சாதனையாளர் நயன்தாரா.. இன்னும் சாதிப்பார்

15

நயந்தாரா. அந்த  முகத்தில் ஒருவித புன்னகை எப்பொழுதும் படந்திருக்கும், அதைவிட முக்கியமாக அந்த கண்களில் ஒருவித வசீகரம் இருக்கும். அவர் கிட்டதட்ட 19 வருடங்களுக்கு முன்பு நடிக்க வரும்பொழுது  லட்சணமாக இருக்கின்றது அவ்வளவுதான் ஓரிரு படங்களில் தலைகாட்டும் என்றார்கள், அப்படியே காட்டிற்று

ஒரு சில படங்களுக்கு பின் அப்பெண் கவர்ச்சி வேடங்களிலும் பலூன் போல ஊதியும் திசைமாறி போனபின் அவ்வளவுதான் என்றார்கள், அதற்கான வாய்ப்பும் இருந்தது. பின் காதலும் வந்தது. காதலை அவர் மறுக்கவுமில்லை பிரிந்த பின் கலங்கவுமில்லை

தமிழகத்தில் திறமையான நடிகைகளின் வீழ்ச்சி இந்த கட்டத்தில்தான் நடக்கும் அது சாவித்திரியோ இல்லை வேறு யாரெல்லாமோ அப்படித்தான் தோற்றார்கள் சாவித்திரி முதல் எத்தனையோ நடிகைகள் இப்படி தோற்று அடையாளமின்றி மறைந்த நிலையில் அவள் மறுபடி மறுபடி ஜெயித்தாள். அதுவும் ஆணாதிக்கமிக்க திரையுலகம் அத்தோடு ஒதுக்கிவிடும், இந்த மாபெரும் தமிழ் சினிமா சிக்கலை கடந்தவர் யாருமில்லை, ஆனால் ஒரு நடிகை அதை அசால்ட்டாக செய்தார்.

தமிழ் திரையுலகம் கண்ட அதிசயம் அவர், நிச்சயம் இத்தனை சூறாவளி , தோல்வி, கண்ணீர், ஏமாற்றம், வஞ்சகம் அதை தாண்டி மாறிவிட்ட காலங்களிலும் அவளால் 20 வருடமாக நம்பர் 1 இடத்தில் இருக்க முடிகின்றது என்றால் சாதாரணம் அல்ல.

யானா மரியம் குரியன் எனும் நயன் தாரா. அவர் அளவு சிக்கலை சந்தித்து மீண்டுவந்த நடிகை இப்போதைக்கு யாருமே இல்லை, 20+ வயதுகளில் இவ்வளவு சிக்கல்களை கடந்து வந்து நிலைப்பது ஆச்சரியமே. அவருக்கு சினிமா குடும்பம் கிடையாது, சினிமாவில் வலுவான பிடி இல்லை, அரசியல் இல்லை, இன்னும் எதுவுமே இல்லை நீச்சல் குளத்தில் விழுந்து அங்கேயே நீச்சல் கற்று போராடி நீந்தி முதலிடத்தில் இருப்பது எவ்வளவு பெரும் சாதனையோ அது அவருடையது. சாதாரண நடிகையாக ஒதுங்கி சென்றிருக்க வேண்டியவர், பெரும் சுனாமியினை எல்லாம் தாண்டினார், அசால்ட்டாக நீந்தி வந்தார் அந்த தன்னம்பிக்கையும் தைரியமும் எல்லோருக்கும் வாய்க்காது நட்சத்திரம் எனும் பெயர் சினிமா நடிகைகளுக்கு மகா பொருத்தமானது, வெளியில் இருந்து பார்க்க மின்னும் நட்சத்திரங்கள் உள்ளே எரிந்துகொண்டிருக்கும், நடிகைகள் வாழ்வும் அத்தகைய துயரமே

பிழிந்து எறியபடும் கரும்பு சக்கையும் நடிகை வாழ்வும் ஒன்று, அந்த பரிதாபத்துகுரிய ஜீவன்கள் காட்சி பொருட்கள், சினிமா சந்தையின் பொம்மைகள், சர்கஸ் கிளிகளுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமில்லை ஆனால் அவர்களுக்கும் ஒரு மனம் உண்டு, அதில் ஏக்கமும் வாழும் ஆசையும் உண்டு, சராசரி ஏழை பெண்ணை குடும்பமாக பார்க்கும் பொழுது எழும் ஏக்கமும் உண்டு. ஏதோ விதிவசத்தால் சினிமாவில் சிக்கும் நடிகைகள் வாழ்வினை துயரம் துரத்துகின்றது. கள்ள கடத்தல் கோஷ்டி, அரசியல், மந்திரவாதம் போன்றது சினிமா உலகம், ஒருவழி பாதை அது, நுழைந்தால் அதிலே சிக்கி கிடக்க வேண்டியதுதான் வெளிவருவது என்பது வாய்ப்பில்லை. வெளிவந்தாலும் அந்த அடையாளம் மறுபடி அங்கேயே தள்ளும் மிக சில நடிகைகள் சில கட்டைகளை பிடித்து கரைசேர்வார்கள், அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை பெரும்பாலும் வாழவும் முடியா சாகவும் முடியா நிலையே. சிலர் துணிந்து செத்துவிடுகின்றார்கள், சிலர் ஏதோ கடந்து செல்கின்றார்கள், தமிழக சினிமா நடிகையர் சோகமிது ஆனால் நயன்தாரா போராடினார், மிக வலிமிகுந்த போராட்டம் அது. எவ்வளவு ஏமாற்றம் எவ்வளவு வலி, எத்தனை நம்பிக்கை துரோகம்? எவ்வளவு கண்ணீர் விட்டிருக்கும் அந்த மனம், எவ்வளவு காயம்? நம்பியவரெல்லாம் ஏமாற்ற ஏமாற்ற அது எப்படி எல்லாம் துடித்திருக்கும்? அதை விளக்கமாக சொல்ல வேண்டாம், உங்களுக்கே எல்லா விஷயமும் தெரிந்தது. ஆனால் அது அவரின் சினிமா வாழ்க்கையினை பாதிக்கவில்லை, அப்பெண் வலிகளை உள்வாங்கி புத்துயிர் கொண்டார், நடிப்பில் மகா கவனம் செலுத்தினார்,

உறுதியாக சொல்லலாம் இன்றிருக்கும் நடிகையரில் அற்புதமான நடிப்பினை அவர்தான் கொடுக்கின்றார் . இன்றைய நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனுக்கு பின் குறிப்பிட்டு சொல்லும் நடிப்பு அவருடையது. முதல் இன்னிங்க்ஸை 2003 முதல் 2007 வரை முதல் இன்னிங்க்ஸ், 2008 முதல் 2014 வரை அடுத்த இன்னிங்க்ஸ், 2016 முதல் இப்பொழுது வரை அடுத்த இன்னிங்க்ஸ் என அலை அலையாய் அடிக்கும் நடிகை அவர். கொஞ்சம் அசந்தாலே ஆளை விழுங்கிவிடும் தமிழ் சினிமாவில் ஒரு பெண்ணாக நிலைத்து நிற்பது பெரும் ஆச்சரியமே.

அதுவும் இந்த காலகட்டத்தில் 19வருடமாக நம்பர் 1 இடத்தில் இருப்பது சாதாரணம் அல்ல, தமிழிக சினிமா வட்டம் மிக சுருங்கியது. ரஜினியுடன் நடித்துவிட்டால் அவ்வளவுதான், எவரெஸ்டை தாண்டி ஒன்றுமில்லை என்பதை போல இறங்கி வீட்டுக்கு செல்ல வேண்டும். ஆனால் அம்மணி ரஜினி ஒரு நடிகர் அவ்வளவுதான் என தாண்டி அசால்ட்டாக சென்றது, வரும் இளம் நடிகருடனெல்லாம் ஜோடி போட்டு அசத்தியது, அட்டகாசமாக ஈடு கொடுத்தது. கிட்டதட்ட 15 வருடத்துக்கு பின் மறுபடியும் ரஜினியுடன் ஜோடியாக வந்து தர்பார் என வந்தார், இது கைதட்ட வேண்டிய விஷயம். எந்த நடிகையும் இந்த மாபெரும் இடைவெளியில் ரஜினியுடன் மறுபடி ஜோடி என சேர்ந்ததில்லை

வாழ்வியல் நெருக்கடி, தனிபட்ட சோகம் இதை எல்லாம் தாண்டி இந்த அளவு அப்பெண் வந்திருப்பது அவரின் தொழில்பக்தி அன்றி வேறல்ல‌. அது ஒன்றுதான் அவரை எல்லா இக்கட்டிலிருந்தும் காத்து, இந்த அளவு உயர்த்தி வைத்திருக்கின்றது. செய்யும் தொழிலே தெய்வம் என இதைத்தான் சொல்வார்கள், தொழிலை நேசிக்கும் ஒருவனுக்கு எல்லா துன்பமும் தானாய் விலகும் என்பது இதுதான். அவரை தூக்கி எறிந்தவர்கள் எல்லாம் காணாமல் போக அவரோ நிலைத்து நிற்க காரணம் அந்த தொழில் பக்திதான், மிக ஆழமான தொழில்பக்திதான்.

ஒரு பேட்டியில் கூட அம்மணி இப்படி சொன்னது

“நான் கதைகளை கவனமாய் தேர்ந்தெடுப்பேன், கஜினி படத்தில் மட்டும் சொதப்பினேன், அது என் வாழ்வில் நான் செய்த தவறு” தன் வாழ்வில் தொழிலை அவர் எவ்வளவு கவனமாக செய்கின்றார் என்பதற்கு இதுதான் உதாரணம், அவ்வளவு கவனம். இதன் மறைமுக அர்த்தம் என்ன தெரியுமா?

“இதே ஏ.ஆர் முருகதாஸ் கஜினி படத்தில் என்னை துக்கடா கேரக்டரில் ஓட விட்டான், இன்று அந்த கதாநாயகி காணவில்லை, ஆனால் நான் ரஜினியுடன் மறுபடியும் இணையும் அளவுக்கு வந்திருக்கின்றேன்”. தோற்று போன நடிகைகள் மத்தியில் பிடிவாதமாய் வென்று காட்டி நிற்கும் நயந்தாரா ஒரு அதிசயம், தன்னம்பிக்கைக்கும் போராட்டத்திற்கும் மீண்டு வரும் வழிகாட்டியாய் பெண்களுக்கு தோன்றும் அவர் பெரும் அதிசயம்.

பத்மினி, ஸ்ரீதேவி, ரம்யா கிருஷ்ணன் போன்ற வரிசையில் தன்னை இணைத்து கொண்ட சாதனையாளர் அவர்அந்த சாதனை பெண்ணுக்கு, போராட்டத்தின் பெண் வடிவுக்கு, தைரியத்துக்கு சுடிதார் போட்டால் எப்படி இருக்குமோ அந்த பெண் வடிவுக்கு பிறந்த நாள். அம்மணி இன்னும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள், அந்த வைராக்கியமும் வென்று நிலைத்து காட்டிய வகையும், இன்னும் தன் இடத்தை நம்பர் 1 ஆக வைத்திருப்பதும் சாதாரணம் அல்ல‌

அந்த மலையாள கலைமகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், அவர் இன்னும் பல வெற்றிகளை கொடுத்து பெரும் நடிப்பினையும் கொடுத்து எல்லா விருதுகளையும் பெற வாழ்த்துக்கள். இனிவரும் காலமெல்லாம் அவருக்கு ஒளிமயமாய் அமையட்டும்..

தமிழ் சினிமாவில் நீண்டகாலம் நம்பர் 1 இடத்தில் இருந்த நாயகி எனும் பெருமையுடன், அதுவும் இந்த காலத்திலும் அதே நம்பர் 1 இடத்தை நெடுங்காலம் வைத்திருக்கு நாயகி எனும் பெருமையுடன் வலம் வருகின்றது அம்மணி. அந்த தைரியத்துக்கும் லாவகத்துக்கும் திறமைக்கும் வாழ்த்துக்கள்.

நிச்சயம் நயன் நிறைய பெற்றிருக்கின்றார் ஆனால் அதைவிட நிறைய இழந்திருக்கின்றார், ஆனால் அந்த வலியினை எல்லாம் தாண்டி தன்னம்பிக்கை உழைப்பு திறமை இதை மட்டும் சிறகாக கொண்டு வானில் மின்னிகொண்டிருக்கின்றார். நிச்சயம் அதை வாழ்த்தத்தான் வேண்டும்.

 

Leave A Reply

Your email address will not be published.