அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் திரைக்காவியமாக வேண்டும் என்பது மறைந்த நடிகர் எம். ஜி. ஆரின் கனவு. அக்காவியத்தின் மீது அவர் கொண்ட தீராக் காதலால், பொன்னியின் செல்வன் படத்தை எடுப்பதற்கான உரிமையைப் பெற்றுவைத்திருந்தார். பின்னர், அவரே அந்த உரிமையை தேசிய மயமாக்கி கலைஞர்களுக்கு வாயில் கதவைத் திறந்து வைத்துச் சென்றார்.
ஒரு பக்கம் மணிரத்னம் இதை படமாக்கும் முயற்சியில் இருக்கும் நிலையில், அஜய் பிரதீப் என்பவர் வெப் சீரியலாக கொண்டு வருகிறார். இளையராஜா இசையில் உருவாகும் இதன் பெயர் “சிரஞ்சீவி பொன்னியின் செல்வன்’. 125 மணி நேரம் ஓடும் அளவுக்கு படமாக்கப்படவுள்ளது.
இது ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த வெப் சீரிஸானது முதல் 4 மாதங்களுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் 1 மணி நேரம் ஒளிபரப்பாகும். 4 மாதங்கள் கழித்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு மணி நேரம் என மாதம் தலா 8 மணி நேரம் ஒளிபரப்பாகும். மொத்தம் 9 சீசன்களாக ஒளிபரப்பாகும். ஒவ்வொரு சீசனுக்கும் இடையே 45 நாள்கள் இடைவெளி இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வனின் கதை எல்லா காலகட்டத்திலும் எல்லோராலும் கொண்டாடப்படும் கதை என்பதாலும் அறிவித்த நாள் முதல் ஒளிபரப்பாகும் வரை வெற்றிகரமாக நகர வேண்டும் என்பதாலும் சித்தர்களின் வழிகாட்டுதலின்படி இயக்குநர் அஜய் பிரதீப் இந்த புதிய வெப் ஃபிலிம் சீரிஸூக்கு “சிரஞ்சீவி என்ற பெயரை இணைத்து- “சிரஞ்சீவி பொன்னியின் செல்வன்’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார். நடிகர், நடிகைகள் விபரம் விரைவில் வெளியாகவுள்ளது.