டி.எஸ்.துரைராஜ் நினைவஞ்சலி

1

 

நகைச்சுவை நடிகராகப் புகழ் பெற்ற டி.எஸ்.துரை ராஜ், பின்னர் பட அதிபராகவும், டைரக்டராக வும் சாதனை படைத்தார். பந்தயக் குதிரைகளும் வைத்திருந் தார். சென்னை கிண்டியில் நடந்த மிக முக்கிய குதிரைப் பந்தயத்தில், அவருடைய குதிரை வெற்றி பெற்றது.

டி.எஸ்.துரைராஜின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை. தந்தை ராஜா நாயுடு, தாயார் நாகலட்சுமி.

பட்டுக்கோட்டையில் பள்ளிப்படிப்பை தொடங்கிய டி.எஸ்.துரை ராஜ், 5-ம் வகுப்பு வரை படித்தார். அதன் பின்னர், மதுரை பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார்.

தொடர்ந்து, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் பல நாடகங்களில் நடித் தார். அதன் பின்னர் என்.எஸ்.கிருஷ்ணனும், டி.எஸ்.துரைராஜூம் சென்னைக்கு வந்தனர். என்.எஸ்.கிருஷ்ணனுடன் இணைந்து திரைப்படங் களில் துரைராஜ் நடிக்கத் தொடங்கினார்.

கலைவாணரின் பெரும் பாலான படங்களில், துரைராஜ் இடம் பெற்றார்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் சொந்தமாகத் தயாரித்த ‘திருநீலகண்டர்’ என்ற மெகா ஹிட் திரைப் படத்தில், என்.எஸ்.கிருஷ் ணனும், துரைராஜூம் பங்கு கொண்ட ‘லாவணி’ கச்சேரி மிகப் புகழ் பெற்றது.

டி.எஸ்.துரைராஜ் பாடல் ரூபத்தில் கேட்கும் கேள்வி களுக்கு எல்லாம், கலைவாணர் சளைக் காமல் பதில் சொல்லிக் கொண்டு வருவார். கடைசியில், ‘அந்தக் கணபதிக்கு தொந்தி பெருத்த விதத்தை சபையிலே எடுத்துக் கூறு, கூறு!’ என்பார் துரைராஜ்.

அதற்கு பதில் சொல்ல முடியாமல் கலைவாணர் திணறுவார். பாடலை எங்கெங்கோ இழுத்துக் கொண்டு போவார். துரைராஜ் விடமாட்டார். கடைசியில் ஒருவழியாக ‘கொழுக்கட்டை தின்றதினால் அண்ணே அண்ணே!’ என்று கலைவாணர் பதில் சொல்வார்.

1940-ம் ஆண்டில் வெளியான எம்.எஸ்.சுப்பு லட்சுமி நடித்த ‘சகுந்தலை’ யில், என்.எஸ்.கிருஷ்ணன் – டி.எஸ்.துரைராஜ் இடம் பெற்ற நகைச்சுவைக் காட்சி மிகப்புகழ் பெற்ற தாகும்.

சகுந்தலைக்கு துஷ்யந்தன் கொடுத்த மோதிரம், அவள் கையில் இருந்து நழுவி விட, அந்த மோதிரத்தை ஒரு மீன் விழுங்கி விடும். என்.எஸ். கிருஷ்ணனும், துரை ராஜூம் போட்ட தூண்டி லில் அந்த மீன் சிக்கிவிடும்.

அந்த மீன் யாருக்கு சொந்தம் என்பதில் இருவருக்கும் தகராறு ஏற்படும். ‘மீனில் பங்கு கேட்டால், அடிதான் விழும்’ என்பார் கலைவாணர்.

‘அடிப்பியோ! உங்கப்பன் மவனே சிங்கம்டா!’ என்று மீசையை முறுக்குவார், துரைராஜ்.

கலைவாணர் அவரை உதைப்பார்.

துரைராஜ், பாதி அழுகையுடன், ‘அடிப்பியோ! உங்கப்பன் மவனே சிங்கம்டா!’ என்பார்.

கலைவாணர் மீண்டும் அடிப்பார்.

அடிமேல் அடி வாங்கி, கடைசியில் பலமாக அழுது கொண்டே ‘உங்கப்பன் மவனே சிங்கம்டா!’ என்பார், துரைராஜ்.

‘அழாதேடா! மீனை அறுத்து, ஆளுக்குப் பாதி எடுத்துக்குவோம்!’ என்று துரைராஜை கலைவாணர் தேற்றுவார். மீனை அறுக்கும்போது, துஷ்யந்தனின் கணையாழி வெளியே விழும்!

இந்த நகைச்சுவையை இன்று பார்ப்பவர்கள் கூட, விலா நோகச் சிரிப்பார்கள். அத்துடன், ‘கவுண்டமணி – செந்தில் பாணி நகைச்சுவையை, அந்தக் காலத்திலேயே கலைவாணரும், துரைராஜூம் நடித்துக் காட்டியிருக்கிறார்களே!’ என்று வியப்படைவார்கள்.

1948-ம் ஆண்டு ‘மரகதா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சொந்தப் படக்கம்பெனி தொடங்கினார், துரைராஜ். ‘பிழைக்கும் வழி’ என்ற திரைப்படத்தை தயாரித் தார். இந்த படத்தில் டி.எஸ். பாலையா, டி.எஸ்.துரை ராஜ், டி.ஏ.ஜெயலட்சுமி ஆகியோர் நடித்தனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

1949-ம் ஆண்டு ‘கலியுகம்’ என்ற நகைச்சுவை நாடகத்தை நடத்தி வந்தார். அது மட்டுமின்றி இலங்கை போன்ற அயல் நாடுகளில் நாடகத்தை நடத்தி வெற்றி கண்டார்.

இந்த நாடகத்தின் மூலம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நடிகராக அறிமுகம் செய்தார். அதன் பின்னர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிஞராகி கொடிகட்டிப் பறந்தார்.

1951-ம் ஆண்டு ஏவி.எம். தயாரித்த ‘ஓர் இரவு’ 1953-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘திரும்பிப்பார்’ ஆகிய படங்களிலும் துரைராஜ் நடித்தார். 1954-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த ‘மலைக்கள்ளன்’ படத்தில் போலீஸ் ஏட்டாக தோன்றி மிகப்பிரமாதமாக நடித்தார்.

1958-ம் ஆண்டு ‘பானை பிடித்தவள் பாக்கிய லட்சுமி’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து, டைரக்ட் செய்தார். இதில் சாவித்திரி கதாநாயகி யாக நடித்தார். இந்தப்படத்தில் இடம் பெற்ற ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே, தங்கச்சி கண்ணே!’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது.

1960-ம் ஆண்டு ‘படிக்காத மேதை’யில் சிவாஜியுடன் காமெடி வேடத்தில் நடித் தார். தொடர்ந்து ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்திலும் நடித்தார்.

1963-ம் ஆண்டு ‘ஆயிரம் காலத்து பயிர்’ என்ற படத்தை தயாரித்து டைரக்ட் செய்தார். படத்தில் புதுமுகங்களை நடிக்க வைத்தார். நடிகர் அசோகன் நடித்த ‘இது சத்தியம்’ என்ற படத்திலும் நடித்து இருக்கிறார்.

நடிகர்களிலேயே பந்தயக் குதிரை வைத்திருந்தவர் டி.எஸ்.துரைராஜ். அந்த காலத்திலேயே சொந்தமாக 3 குதிரைகளை வைத்து இருந்தார். தென் இந்தியா விலேயே நடிகர்களில், அதிக பந்தயங்களில் வென்றவர் என்ற பெயரையும் பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.