அண்ணாத்த (திரைப்பட விமர்சனம்)

4

படம்: அண்ணாத்த

நடிப்பு: ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, ஜெகபதிபாபு,

இசை: டி.இமான்

ஒளிப்பதிவு: வெற்றி பழனிசாமி

தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்

இயக்கம்: சிறுத்தை சிவா

சூப்பர் ஸ்டாரின் குடும்ப பார்முளா என்றும் தோற்றதில்லை அதே கணக்குடன் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிவா.

ஊராட்சி மன்ற தலைவர் காளையனாக வரும் ரஜினிகாந்த் யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சாதவர். அவரது நேர்மையான போக்கால் சிக்கல்கள் தீர்க்கப்படுகின்றன். குடும்பம் என்று வந்ததும் பாசமலர் அண்ணனாக மாறிவிடுகிறார் ரஜினி. அவரது தங்கை கீர்த்தி சுரேஷ். ஊரே மெச்ச தங்கைக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி மாப்பிள்ளை தேடுகிறார். ஆனால் பாசத் தங்கை அண்ணனுக்கு தெரியாமல் காதலனுடன் வீட்டைவிட்டு ஓடிவிடுகிறார். தங்கையை  தேடி செல்கிறார் ரஜினி.  கொல்கத்தாவில் கீர்த்தி சுரேஷ் கஷ்ட நிலையில் வாழ்ந்து வருவதை கண்டு கண்கலங்குகிறார். அவரை இந்த கதிக்கு ஆளாக்கியவர்களை கண்டுபிடித்து தக்க பதிலடி தருகிறார்.

அண்ணாத்தையானாலும் அண்ணாமலையானாலும் எந்த மீட்டருக்கள்ளும் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதில் சூப்பர் ஸ்டாருக்கு நிகர் சூப்பர்ஸ்டார்தான் என்று சொல்லும் அளவுக்கு கதாபாத்திரத்தில் மூழ்கிப்போயிருக்கிறார் ரஜினி. தங்கை ஊரிலிருந்து வருகிறார் என்பதை விழாபோல் கொண்டாடும்போதே தங்கை மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை உணர்த்தி விடுகிறார்.

கீர்த்தியும் தங்கை கதாபாத்திரத்தில்  அண்ணனை விட்டுக்கொடுக்காமல் புகழ் பாடி ஜமாய்க்கிறார். இரண்டாம் பதியில்தான் அழுகை கீர்த்தியாகிவிடுகிறார்.

இளமை துள்ளலிலும், ஆக்‌ஷன் அதிரடி காட்டும்போதும் வழக்கமான தனது கம்ப்பிர நடையை காட்டும்போதும் ரஜினிக்கு எனர்ஜி எங்கிருந்து  வருகிறது என்பது புதிர்தான். முகத்தில் மேக்கப் ஏறிவிட்டால் அவரது  நாடி நரம்புகளில் அந்த பாத்திரம் ஊடுருவி விடுவதுதான் இதற்கான விடை என எண்ணத் தோன்றுகிறது.

குஷ்புவும், மீனாவும் ரஜினியின் முறைப்பெண்களாக நடித்திருக்கின்றனர். நயன்தாரா வழக்கறிஞராக ரஜினியின் ஜோடியாக ஜாடிக்கேற்ற மூடியாக பொருந்தி இருக்கிறார். ரஜினியின் உதவியாளராக சூரி வாய்ப்பை நல்ல விதத்தில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

ஜெகபதிபாபுவின் விடாகண்டத்தனமான வில்லத்தனம் காட்சிகளுக்கு வேகம் ஏற்ற அதை தவிடு பொடியாக்கி அரங்கை ஆர்ப்பரிக்க செய்கிறார் ரஜினிகாந்த்.

குடும்ப கதையில் ஆக்‌ஷன், தங்கை பாசம் என்று ருசியான அவியலாக கதையை படைத்திருக்கிறார் சிவா.

ஆயிரம் படங்கள் பார்த்தாலும் ரஜினியின் நடிப்;பில் இதுபோன்ற கதைகள் பார்க்கும்போது அதற்கு தனி ஈர்ப்பு உண்டு என்பதை அண்ணாத்த படமும் நிரூபிக்கிறது.

டி.இமான் இசை ரஜினி ரசிகர்களுக்கும்  ஏற்பவும், தந்து ஸ்டைலுக்கு ஏற்ப மெலடியாகவும் ரகத்துக்கொன்றாக பாடலை போட்டு பணியை சிறப்;பாக செய்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குனர் சிவா ரசிகர்களையும் பெண்களையும் கவரும் வகையில் படத்தை இயக்கி வெற்றிகனி பறித்திருக்கிறார்.

அண்ணாத்த – ரஜினியின் அசத்தல் ஆக்‌ஷன், குடும்ப செண்டிமெண்ட்.

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.