பிளட்மணி (திரைப்பட விமர்சனம்)

5

படம்: பிளட் மணி (Blood Money)

நடிப்பு: பிரியா பவானி சங்கர், கிஷோர், ஷிரிஷ், பஞ்சு சுப்பு, வினோத் சாகர், ஸ்ரீலேகா ராஜேந்திரன்

ஒளிப்பதிவு: ஜி.பாலமுருகன்

இசை:சதிஷ் ரகுநந்தன்

தயாரிப்பு: இர்பான் மாலிக்

இயக்கம்: சர்ஜுன் கே.எம்.

ரிலீஸ்: ZEE 5

குவைத்துக்கு வேலை செய்யச் சென்ற அண்ணன், தம்பி இருவரும் கார் ஏற்றி பெண்ணை கொன்ற வழக்கில் அகப்பட்டுக் கொள்கின்றனர். அவர்களுக்கு அந்நாட்டு நீதி மன்றம் தூக்கு தண்டனை அளிக்கிறது. மறுநாள் தூக்கு தண்டனை என்று அறிவிக்கப்பட்ட தகவல் தமிழ்நாட்டிலிருக்கும் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படுகிறது . இதையறிந்து கிஷோரின் தாயும். கிஷோரின் மகளும் அழுகின்றனர். தண்டனையிலிருந்து இருவரையும் மீட்க வழி தெரியாமல் இருக்கும் நிலையில் இந்த விவகாரம் டிவிக்கு செல்கிறது. டிவியில் நிருபராக பணிபுரியும் ரெய்ச்சல் (பிரியா பவானி சங்கர் ) இந்த வழக்கை கையிலெடுக்கிறார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்ததா? இரண்டு உயிர்களும் தூக்கிலிருந்து பிழைக்கி றதா என்பதற்கு திகில் பரவ பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

டிவி நிருபர் ரெய்ச்சலாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். கதையை தோளில் சுமக்கும் கதாபாத்திரம் என்பதால் மிகவும் கவனமாக நடித்திருக்கிறார்.

குவைத் தூக்கு கைதிகளை காப்பாற்றும் முயற்சியை செய்தியாக்கி விடை தேடலாம் என்று பிரியா பவானி சொல்ல அதற்கு அலுவலகத்திலிருக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் அதுபற்றி பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது முயற்சியை விடாப்பிடியாக பிரியா பவானி மேற்கொள்வதும் அதேபோல் அரசியல் வாதியிடமிருந்து வரும் அழுத்தத்துக்கு பயப்படாமல் செய்தியை டிவியில் தொடர்ந்து வெளியிடும் செய்தி ஆசிரியர் பஞ்சு சுப்புவும் கதையின் தொடர் ஓட்டத் துக்கு கைகொடுக்கின்றனர்.

குறிப்பாக பிரியா பவானி குற்றவாளிகளின் தண்டனை குறைப்பதற்காக இறந்த பெண்ணின் குடும்பத்தாரை தேடி படகில் இலங்கை செல்வதான முயற்சி பரபரப்பு.

தூக்கு தண்டனை கைதி கிஷோர் அவரது தம்பி இருவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை அறிந்து பதறுவது உருக்கம். கிளைமாஸில் இருவரையும் தூக்கு மேடையில் ஏற்றி கயிற்றை இழுக்க அந்த நேரத்தில் ஏற்படும் திருப்பமும் அப்ளாஸ் பெறுகிறது.

ஜி. பாலமுருகனின் கேமிரா, காட்சிகளை தத்ரூபமாக படமாக்கி இருக்கிறது. இசை அமைப்பாளர் சதிஷ் ரகுநந்தன் காட்சியோடு ஒன்றி இசை அமைத்திருப் பதால் ரசிக்க முடிகிறது.

தூக்கு கயிற்றின் முன் ஊசலாடும் இரண்டு உயிர் களை மீட்கும் போராட்டமாக கதையை இயக்குனர் சர்ஜுன் கே எம். வடிவமைத்திருப்பது இறுதிவரை என்னவாகுமோ என்ற தொடர் பயமாக மாற்றியிருப் பது திகில் வெற்றி.

பிளட்மணி – மனதை சிலிர்க்கும் உணர்வுபூர்வ படைப்பு.

Leave A Reply

Your email address will not be published.