சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் – 123

38

பீம்சிங், பி.ஆர்.பந்துலு. ஏபி, நாகராஜன் என்ற மும்மூர்த்திகள் கிடைக்க, சிவாஜியின் திரைப்பயணம் ஜெட் வேகமாகவே மாறியது..

டைரக்டர் பீம்சிங் பதிபக்தி, பாவமன்னிப்பு பாசமலர், பாலும் பழமும், படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும் என ‘’ப’’ வரிசை படங்களாய் எடுத்து வெற்றியாய் குவித்தார்.

பெரும்பாலும் வங்காள நாவல்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் சிவாஜி பல்வேறு பரிமாணங்களில் அற்புதமாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்..

பாவ மன்னிப்பில் திராவகம் ஊற்றி முகம் சிதைக்கப்பட்ட பாத்திரம், பாகப்பிரிவினையில் ஒரு கை வராத பாத்திரம், பார்த்தால் பசி தீரும் படத்தில் நண்பனின் முதல் மனைவியை காப்பாற்றுவதற்காக தன் காதல் வாழ்க்கையையே தியாகம் செய்ய துணியும் நட்பின் இலக்கணம் பாத்திரம்.. எத்தனை எத்தனை வித்தியாசமான பாத்திரங்கள்.. அடுக்கிக்கொண்டே போகலாம்.

இயக்குனர் பிஆர் பந்துலு இன்னொருபக்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் என சிவாஜியை காவியங்களின் நாயகனாக முத்திரை பதிக்கவைத்தார்.

ஆரம்பத்தில் சிவாஜியை வைத்து வடிவுக்கு வளைகாப்பு, குலமகள் ராதை, நவராத்திரி என குடும்ப படங்களை கொடுத்த ஏ.பி. நாகராஜன் திடீரென என்ன நினைத்தாரோ, புராண படங்களாய் எடுத்து சிவாஜியை விதவிதமான கடவுள் பாத்திரங்களில் காட்ட ஆரம்பித்தார்.

திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், கந்தன் கருணை, திருமால் பெருமை என நீண்ட பட்டியலில் திடீர் திருப்பமாக தில்லானா மோகனாம்பாள் வந்து இடம் பிடித்தார்..

மோகனா, வைத்தி, வடிவாம்பாள், ஜில்ஜில் ரமாமணி, தவில் வித்வான் ஆகியரெல்லாம் சுழன்று சுழன்று அடித்தும் தன்னுடைய பாத்திரமான நாயன வித்வான் சண்முக சுந்தரத்தை யாரும் நெருங்க முடியாமல் நடிப்பில் அவர் காட்டிய சாகசம், விவரிக்க வார்த்தைகளே போதாது..

Leave A Reply

Your email address will not be published.