படம்: ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ
நடிப்பு: ராகுல், செல்வா அனிதா, பகவதி பாலா, ஆர்.சுந்தர்ராஜன், நளினி, மீரா கிருஷ்ணன், வையாபுரி, கிங்காங், போண்டாமணி, கொட்டாச்சி, கராத்தே ராஜா,பரோட்டா முருகேஷ், பெஞ்சமின், தாரை மணியன்,.
இசை ; தேவா
ஒளிப்பதிவு: பகவதி பாலா
தயாரிப்பு: பெரியநாயகி பிலிம்ஸ்
இயக்கம்: பகவதி பாலா.
வாங்கிய கடனை திருப்பி தரமுடியாமல் வெளியூருக்கு ஓட்டம் பிடிக்கும் ஹீரோ அங்கு ஸ்டியோ வைத்து தொழில் செய்ய எண்ணுகிறார். அதற்கும் பணம் தேவைப்படுவதால் வட்டிக்கு பணம் தரும் ஹீரோயினிடம் கடன் வாங்குகிறார். அதை திருப்பி தர முடியாத நிலையில் ஓடி ஒளிகிறார் ஹீரோ. அதிர்ஷ்டவசமாக அந்த ஊரின் புது எம் எல் ஏ, ஹீரோவுக்கு பெரிய தொகை கொடுத்து போட்டோ ஆல்பம் தயாரிக்கச் சொல்கிறார். இந்நிலையில் எம் எம் ஏவை யாரோ கொலை செய்துவிடுகின்றனர். அந்த பிணத்தை கடத்தி வந்து தந்தால் 10 லட்சம் தருவதாக எம் எல் ஏவின் 4வது பெண்டாட்டி சொல்ல அதையேற்று பிணத்தை கடத்திவருகிறார் ஹீரோ. ஆனால் அது தன்னுடைய கணவன் இல்லை என்று 4வது பெண்டாட்டி குண்டை தூக்கிபோட மீண்டும் பிணத்தை ஆட்டோவில் வைத்துக்கொண்டு அலைகிறார் ஹீரோ. இதற்கிடையில் காணமல் போன எம் எல் ஏ பிணத்தை ஊர்முழுக்க போலீஸ் தேடுகிறது. அவர்களிடம் ஹீரோ சிக்கினாரா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
ஹீரோ ராகுல் புதுமுகமாக அறிமுகமானாலும் அலட்டல் இல்லாமல் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஹீரோ என்றதும் ஓவர் ஆக்டிங் செய்து பெயரை கெடுத்துக் கொள்ளாமல் இன்னொரு விமல் போல் இயல்பான நடிப்பால் கவர்கிறார். நடனம், சண்டை காட்சியிலும் திருப்த்தியான நடிப்பை தந்திருக்கிறார்.
காமெடி செய்கிறோம் என்பதை முகத்தில் காட்டாமல் அதை இயற்கையாக செய்வதுபோல் ராகுலும் கொட்டாச்சியும் செய்து காட்சிகளை ரசிக்க வைக்கின்றனர். எம் எல் ஏ பிணத்தை கடத்தி வந்து தந்தால் பத்து லட்சம் தருவதாக கூறும் பெண்ணின் பேச்சை கேட்டுபிணத்தை கடத்தி வந்துவிட்டு அது தன்னுடைய புருஷன் இல்லை என்று அந்த பெண் விரட்டி அடிப்பது வயிற்றை பதம் பார்க்கும் நகைச்சுவை காட்சிகள்.
ஹீரோயினாக நடித்திருக்கும் அனிகா இயல்பான தோற்றத்தில் வருகிறார். நடிப்பிலும் அதே எதார்த்தம் இருப்பதால் வேடத்தோடு ஒன்றிப்போகிறார். நடன காட்சிகளிலும் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்.
ஆர்.சுந்தராஜன், வையாபுரி அண்ணன் தம்பிகளாக நடித்திருக்கின்றனர். எம் எல் ஏ பதவிக்கு ஆசைப்பட்டு சொத்தை இழக்கும் வையாபுரி ஒரு சிலருக்கு படிப்பினை. போண்டா மணி, பெஞ்சமின், பரோட்டா முருகேஷ், கிங்காங் என பலர் காமெடி களத்தில் பங்கேற்றிருக்கின்றனர். நளினி அனாதை விடுதி காப்பாளராக வந்து செல்கிறார். எம் எல் ஏ வாக நடித்து உருட்டல் மிரட்டல் செய்தும் பிணமாக நடித்தும் கவர்ந்திருப்பவர் கவனத்தை ஈர்க்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் தேவாவின் இசை தாளம்போட வைக்கிறது. பகவதி பாலா ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார். வந்தோமா சிரிச்சோமா சென்றோமா என்ற பார்முளாவில் படத்தை இயக்கி இருப்பது நலம்.
ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ – சிரித்துவிட்டு வரலாம்.