1995-ல் உருவான திரைப்படம் முறைமாமன். சுந்தர்.சி இயக்கிய இப்படத்தில் குஷ்பூ, ஜெயராம், கவுண்டமணி, மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்படத்தை இயக்கியபோது குஷ்புவிற்கும் சுந்தர்.சி-க்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அந்த வகையில் இன்று குஷ்பு சுந்தர்.சி தம்பதிக்கு 22-வது திருமண நாள். அதை ஒட்டி குஷ்பூ “அப்போதில் இருந்து இப்போது வரை. என்னுடைய வாழ்நாளின் பாதியை உங்களுடன் செலவழித்திருக்கிறேன். இதை தவிர வேறென்ன வேண்டும் எனக்கு. நமக்கு ஓராண்டு கால அவகாசம் தர முடியாது என சொன்னார்கள், இன்று நாம் 22 ஆண்டுகளை கடந்து வந்திருக்கிறோம். லவ் யூ. உங்களுடனான இந்த வாழ்க்கை மிக அழகானது” என தெரிவித்து மகிழ்ந்து இருக்கிறார்.
இச்சூழலில் குஷ்பூ & சுந்தர் காதல் மலர்ந்த கதை-யை குஷ்பூ-வே சொன்னது நம் ஃபிலிம் நியூஸ் 24×7வாசகர்களுக்காக இதோ:
‘முறைமாமன்’ பட ஷூட்டிங் முதல் நாள் நடந்துக்கிட்டிருந்துச்சு. ஷூட்டிங் ஸ்பாட்டில் நானும், உபின் ஆன்டி (இவர் மும்பையை சேர்ந்தவர்-எனக்கு சிகை அலங்கார நிபுணராக இருந்தவர். திரைத்துறையில் நான் காலடி எடுத்து வைத்தது முதல் அவர் தான் எனக்கு வித விதமாக சிகை அலங்காரம் செய்து அழகுபடுத்துவார்.அவரை சிகை அலங்கார நிபுணராக மட்டும் நான் பார்த்ததில்லை. ஒரு தாயைப்போல் அருகில் இருந்து என்னை பார்த்துக்கொண்டவர். எப்போதுமே என் நிழலாக என்னுடனேயே இருப்பார்- இப்போ காலமாகிட்டார்). உட்கார்திருந்தோம்.
அப்போ எங்க முன்னாடி ஒருவர் வாட்ட சாட்டமாக அங்கிட்டும், இங்கிட்டும் சென்று கொண்டு இருந் தார். . நல்ல உயரமாக, கம்பீரமாகத்தான் இருந்தார்.ஆனா அப்போ நான் எதுவும் நினைக்கலை. ஆனால் ஆன்டிதான் அவரை பார்த்தது ‘குஷ்பு, உனக்கும் இந்த மாதிரி பையன் மாப்பிள்ளையாக கிடைத்தால் நல்லா இருக்கும்’ அப்ப்டீன்னார்.
அதைக்கேட்டதும் நான் சிரிச்சிக்கிட்டே ’அய்யோ ஆன்டி அவர் பாவம். அவர் தான் படத்தின் டைரக்டர் என்றேன். அது மட்டுமல்ல அவர் எவ்வளவு உயரமாக இருக்கிறார் பாருங்க-ன்னேன்.
உடனே ஆன்டி ‘ஏன்டி, அமிதாப்பச்சன்-ஜெயா ஜோடி நன்றாக இல்லையா… அமிதாப்பை விட ஜெயா குள்ளம் தான். ஆனாலும் அந்த ஜோடி எவ்வளவு அழகாக இருக்கிறது. அதேபோல் இந்த மாதிரியான பையன் உனக்கு கிடைத்தால் நீங்களும் சூப்பர் ஜோடியாகத்தான் இருப்பீர்கள்’ -ன்னார். இப்படி பேச்சுவாக்கில் எங்களுக்குள் உரையாடல் நடந்தது. ஆனால் என் மனதில் அந்த மனிதர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை.
அவருக்கும் அதுதான் முதல் படம், அவரைப்பற்றி எனக்கு முன்னே பின்னே தெரியாது. ஒரு டைரக்டர் என்ற ரீதியில் அவருடன் பேசுவதோடு சரி. அவருடன் நட்பு ரீதியாக பேசிக்கிடுவேன். அதே நேரம் அவருடன் ஒர்க் செஞ்ச எல்லோரும் யங்க்ஸ்டர்தான் யூனிட் முழுவதும் எப்போதும் கலகல என்று இருக்கும். செந்தில் அண்ணா, கவுண்டமணி அண்ணா, ஆச்சி மனோரமா, ஜெய்ராம் என்று எல்லோரும் செட் டையே கலகலப்பாக வைச்சிருப்பாங்க. கொஞ்ச நேரம் ஓய்வு கிடைத்தால் போதும் அரட்டை அடிப்பது, கிரிக்கெட் விளையாடுவது என்று ஷூட்டிங் தளமே அமர்க்களப்படும்.
ஆனா சினிமாவுக்கு வருவதற்கு முன்பு கோவையில் படித்து கொண்டிருந்த போது ‘வருஷம்-16’ படத்தை சுந்தர்சி பார்த்திருக்கிறார். அந்த படத்தில் என்னை பார்த்ததும் ‘அந்தப்பொண்ணு எவ்வளவு அழகா இருக்கிறார்… கட்டினால் இவளைப் போல் பெண்ணைத்தான் கட்ட வேண்டும் என்று தனது நெருங்கிய நண்பரான அய்யப்பனிடம் கூறி இருக்கிறார். அதன் பிறகு காலங்கள் உருண்டது. சுந்தரும் படித்து முடித்து விட்டு திரைத் துறைக்குள் வந்திருக்கிறார். என்னைப் போல் பெண்ணைத்தான் கட்டிக்க வேண்டும் என்று திரையில் பார்த்து ஆசைப்பட்டவர் என்னையே முறைமாமனாக (படம்) வந்து டைரக்டு செய்தது தான் காலம் போட்ட முடிச்சு.