ஐங்கரன் – விமர்சனம்!

23

டிப்பு: ஜி.வி.பிரகாஷ், மகிமா நம்பியார், ஆடுகளம் நரேன், காளி வெங்ஜட், அருள்தாஸ், ஹரிஸ் பெராடே, அழகம் பெருமாள், சரவண சுப்பையா மற்றும் பலர்

தயாரிப்பு: பி.கணேஷ்

இசை: ஜி.வி.பிரகாஷ்

ஒளிப்பதிவு: சரவணன் அபிமன்யூ

இயக்கம்: ரவி அரசு

தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் உள்ள நகைக்கடைகளில் ஒரு வட மாநிலக் கும்பல கொள்ளையடித்து விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் கொள்ளையடித்த நகை மூட்டை நாமக்கலில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிடுகிறது. அதனை எடுப்பதற்காக ஒரு குழந்தையை கடத்தி வந்து அந்த ஆழ்துளை கிணற்றில் போட்டுவிடுகிறது கொள்ளைக் கும்பல்.

இன்னொரு பக்கம் போலீஸ்காரர் மகனான, புத்தம் புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் செலுத்தும் இன்ஜினியரிங் பட்டதாரியான நாயகன் ஜி.வி.பிரகாஷ் குழந்தையைக் கிணற்றில் இருந்து மீட்க புதிய இயந்திரம் ஒன்றை கண்டுபிடிக்கிறார். அதைக்கொண்டு அவர் அந்தக் குழந்தையை மீட்க முயலும் போது அதை கொள்ளை கும்பல் தடுக்கப் பார்ப்பதும், அதையும் மீறி நடந்தது என்ன என்பதை பரபரப்பாக மட்டுமின்றி ரசிக்கும்படி சொல்வதுதான் ஐங்கரன்.

நாயகன் ஜிவி பிரகாஷ் – ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கமிட் ஆன படம்.. மிடில் கிளாஸ் ஃபேமிலியைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிடைக்கும் பொருட்களை வைத்து புதிய கருவிகளை கண்டுபிடித்து, அதற்கான அங்கீகாரம் பெறுவதற்காக உரிய அலுவலகத்துக்கு சென்று தனது கண்டுபிடிப்புகளை விளக்கும் ரோலையும். பல அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இளைஞர்களின் முயற்சி வீணாக்கப் படுவதை தத்ரூபமாக வெளிக்காட்ட முயன்று இருக்கிறார்.

ஹீரோயின் மஹிமாவுக்கு பெரிய வேலை எதுவும் இல்லாததால் அவரது நடிப்பை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை. காளிவெங்கட், ஹரீஷ் பெராடி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தங்கள் பாத்திரங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

ஜி.வி.யின் இசையில் பாடல்களை காட்டியிலும் பின்னணி இசை ஓங்கி ஒலிக்கிறது. அதிலும் இரண்டாம் பாதியில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குழந்தையை மீட்கும் காட்சிகளில் ஹார்ட் பீட்டை அதிகரிக்கிறது பின்னணி இசை. படத்தின் மற்றொரு பலம் சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு. அபாரமான உழைப்பால் படத்தை தூக்கி நிறுத்துகிறார். தனது நேர்த்தியான எடிட்டிங்கால் படத்தை தொய்வில்லாமல் கொண்டு போயிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராஜா முகம்மது.

ஈட்டி படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த வெற்றிமாறனின் உதவியாளர் ரவி அரசு இப்படத்தின் மூலம் கமர்ஷியல் கலந்த கருத்துப் படத்தைக் கொடுத்துள்ளார். எடுத்துக் கொண்ட கதையை வலுவாகவும், நம்பகத்தன்மையுடனும் வழங்கி டைரக்டர் படமென்பதை நிரூபித்து விட்டார்

மொத்தத்தில் ரியல் குட் ஃபிலிம் லிஸ்டில் இணைக்க வேண்டிய படமிது

 

 

Leave A Reply

Your email address will not be published.