படம்: அப்பாத்தவ ஆட்டய போட்டுட்டாங்க
நடிப்பு:சந்திரஹாசன், ஷீலா, இளவரசு, டெல்லி கணேஷ், சண்முகசுந்தரம், காத்தாடி ராமமூர்த்தி, ஜெயராவ்
இசை: எஸ்.செல்வகுமார்
ஒளிப்பதிவு: பிரவின்குமார் .என்.
தயாரிப்பு:டாக்டர் ஜே ஜாஸ்மின்
இயக்கம்: என் ஸ்டீபன் ரங்கராஜ்
ரிலீஸ்: சோனி லைவ் ஒ டி டி தளம்
படத்தின் டைட்டிலே இதுவொரு காமெடி படம் என்று காட்டிக் கொடுக்கிறது. ஆனால் அதற்குள் அர்த்தம் பொதிந்த கருத்தையும் வைத்திருக்கிறார்கள் என்பது கிளைமாக்ஸில் தெரிகிறது.
வீட்டில் மனைவியின் இம்சை பொறுக்க முடியாமல் பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார் மகன். வீட்டில் யாருடனும் பேசாமல் உன் மனைவி சொல்படி கேட்டு நடந்துக்கொள்கிறேன் என்னை முதியோர் இல்லத்தில் விட வேண்டாம் என்று மகனிடம் கெஞ்சுகிறார் தாய். அதை காதில் வாங்காமல் செல்கிறார் மகன். ஒரு கட்டத்தில் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய் அங்கிருக்கும் முதியவர் சந்திரஹாச னுடன் இணைந்து வாழ முடிவு செய்து அவருடன் வெளியேறுகிறார். இதை யறிந்து பதட்டமடையும் மகன், தாய் செய்யும் இந்த காரியம் வெளியில் தெரிந்தால் அவமானமாகிவிடும் என்று கலங்கி அவரை தேடி அழைத்து வர எண்ணுகிறார் மகன். இதற்கிடையில் அந்த தாய்க்கும், சந்திரஹாசனுக்கும் திருமணம் செய்து வைக்க சில பெரிசுகள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்கின்றனர். இதன் முடிவில் நடப்பதுஎன்ன என்பதை கலகலப்புடனும் உருக்கமுடனும் கிளைமாக்ஸ் விளக்குகிறது.
வயதான ஜோடியாக சந்திரஹாசன் (கமல்ஹாசன் சகோதரர்), மற்றும் ஷீலா நடித்திருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் கடைசி வரை அமைதி யாக உட்கார்ந்து நடப்பதை வேடிக்கை பார்க்கும் வேலையைத்தான் இயக்குனர் தந்திருக்கிறார். அவர்களை வைத்துக் கொண்டு வயது முதிர்ந்த நண்பர்கள் டெல்லி கணேஷ், சண்முக சுந்தரம், காத்தாடி ராமமூர்த்தி, ஜெயராவ் ஆகியோர் போடும் திருமண திட்டம் தான் கதையை கடைசிவரை கலகலப்பாக நகர்த்துகிறது.
தெருவில் அமர்ந்து பூ விற்கும் பெண்ணுக்கு தெரியாமல் சந்திர ஹாசனையும், ஷீலாவையும் திருமணம் செய்துவைக்க காரில் அழைத்துச் செல்ல பெரிசுகள் போடும் திட்டம் காமெடியில் முடிகிறது. எல்லா கோஷ்டியும் போலீஸ் நிலையத்துக்குள் வந்து அடிக்கும் லூட்டி வயிற்றை பதம் பார்க்கிறது.
காமெடியாக நடக்கும் திருமண கூத்து திடீரென்று சென்டிமென்ட்டாக மாறிவிடுகிறது.
தன்னை முதியோர் இல்லத்தில் விட்ட மகனை பார்த்து தாய் ஷீலா கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மகன் திணறுவதும் பின்னர் அவர் காலில் விழுந்து கதறுவதும் கண்களை குளமாக்கிறது.
வயதான பெற்றோரை பாதுகாப்பது பெற்ற பிள்ளைகளின் கடமை என்பதை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் புரியவைத்திருக்கிறார் இயக்குனர் என் ஸ்டீபன் ரங்கராஜ்.
ஒளிப்பதிவும் இசையும் காட்சிகளுக்கு கைகொடுத்திருக்கிறது.
அப்பாத்தவ ஆட்ட போட்டுட்டாங்க- சொல்ல வேண்டிய நிஜம்.