பீஸ்ட் – விமர்சனம்!

1

டிப்பு: விஜய், பூஜா ஹெக்டே செல்வ ராகவன், யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, வி.டி.வி. கணேஷ், பிஜ்ரோன் சுரோ, அபர்ணாதாஸ் , சைனி டாம் சாக்கோ, லில்லிபுட், அங்குர் அஜீத், விகல்,

தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா

இயக்கம்: நெல்சன் திலீப்குமார்

ரிலீஸ்: ரெட் ஜெயன்ட்

இந்திய ராணுவத்தின் முக்கியமான ரா பிரிவில் பணியாற்றி வரும் நாயகன் விஜய், தீவிரவாதி உமர் பரூக் என்பவரை பிடிக்க முயற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக ஒரு குழந்தை இறந்து விடுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் விஜய், ராணுவ வேலையை விட்டு, சென்னை வந்து விடிவி கணேஷ் நடத்தி வரும் செக்யூரிட்டி அலுவலகத்தில் வேலை செய்கிறார். வந்த இடத்தில் காதலி பூஜா ஹெக்டேவுடன் ஒரு மாலுக்கு செல்லும் போது அந்த மாலைக் கைப்பற்றிய தீவிரவாதிகள் அங்குள்ளவர் களை பணைய கைதிகளாக பிடித்து வைக்கிறார்கள். மேலும் விஜய்-யால் கைது செய்யப்பட்ட உமர் பரூக்கை விடுவிக்க கோரிக்கை வைக்கிறார்கள். அதையடுத்து விஜய், மாலுக்குள் இருக்கும் தீவிரவாதிகளை அழித்து பொதுமக்களை எப்படி காப்பாற்றினார்? என்பதே படத்தின் கதை.

தளபதி விஜய் வீரராகவன் ரோலில் வந்து நடித்து அசத்தி இருக்கிறார் விஜய். சண்டைக்காட்சிகளில் மாஸ் காண்பித்து இருக்கிறார். குறிப்பாக டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். நாயகர்களில் இவருக்கு மட்டும் வயசே அதிகரிக்காததன் ரகசியத்தை எப்படியாவது அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையை தூண்டும் தோற்றப் பொலிவுடன் ஒட்டுமொத்த படத்தையும் ‘ஒன்மேன் ஆர்மி’யாக சுமந்து செல்கிறார். என்ன நடந்தாலும் பெரிய அளவில் முகத்தில் உணர்ச்சிகளை வெளிபடுத்த தேவையில்லாததை புரிந்து அசத்துகிறார். இவரை தொடர்ந்து படத்தில் பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், உள்ளிட்டோர் படத்தில் தங்களுடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும் தங்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். டைரக்ஷனில் ஜீனியஸ் என்று பெயரெடுத்த செல்வராகவன், நடிகராகவும் அவதரித்து அட்டகாசமாய் விளையாடியுள்ளார். எதார்த்தமான செல்வராகவனின் நடிப்பு பல இடங்களில் பாராட்டும் வகையில் உள்ளது.

இந்த படத்தின் இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர் அனிருத். இவரது பாடல்களும், பின்னணி இசையும் படத்தைத் தூண் போல் நின்று தாங்கிப்பிடித்துக் காப்பாற்றியுள்ளது. சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கும் இசையால் அதிரச் செய்துள்ளார் அனிருத். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் ஆக்ஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதகளம். அதேபோல் கிளைமாக்ஸ் காட்சிகளைத் திறம்படக் கையாண்டுள்ளார்.

துப்பாக்கி, கத்தி சண்டைக் காட்சிகளில் ஒலி வடிவமைப்பு குழுவின் உழைப்பும் அபாரம். அழகிய கூத்தன், சுரேன் இருவரின் ஒலி வடிவமைப்பு அருமை. ஸ்லோ மோஷன் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என எல்லாவற்றிலும் பூந்து விளையாடியிருக்கிறது மனோஜ் பரமஹம்சாவின் கேமரா.

“ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு இந்தில டிரான்ஸ்லேட் பண்ணிக்கிட்டு இருக்க முடியாது. வேணும்னா நீயே தமிழ் கத்துக்க” என ஒற்றை வசனத்தில் அப்ளாஸ் வாங்கிய நெல்சன் தன் ஹீரோ விஜயை விஜய்காந்த் மற்றும் அர்ஜூன் பாணிக்கு மாற்ற முயற்சி செய்து இருக்கிறார்.. அதை ஒட்டி உருவாக்கிய திரைக் கதைக் குறித்து எவ்வளவோ குறைகள் சொல்லலாம் என்றாலும் முழுமையான ஒரு கமர்ஷியல் ஹீரோவை வைத்து ஒரு பக்கா எண்டெர்டெயிண்ட்மெண்ட் சினிமாவைக் கொடுத்து இருக்கும் நெல்சனை பாராட்டியே ஆக வேண்டும்

மொத்தத்தில் இந்த பீஸ்ட் – பக்கா கமர்ஷியல் மாஸ் படம்

Leave A Reply

Your email address will not be published.