நடிகர் ரஞ்சன் பிறந்த தினமின்று!

3

ரஞ்சன் கல்லூரியில் படிக்கும் போதே ஆண்டு விழாவொன்றில் நடனம் ஆடினார். அப்போது ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றி வந்த வேப்பத்தூர் கிட்டு என்பவர் இவரது நடனத்தைக் கண்டு பி. ஜி. ராகவாச்சாரி என்ற திரைப்பட இயக்குனரிரம் அறிமுகப்படுத்தினார்.

அவரது ரிஷ்யசிருங்கர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு ரஞ்சனுக்குக் கிட்டியது. 1941 ஆம் ஆண்டில் இத்திரைப்படம் வெளிவந்தது. உலக விவரம் எதுவும் தெரியாமல் காட்டில் வசித்து வந்த ரிஷ்யசிருங்கராக ரஞ்சனும் அவரை மயக்கி நாட்டுக்கு அழைத்துப் போக வந்த மாயாவாக வசுந்தராதேவியும் (இவர் வைஜயந்திமாலாவின் தாயார்) நடித்தனர்.

ஜெமினியின் நந்தனார் (1941) படத்தில் ரஞ்சன் சிவபெருமானாக சிவதாண்டவம் ஆடி இருந்தது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து பக்தநாரதர் (1942) என்ற படத்தில் ரஞ்சன் நடித்தார். ரஞ்சனின் முதல் வெற்றிப் படம் மங்கம்மா சபதம் (1943). இதில் ரஞ்சன் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார். வசுந்தாராதேவி இவருடன் இணைந்து நடித்திருந்தார்.

ரஞ்சனின் திரைப்பட வரலாற்றில் 1948 இல் வெளிவந்த சந்திரலேகா ஒரு புதிய ஏற்றத்தைக் கொடுத்தது. கதாநாயகனைவிட வில்லனாக நடித்திருந்த ரஞ்சனே ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தார். இது வசூலிலும் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது.

“நிஷான்” என்ற பெயரில் இந்தியிலும் இப்படம் வெளிவந்தது. நல்லவனும், கெட்டவனுமாக தமிழில் எம். கே. ராதா நடித்த வேடங்களை இந்தியில் ரஞ்சன் நடித்திருந்தார். இதையடுத்து ரஞ்சன் அகில இந்தியப் புகழைப் பெற்றார்.

நிஷானின் வெற்றியைத் தொடர்ந்து எஸ். எஸ். வாசன் தனது அடுத்த படமான “மங்களா”விலும் ரஞ்சனையே நடிக்க வைத்தார். ரஞ்சனின் வாள்வீச்சு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து “ஷின் ஷினாகி பூப்லபூ”, “சிந்துபாத்” என்று பல இந்திப் படங்களிலும் நடித்தார்.

சந்திரலேகா என்ற மறக்க முடியாத பாத்திரத்தை அதே பெயர்கொண்ட படத்தில் நடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, டி. ஆர். ராஜகுமாரி, சந்திரலேகா என்ற பாத்திரத்தில் சாலிவாகனன் (1945) என்ற படத்தில் நடித்தார். படத்தின் நாயகன் சாலிவாகனனாக நடித்தார் ரஞ்சன். ஒரு காதல் பாடலில், பந்துவராளி, காம்போதி, கௌளை, சிம்மேந்திரமத்தியமம் என்று மாறிமாறிப் பாடிக் கொள்கிறார்கள் ரஞ்சனும் ராஜகுமாரியும்.

என் மகள் 1954 இல் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து 1957 இல் நீலமலைத் திருடன் படத்தில் சாகசக் கதாநாயகனாக நடித்தார். அஞ்சலி தேவி இவருடன் இணைந்து நடித்தார். சத்தியமே லட்சியமாய் கொள்ளடா (டி. எம். சௌந்தரராஜன் பாடல்) என்ற பாடலை குதிரையில் ரஞ்சன் பாடிக்கொண்டு வருவார்.

1959 ஆம் ஆண்டில் மின்னல் வீரன், ராஜாமலைய சிம்மன் ஆகிய படங்கள் வெளிவந்தன. இவை எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அதே ஆண்டில் காப்டன் ரஞ்சன் என்ற படத்தில் ரஞ்சனாக நடித்தார். இது படுதோல்வியைச் சந்தித்தது. இதுவே அவர் நடித்த கடைசிப் படமாகும்.

Leave A Reply

Your email address will not be published.