எஸ்பிபி-க்கு பாடகர் சிக்கில் குருசரண் மற்றும் பிரபல மருத்துவரின் இசை அஞ்சலி

1

 

பிரபல மருத்துவ நிபுணரும் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் நண்பருமான டாக்டர் ஆர் ஸ்ரீதரன் (கற்பகதாசன்), பாடகர் சிக்கில் குருசரணுடன் இணைந்து மறைந்த பாடகருக்கு இசை அஞ்சலி செலுத்தியுள்ளார்.

‘காத்திருந்த கண்கள்’ திரைப்படத்திற்காக பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய ‘துள்ளி திரிந்த பெண் ஒன்று…’ பாடலை அடிப்படையாகக் கொண்டு ‘துள்ளி திரிந்த உயிர் ஒன்று, துயில் கொண்டதே இன்று…’ எனும் பாடலை டாக்டர் ஸ்ரீதரன் இயற்ற, சிக்கில் குருசரண் அதை பாடியுள்ளார்.

எஸ் பி பி-யின் 75-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் டோக்கியோ தமிழ் சங்கம் மற்றும் சர்வதேச தமிழ் சங்கங்கள் இணைய வழியில் நடத்திய நிகழ்ச்சியில் இந்த பாடல் வெளியிடப்பட்டது.

அருண் மேனனின் இசை கோர்ப்பில் வெளியான இப்பாடல் அதன் அர்த்தம் பொதிந்த வரிகள் மற்றும் ஆத்மார்த்தமான பாடும் முறையினால் யூடியூப் மற்றும் இதர சமூக வலை தளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

“பாடல் வரிகளை சில வாரங்களுக்கு முன் எனக்கு அனுப்பி வைத்த டாக்டர் ஸ்ரீதரன், பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய ‘துள்ளி திரிந்த பெண் ஒன்று…’ போன்றே இதையும் பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என கூறினார்.

பாடல் மிகவும் நன்றாக வந்துள்ளது. எஸ் பி பி சாரின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாடல் வெளியானது இன்னும் சிறப்பு. நமது இதயங்களை என்றும் ஆளும் எஸ் பி பிக்கு எங்களது சிறிய காணிக்கை இது,” என்றார் சிக்கில் குருசரண்.

டாக்டர் ஸ்ரீதரன் இயற்றிய மூன்று பாடல்களை எஸ் பி பி பாடியுள்ளது குறிப்பிடத் தக்கது. தனது புதிய பாடலை குறித்து பேசிய டாக்டர் ஸ்ரீதரன், “எஸ் பி பி-யின் திடீர் மரணம் என்னை மிகவும் பாதித்த நிலையில் எழுதிய பாடல் இது. எஸ் பி பி 75 நிகழ்ச்சியை நடத்த டோக்கியோ தமிழ் சங்கம் முடிவெடுத்தவுடன், மூன்றே நாட்களில் ஊரடங்கு காலத்தில் இப்பாடல் பதிவு செய்யப்பட்டு இணைய நிகழ்ச்சியின் போது வெற்றி கரமாக வெளியிடப்பட்டது,” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.