி உதைப்பது. எந்த செட்டிலுமே செந்திலின் கதாபாத்திரத்தைப் போல ஒரு அப்பாவியும், ஊமை குசும்பனும் இருப்பார்கள். அவர்களுக்கு அடிக்கடி நல்லது கூட நடக்கும். இவனுக்கெல்லாம் இது நடக்குது பாரேன் என்று பலர் அங்கலாய்ப்பார்கள். அந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை கலாய்ப்பது இந்த டிராக்குகளில் ஒரு அங்கம். டாம் அண்ட் ஜெர்ரியில் டாம், ஜெர்ரியை மரண அடி அடிக்கும். அதை நாம் என்னப்பா சும்மா அடிக்கிறது காமெடியா? எனக் கேட்கிறோமா? ஜெர்ரி நாயிடம் மாட்டிவிட்டோ அல்லது மற்ற வகையிலோ பழி வாங்குவதைப் போல செந்திலும் தானே பழிவாங்குகிறார். தற்போதைய மிமிக்ரி நிகழ்ச்ச்சிகளில் கவுண்டமணியை காட்சிப்படுத்த கைகாலை உதைத்து காண்பிக்கிறார்கள். இந்த மேனரிசத்தை அவர் ஒரு குறிப்பிட்ட பாத்திரமாக நடிக்கும் போது செய்தது கிடையாது.

தச்சராகவோ,அரசியல்வாதியாகவோ, வெட்டியானாகவோ நடிக்கும் போது செய்தது கிடையாது. அந்தந்த பாத்திரங்களுக்கு என்ன பாடி லாங்குவேஜோ அதைத் தான் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் இயக்குனர்கள் கவுண்டமணியை கவுண்டமணியாகவே நடிக்க வைக்க நினைக்கும்போதுதான் அந்த மாதிரி சேஷ்டைகள் செய்ய ஆரம்பித்தார்.

ஒரு வேடம் என்றால் அதற்க்கென்று ஒரு குணநலன், தொழில், வயது என்று போன்ற விஷயங்களுடன் அமைக்கப் படவேண்டும். பின்னாளைய இயக்குனர்கள் அவருக்கு கதாநாயனின் மாமன் அல்லது நண்பன் வேடம் கொடுத்தார்கள். அதற்க்கு எந்த வித டெஸ்க்ரிப்ஷனும் கிடையாது. அதில் என்ன பாடி லாங்குவேஜ், மாடுலேஷன் காட்ட முடியும்? கையைக் காலை உதைத்து கத்த வேண்டியதுதான். ஆனாலும் அவர் சிரிக்க வைத்தார்.

ஒருவகையில் இளையராஜாவும்,கவுண்டமணியும் ஒன்று. இருவரிடமும் புதிய இயக்குனர்கள் பயந்து சரியாக வேலை வாங்காமல் விட்டு விட்டார்கள்

கவுண்டமணியும் கதாநாயக நடிகர்களும்

1990 ஆம் ஆண்டு வெளியான வேலை கிடைச்சுடுச்சுவில் சத்யராஜும், கவுண்டமணியும் ஆளுக்கொரு பெண்ணைக் காதலிப்பார்கள். அதை இருவரும் பகிர்ந்து கொள்ளும்போது கவுண்டமணி சொல்வார் “இந்த மேட்டர இப்படி பேசக்கூடாது” என்று சொல்லிவிட்டு நீச்சல் அடிப்பது போல் பாவனை செய்வார். உடனே பாடல் ஒலிக்கும் ” நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை”. படித்தால் மட்டும் போதுமாவில் சிவாஜியும், பாலாஜியும் இதே சிச்சுவேஷனுக்கு நடித்த பாடல். தியேட்டரே அலறியது அந்தக் காட்சிக்கு. அதே ஆண்டு வெளிவந்த நடிகன் படத்தில் நோயாளி தாயை காப்பாற்ற வயதானவராக நடிக்க்கும் வேடம் சத்யராஜுக்கு. அதைத் தெரிந்து கொண்டு பிளாக்மெயில் செய்யும் திருடன் வேடம் கவுண்டமணிக்கு.

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணியின் வசனம். “நான் மொள்ளமாறி, முடிச்சவுக்கி,கேப்மாறி இவனுங்களையெல்லாம் தனித் தனியாத்தான் பாத்திருக்கேன். மூணு பேரையும் ஒண்ணா ஓன் ரூபத்துல இப்பத்தாண்டா பார்க்கிறேன்”. இந்த பட காமெடி பெரிதும் பேசப்பட்டது. இதே ஆண்டு வெளியான வாழ்க்கைச் சக்கரம், இதற்கடுத்த ஆண்டில் வெளியான புதுமனிதன்,பிரம்மா ஆகிய படங்களிலும் இந்த இணை பெரிதும் பேசப்பட்டது. புது மனிதன் படத்தில் சமாதியின் மேல் உட்கார்ந்து கொண்டு சத்யராஜ் தன் காதலைப் பற்றி சொல்வார். அப்போது சமாதியின் மேல் விரலால் கோலம் போடுவார். உடனே கவுண்டமணி சொல்வார் ” பார்த்துடா உள்ள படுத்துருக்கவன் எந்தரிச்சு வந்து அப்பீரப் போறான்”.

சத்யராஜ் – கவுண்டமணி இணை பெரிதும் பேசப்பட காரணம் இதுவே. அடுத்தவர்கள் செய்யும் அபத்த செயல்களை கிண்டல் செய்வதுதான் கவுண்டரின் பலமே. சத்யராஜ் அதற்க்கு உரிய இடத்தைக் கொடுத்தார். நான் கதாநாயகன் என்னைக் கிண்டல் செய்து காட்சி இருக்கக்கூடாது என்று அவர் சொன்னதே இல்லை.

மேற்குறிப்பிட்ட படங்களைத்தவிர தெற்குத்தெரு மச்சான், திருமதி பழனிச்சாமி, பங்காளி,மகுடம்,தாய்மாமன், மாமன் மகள்,வில்லாதி வில்லன், சேனாதிபதி, வள்ளல், அழகர்சாமி, குங்குமப் பொட்டு கவுண்டர்,தங்கம் ஆகிய படங்களிலும் இவர்கள் இணை கொடி கட்டி பறந்தது.

ரஜினிகாந்த்

கவுண்டமணி, ரஜினியுடன் பதினாறு வயதினிலே காலத்தில் நடித்திருந்தாலும் பின் அவருடன் அதிகப் படங்களில் நடிக்கவில்லை. ரஜினி ஜனகராஜ் மற்றும் செந்திலுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். தற்போது விவேக்,வடிவேலுவுக்கு முக்கியத்துவம் தருகிறார். மிஸ்டர் பாரத், மன்னன்,எஜமான்,பாபா ஆகிய படங்களில் ரஜினியுடன் வரும் பாத்திரம் கவுண்டமணிக்கு. இதில் மன்னனில் மட்டுமே ரஜினியைக் கலாய்ப்பது போல் காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கும். ரஜினியை அவரது தாயோ அல்லது காதலியோ கூட திட்டி பேசினால் கத்தித் தீர்த்துவிடும் ரசிகர்கள் கவுண்டமணியை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற பயம் இயக்குனர்களுக்கு இருந்திருக்கலாமோ?

கமல்ஹாசன்

காமெடி டிராக்கை கமல் எப்பொழுதுமே ஆதரித்ததில்லை. படத்திற்க்கு காமெடி வேண்டுமென்றால் காமெடி படமாகவே எடுத்துவிட சொல்வார். கமலுடன் கவுண்டமணி இணைந்து நடித்த சிங்கார வேலன், இந்தியன் ஆகிய படங்களின் காமெடி பேசப்பட்ட ஒன்று.

விஜயகாந்த்

விஜயகாந்தின் படங்களான வைதேகி காத்திருந்தாள், சின்னகவுண்டர், கோயில் காளை ஆகிய படங்களில் கவுண்டரின் காமெடி டிராக்குகள் புகழ் பெற்றவை.நானே ராஜா நானே மந்திரி படத்தில் விஜயகாந்துடன் சில காம்பினேஷன் காட்சிகள் இருக்கும். புலன் விசாரனை, கேப்டன் பிரபாகரனுக்கு பின் விஜயகாந்த் நடித்த படங்களில் குறைவான படங்களிலேயே காமெடி இடம் பெற்றிருந்தது. கண்ணுபடப் போகுதய்யா (சார்லி), வானத்தை போல (ரமேஷ் கண்ணா), தவசி, நரசிம்மா (வடிவேலு), தென்னவன் (விவேக்) என அவர் படங்களில் நகைச்சுவை காட்சிகள் இருந்தாலும் நகைச்சுவை நடிகர்களுடன் அவர் தோன்றியது குறைவே

கார்த்திக்

உள்ளத்தை அள்ளித் தா, மேட்டுக்குடி, மருமகன், பூவரசன், உனக்காக எல்லாம் உனக்காக,கண்ணன் வருவான் ஆகிய படங்களில் இருவரும் நடித்த காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றன. இதுதவிர சின்னஜமீன், சீமான், கட்டப்பஞ்சாயத்துக்காரன் ஆகிய படங்களின் காம்பினேஷன் காட்சிகளும் சிறப்பானவை. சத்யராஜுக்கு அடுத்தப் படியாக கார்த்திக்குடன் இணைந்து நடித்த காட்சிகள் கவுண்டமணிக்கு சிறப்பாக அமைந்தவை எனலாம். இதற்க்கு கார்த்திக்கின் டைமிங் சென்சும், நடிப்புத் திறமையும் காரணமாய் அமைந்தன.

பிரபு

கார்த்திக்குக்கு அடுத்தது பிரபு. மைடியர் மார்த்தாண்டன், வியட்னாம் காலனி,பரம்பரை, தேடினேன் வந்தது, மிஸ்டர் மெட்ராஸ் போன்ற பல படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி நன்கு ஒர்கவுட் ஆனது. வியட்னாம் காலனி படம் இவர்கள் இணையின் உச்சம் எனச் சொல்லலாம்

மோகன் & ராமராஜன்

இவர்களது படங்களில் காமெடி டிராக் பேசப்பட்ட அளவுக்கு நாயகர்களுடன் இணைந்து நடித்த காட்சிகள் பேசப்படவில்லை. கரகாட்டக் காரன், ஊருவிட்டு ஊரு வந்து படங்களில் கூட காமெடிக்கு மூன்றாம் ஆளின் தேவை இருந்தது.

அர்ஜூன்

அர்ஜூன் ஆரம்பகாலத்தில் நடித்த வேஷம் படத்திலேயே இருவருக்கமான டிராக் இருந்தது. பின்னர் ஜெண்டில்மேன், ஆய்தபூஜை, ஜெய்ஹிந்த், கர்ணா என பல படங்களில் இந்த இணை பிரகாசித்தது.

சரத்குமார்

இவர் சூரியன் திரைப்படத்திற்க்குப் பின் முழு ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய புதிதில் சொன்னது. ” என்னைப் போன்ற புதிய நடிகர்களுக்கு முழுப் படத்தையும் தோளில் தாங்க முடியாது.அதைச் செய்யவும் எல்லாத் தரப்பினரையும் தியேட்டருக்கு வரவழைக்கவும் கவுண்டமணி போன்றோர் என் படத்திற்க்குத் தேவை.”. சேரன் பாண்டியன். சூரியன், நாட்டாமை ஆகிய படங்களில் பெரிதாக காம்பினேஷன் ஷாட் இல்லாவிட்டலும் பெரியகவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மகாபிரபு ஆகிய படங்களில் காம்பினேஷன் சிறப்பாக அமைந்தது

ரகுமான்

பட்டிக்காட்டான் படத்தில் கிராமத்தான் ரகுமானுக்கு பட்டனத்து முறைப்பெண் ரூபினியை திருமணம் செய்து வைக்கும் டாக்டர் வேடம். ஐயாம் டென் சொங்கப்பா, நேபாள்ல எம் பி பி எஸ் படிச்சவன் என்று கவுண்டர் கலக்கி எடுத்திருப்பார்.

ஜெயராம்

இயல்பிலேயே மிகுந்த நகைச்சுவை உணர்ச்சி கொண்ட ஜெயராமுடன் கவுண்டர் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்?. சுந்தர் சியின் முதல் படமான முறை மாமன், குரு தனபாலின் பெரிய இடத்து மாப்பிள்ளை ஆகிய படங்களில் புகுந்து விளையாடியிருப்பார்கள்.

பார்த்திபன்

டாட்டா பிர்லாவில் இணை நாயகர்கள் என்று சொல்லும் அளவுக்கு கொட்டம் அடித்திருப்பார்கள்.

ராம்கி

ஆஹா என்ன பொருத்தம் படத்திலும் இணை நாயகன் என்னும் அளவுக்கு முக்கிய வேடம்.

விஜய்

ரசிகன் படத்தில் குறைவான காம்பினேஷன். பின் வந்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் உடன் வரும் தோழன் வேடம்.

அஜீத்

நேசம், ரெட்டை ஜடை வயசு ஆகிய படங்களில் புல் காம்பினேஷன் வேடம். அவள் வருவாளா படத்திலும் காம்பினேஷன் உண்டு.

அருண்குமார்

கண்ணால் பேச வா படத்தில் தாய்மாமன் வேடம். புல் காம்பினேஷன்.

சிம்பு

மன்மதன் படத்தில் தாய்மாமன் வேடம். பல காட்சிகள் வெட்டப்பட்டதாக கூறுகிறார்கள்.

#பிறந்தநாள்_வாழ்த்துக்கள்

Murali kannan

Leave A Reply

Your email address will not be published.