இசைஞானி என்றொரு இசை இமயத்துக்கு 78வது பிறந்தநாள்

7

தமிழ் இசைக்கு உலக அடையாளமாக இன்றைக்கும் கோலோச்சிக் கொண்டிருப்பவர்  ‘இசைஞானி இளையராஜா. இந்த விடிவெள்ளி 1976ல் ‘அன்னக்கிளி’ என்ற படம் மூலம்  தமிழ் திரை வானில் மின்னத்தொடங்கியது.

அன்றைக்கு திரையில்  வீசத்தொடங்கிய இந்த இசை ஒலி ஓங்கரமாய் ஓய்வில்லாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர் மட்டுமல்லாமல், அவரது பிள்ளைகள் கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரணியும் இசையுலகில் உலா வந்துக் கொண்டிருக்கின்றனர்.

1942ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி  தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்த இசைஞானி மேற்கத்திய உலகில் கால்பதித்து உயரிய விருதான  “மேஸ்ட்ரோ” பட்டத்தை தட்டிவந்தார்.  இந்திய அரசின் ‘பத்ம விபூஷன் விருது’, நான்கு முறை ‘தேசிய விருது’, நான்கு முறை ‘ஃபிலிம்ஃபேர் விருது’, மூன்று முறை ‘கேரள அரசின் விருது’, நான்கு முறை ‘நந்தி விருது’, தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ஆறு முறை ‘தமிழ்நாடு மாநில திரை விருது’, ‘சங்கீத் நாடக அகாடெமி விருது’ என எண்ணிலடங்கா விருதுகள் இவர் மகுடத்தை அலங்கரிததுக்கொண்டிருகிறது.

“பஞ்சமுகி” என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கிய இளையராஜா  இசை மற்றும் திரைத் துறையில் ஆற்றிய சாதனைகளை மிஞ்சுவதற்கு இன்னொருவர் பிறந்து வரவேண்டும்.

சிறு வயதிலிருந்தே வாத்தியங்கள் வாசிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்த அவர், தன்ராஜ் மாஸ்டரிடம் வாத்தியங்கள் கற்கத் தொடங்கினார். ஆர்மோனியம், பியானோ மற்றும் கிட்டார் போன்ற இசைக்கருவிகளை மேற்கத்திய பாணியில் வாசிப்பதில் தேர்ச்சிப் பெற்ற அவரது பெயரை, அவரது மாஸ்டர் ‘ராஜா’ என்று மாற்றினார். வீட்டில் வறுமைக் காரணமாகத் தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே நிறுத்திக் கொண்டார். தனது 14வது வயதில் நாட்டுப்புறப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அவர், 19வது வயதில், அதாவது 1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு சென்று சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து கொண்டார். பின்னர், லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் சேர்ந்து, கிளாஸ்ஸிக்கல் கிட்டார் தேர்வில் தங்கப் பதக்கமும் வென்றார்.

நாடகக்குழுவில் இசைக் கச்சேரிகளிலும், நாடகங்களிலும் பங்கேற்று வந்த அவர், 1970களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக சலில் சௌதுரியிடம் பணிபுரிந்தார். பின்னர், இசையமைப்பாளரான ஜி. கே. வெங்கடேஷ் அவர்களின் உதவியாளராக சேர்ந்த அவர், அவரது இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.

தமிழ்த் திரையுலகிற்கு இளையராஜாவை  அறிமுகம் செய்தவர், பஞ்சு அருணாச்சலம்.  தான் தயாரித்த ‘அன்னக்கிளி’ படத்தில் இசையமைப்பாளராக அவரை ஒப்பந்தம் செய்தார். முதல் படமே இளையராஜாவை உச்சத்துக்கு கொண்டு சென்றது. தொடர்ந்து ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘16 வயதினிலே’, ‘24 மணி நேரம்’, ‘100வது நாள்’, ‘ஆனந்த்’, ‘கடலோர கவிதைகள்’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘ஆணழகன்’, ‘ஆண்டான் அடிமை’, ‘ஆராதணை’, ‘ஆத்மா’, ‘ஆவாரம்பூ’, ‘ஆபூர்வ சகோதர்கள்’, ‘அடுத்த வாரிசு’, ‘மூன்றாம் பிறை’, ‘மௌன ராகம்’, ‘முதல் மரியாதை’, ‘முள்ளும் மலரும்’, ‘முந்தானை முடிச்சு’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘அமைதிப்படை’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘அன்புக்கு நான் அடிமை’, ‘நாயகன்’,  ‘அன்புள்ள ரஜனிகாந்த்’, ‘பத்ரக்காளி’, ‘சின்ன கவுண்டர்’, ‘சின்ன தம்பி’, ‘சின்னவர்’, ‘தர்ம துரை’, ‘பாயும் புலி’, ‘பணக்காரன்’, ‘எஜமான்’, ‘குணா’, ‘இன்று போய் நாளை வா’, ‘இதயத்தை திருடாதே’, ‘காக்கி சட்டை’, ‘காதலுக்கு மரியாதை’, ‘கைராசிக்காரன்’, ‘கலைஞன்’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’,  என தொட்டதெலெல்லாம் பொன்னானது. ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிப்படங்களுக்கும் அவர் இசை அமைத்திருக்கிறார்.

இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்த ‘ஹவ் டு நேம் இட்’ (“How to name it”) என்ற இசைத் தொகுப்பினை வெளியிட்டார். “இளையராஜாவின் கீதாஞ்சலி” என்ற தமிழ் பக்தி இசைத் தொகுப்பு “மூகாம்பிகை” என்ற கன்னட பக்தி இசைத் தொகுப்பு  வெளியிட்டார்.

ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இசையமைத்தார்.  ஆன்மீகம்  இலக்கியம், புகைப்படக் கலையிலும் மிகுந்த ஆர்வமுள்ள அவர், ‘சங்கீதக் கனவுகள்’, ‘வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது’, ‘வழித்துணை’, ‘துளி கடல்’, ‘ஞான கங்கா’, ‘பால் நிலாப்பாதை’, ‘உண்மைக்குத் திரை ஏது?’, ‘யாருக்கு யார் எழுதுவது?’, ‘என் நரம்பு வீணை’, ‘நாத வெளியினிலே’, ‘பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்’, ‘இளையராஜாவின் சிந்தனைகள்’ போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.

1988 – தமிழ்நாடு அரசு அவருக்கு ‘கலைமாமணி விருது’ வழங்கி சிறப்பித்தது.

2010 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ வழங்கி கவுரவிக்கப் பட்டார்.

2012 – ‘சங்கீத நாடக அகாடமி விருது’ வென்றார்.

1988 – மத்திய பிரதேச அரசின் ‘லதா மங்கேஷ்கர் விருது’ வழங்கப்பட்டது.  இசையில் அவர் புரிந்த சாதனைக்காக, 1994ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகமும், 1996ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக் கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.

தேசிய விருதுகளை ‘சாகர சங்கமம்’ என்ற படத்திற்காக 1984லும், ‘சிந்து பைரவி’ என்ற படத்திற்காக 1986லும், ‘ருத்ர வீணா’ என்ற படத்திற்காக 1989லும், ‘பழசி ராஜா’ என்ற படத்திற்காக 2௦௦9லும் பெற்றார்.

1989ல் அவரது சிறந்த பங்களிப்பிற்காகவும், 1990ல் ‘போபிலி ராஜா’ என்ற தெலுங்கு திரைப்படத்திற்காகவும், 2003ல் ‘மனசினக்கரே’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காகவும், 2005ல் ‘அச்சுவிண்டே அம்மா’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காகவும் ஃபிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்றார்.

தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகளை 1977ல் ‘16 வயதினிலே’ படத்திற்காகவும், 1980ல் ‘நிழல்கள்’ படத்திற்காகவும், 1981ல் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காகவும், 1988ல் ‘அக்னி நட்சத்திரம்’ படத்திற்காகவும், 1989ல் ‘வருஷம் 16’ மற்றும் ‘கரகாட்டக்காரன்’ படங்களுக்காகவும், 2009ல் ‘அஜந்தா’ படத்திற்காகவும் வென்றார்.

கேரள மாநிலத் திரைப்பட விருதுகளை, 1994ல் ‘சம்மோஹனம்’ என்ற படத்திற்காகவும், 1995ல் ‘கலபாணி’ படத்திற்காகவும், 1998ல் ‘கள்ளு கொண்டொரு பெண்ணு’ என்ற படத்திற்காகவும் பெற்றார்.

சபரிமலை சன்னிதனத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் கடந்த ஆண்டில் இசைஞானிக்கு ஹரிவராசனம் விருது கேரள அரசு வழங்கியது. விருதுடன் ஒரு லட்சம் ரொக்கப்பணமும், ‘worshipful Music Genius’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

இசைஞானியின் புகழ் இசை உள்ளவரை நீடிக்கும்.

78 வது பிறந்தநாள் காணும் இசைஞானிக்கு Film News 24/7 சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.