சந்தானபாரதியின் கோலிவுட் எண்ட்ரிக்கு வயசு 40 வருசம்!

2

சந்தானபாரதியின் கோலிவுட் எண்ட்ரிக்கு வயசு 40 வருசம்!

தமிழ்ச் சினிமாவில் குறிப்பிடத்தக்க இரட்டை இயக்குநர்களாக தலையெடுத்தவர்கள் சந்தான பாரதியும், பி.வாசுவும்.

இவர்கள் இருவரும் இயக்கிய முதல் திரைப்படம் 1981-ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம். இந்தப் படத்தில் சுரேஷ், சாந்தி கிருஷ்ணா இருவரும் அறிமுகமா னார்கள்.

இதற்கடுத்து இதே ஆண்டில் இந்த இரட்டையர்கள் இயக்கிய படம் ‘மதுமலர்’. இந்தப் படத்தில் பிரதாப் போத்தனும், சுஹாசினியும் நடித்திருந்தனர்.

அடுத்து 1983-ம் ஆண்டு ‘மெல்லப் பேசுங்கள்’ என்ற படத்தை இந்த இரட்டையர்கள் இயக்கியிருந்தனர். இந்தப் படம் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சொந்தப் படமாகும். இந்தப் படத்தில் தான் பானுப்பிரியா தமிழில் நடிகையாக அறிமுகமானார். நடிகர் வசந்தும் அறிமுகமானார்.

முதலில் இந்தப் படத்தில் பானுப்பிரியா கதாபாத்திரத்தில் ரேவதிதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ரேவதியை இயக்குநர் பாரதிராஜா தனது ‘மண்வாசனை’ படத்திற்காகத் தேர்வு செய்துவிட்டதால் தான் இன்னொரு படத்தில் நடிக்க வைப்பதற்காக தேர்வு செய்திருந்த பானுப்பிரியாவை இந்தப் படத்தில் நடிக்க வைத்தார் பாரதிராஜா. ஆனால், அதே ‘மண்வாசனை’ படத்தில் ஹீரோ கதாபாத்திரத்திற்குத் தான் தேர்வு செய்து வைத்திருந்த நடிகர் வசந்தை இந்த ‘மெல்லப் பேசுங்கள்’ படத்திற்கு திருப்பிவிட்டார் பாரதிராஜா.

இதற்கடுத்த ஆண்டான 1984-ல் தெலுங்குலகின் தற்போதைய டாப் ஸ்டார்களில் ஒருவரான பாலகிருஷ்ணாவை நாயகனாக அறிமுகப்படுத்தினார்கள் இந்த இரட்டை இயக்குநர்கள். இவர்கள் இயக்கிய ‘Sahasame Jeevitham’ என்ற தெலுங்கு படத்தில்தான் தனி நாயகனாக பாலகிருஷ்ணா தெலுங்கு உலகத்தில் அறிமுகமானார்.

1985-ம் ஆண்டில் ‘நீதியின் நிழல்‘ என்ற படத்தையும் இந்த இரட்டை இயக்குநர்கள் இயக்கினார்கள். இந்தப் படம்தான் இவர்கள் இணைந்து இயக்கிய கடைசித் திரைப்படம். இந்தப் படத்தில் சிவாஜி, பிரபு இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

இதற்கடுத்து இந்த இயக்குநர்கள் ஜோடி பிரிந்துவிட்டது. பிரிவுக்கான காரணமா அவர்கள் இருவருக்கும் இடையில் ஈகோ பிராப்ளம்.. மோதல்.. கருத்து வேறுபாடு என்றெல்லாம் செய்திகள் வந்தாலும் உண்மையான காரணம் என்ன என்பதை இப்போது சந்தானபாரதியே கூறியிருக்கிறார்.

“நீதியின் நிழல்’ திரைப்படத்தை இயக்கி முடித்தவுடன் அடுத்த படம் பற்றி யோசித்து வந்தோம். இந்தச் சூழலில் வாசுவின் அப்பாவான பீதாம்பரம் வாசுவை கன்னட படவுலகத்திற்குப் போகும்படி சொன்னார். அங்கே வாசுவை தனித்து படம் இயக்கும்படி அவர் வழி காட்டினார்.

வாசு என்னிடம் வந்து இதைச் சொன்னார். “நான் கன்னடப் படத்தை இயக்கணும்னு அப்பா சொல்றாரு…” என்றார். நானும் “ஓகே. நாம பிரியலாம்.. நீ கன்னடத்துக்கு போ…” என்றேன். இப்படித்தான் நாங்கள் இருவரும் பிரிந்தோம். வேறு எந்த சண்டையும் எங்களுக்குள் இல்லை.

அவர் கன்னடத்தில் பல படங்களை இயக்கிய பின்புதான் தமிழுக்கு வந்தார். நானும் தமிழில் படங்களை இயக்கத் தொடங்கினேன். நடிக்கவும் தொடங்கினேன். அவரும் நடித்தார். இப்பவும் எங்களுடைய நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது..” என்று கூறியிருந்தார் சந்தான பாரதி.

இந்நிலையில் இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி தன் அப்பா சினிமா வாழ்க்கைக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த் டே என்று சொல்லி இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.