கவிஞர் வைரமுத்துக்கு கேரளாவின் உயர்ந்த தேசியவிருது

1

மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. இதுவரை மூத்த மலையாளப் படைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் முறையாக மலையாளி அல்லாத ஒரு இலக்கியவாதிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.இது அகில இந்திய அளவில் வழங்கப்படும் தேசிய விருதாகும். இந்த விருது ஒரு சிலை, ஒரு தகுதி பட்டயம் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு கொண்டதாகும்.

இந்த விருது குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதாவது:-

ஓ.என்.வி குறுப் இலக்கிய விருது பெறுவதை பெரும் பெருமையாக கருதுகிறேன். நான் பெரிதும் மதிக்கும் இலக்கிய பூமியான கேரளத்தில் இருந்து இந்த விருது வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழுக்கு சகோதர மொழி சூட்டிய மகுடமாக நான் இதைக் கருதுகிறேன். மலையாளத்தின் காற்றும் தண்ணீரும் கூட இலக்கியம் பேசும். அந்த மண்ணில் இருந்து பெறும் விருதை மகுடமாக கருதுகிறேன். வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் இந்திய இலக்கியம் ஒன்று தான். இந்த உயரிய விருதினை உலகத் தமிழர்களோடும், சக படைப்பாளிகளோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.