குணசித்ர நடிகர் எஸ்.வி.சுப்பையா காலாமான தினம் இன்று

21

எம்.ஆர்.ராதா, நாகைய்யா, பாலைய்யா போன்ற குணசித்திர நடிகர்களின் வரிசையில் தமிழ்த்திரை உலகின் மறக்க முடியாத சிறந்த குணசித்திர நடிகர்களில் எஸ்.வி.சுப்பையா மிகவும் முக்கியமான ஒருவர். நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த “கப்பலோட்டிய தமிழன்” படத்தில் பாரதியாராகவே வாழ்ந்திருப்பார். இன்றும் பலருக்கு, பாரதியார் என்றால் சுப்பைய்யா தான் கவனத்திற்கு வருவார்.

சிவாஜி கணேசனுடன் பல படங்களில் நடித்தார். குறிப்பாக கப்பலோட்டிய தமிழன், பாவமன்னிப்பு, பாகப்பிரிவினை, இரும்புத்திரை, பொன்னூஞ்சல்,நீதி, அரங்கேற்றம் போன்றவை மறக்க முடியாத சிறந்த படங்கள்.

ஜெமினிகணேசனுடன் மணாளனே மங்கையின் பாக்கியம், சவ்பாக்கியவதி, வஞ்சிக்கோட்டை வாலிபன், ராமு, பார்த்திபன் கனவு ஆகிய படங்கள் சிறந்தவை. பார்த்திபன் கனவு படத்தில் ஓடக்கார பொன்னனாக வருவார்.

“ஆதிபராசக்தி” படத்தில் அபிராமிபட்டராக அற்புதமாக நடித்திருப்பார். அந்த நடிப்பை சொல்லால் கூறயியலாது. “சொல்லடி அபிராமி” என்ற பாடலில் நடிக்கும்போது, பக்திப் பிழம்பாக மாறிவிடுவார்.

எம்.ஜி.ஆருடன் இதயக்கனி என்ற படத்தில் நடித்தார்.

இவர் சொந்தமாக தயாரித்த படம் “காவல்தெய்வம்”. இப்படத்தில் ஜெயிலராக வந்து வெகு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படத்தில் அவர் பேச்சும் நடிப்பும் மிகையில்லாமல் சிறப்பாக இருக்கும். கவுரவ வேடத்தில் சிவாஜிகணேசன் பனைமரமேறும் சாமுண்டியாக நடித்தார். இப்படத்தின் கதை-வசனத்தை ஜெயகாந்தன் எழுதினார்.

சிறந்த குணச்சித்திர வேடங்களில் தமிழ்மனங்களில் பதிந்த எஸ்.வி.சுப்பைய்யா 29-1 (1980)-ல் காலமானார்.

Leave A Reply

Your email address will not be published.