கார்பன் (திரைப்பட விமர்சனம்)

10

படம் : கார்பன்

நடிப்பு: விதார்த், தான்யா பாலகிருஷ்ணன், மாரிமுத்து, மூணாறு ரமேஷ், மூர்த்தி, ராம்சன் வினோத் சாகர், டவுட் செந்தில், பேபி ஜானு பிரகாஷ்

இசை: சாம் சி.எஸ்,

ஒளிப்பதிவு: விவேக் ஆனந்தம் சந்தோஷ்

தயாரிப்பு: பெஞ்ச் மார்க் பிலிம்ஸ் ஜோதி முருகன், பாக்யலட்சுமி

இயக்கம்: சீனுவாசன்

ஹீரோ விதார்த் கனவில் காண்பது நிஜத்தில் நடக்கிறது. தனது தந்தை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுவதுபோல் கனவு வருகிறது. அந்த விபத்தை தடுக்க விதார்த் முயல்கிறார். அதற்குள் தந்தை விபத்தில் சிக்கி விடுகிறார். ஆபத்தான நிலையில் தந்தையை மருத்துவமனையில் சேர்க்கிறார் விதார்த். தந்தையை விபத்து ஏற்படுத்தி கொல்ல முயன்றது யார் என்பதை மீண்டும் கனவில் காண முயற்சிக்கிறார். நீண்ட முயற்சிக்கு பிறகு அந்த கொலையாளி யார் என்பது தெரிகிறது. அடுத்து விதார்த் எடுத்த ஆக்‌ஷன் என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

விதார்த்துக்கு பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது கார்பன்.

கனவில் வருவதுபோல் சம்பவங்கள் நிஜமாவது குறித்து ஆச்சர்யம் அடையும் விதார்த் தனது தந்தை விபத்தில் சிக்கப் போகிறார் என்பதையும் கனவில் கண்டு அதிர்ச்சி அடைவதும் அவரை விபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற வேகம் காட்டுவதும் பரபரப்பு.

கம்பத்தில் தலையில் முட்டிக்கொள்வது, ஓட்டலில் பிரியாணி சாப்பிடுவது, ஷேர் ஆட்டோவில் செல்வது, பார்வையற்ற சிறுமிக்கு உதவுவது என்று திரும்ப திரும்ப ஒரே காட்சிகளில் பலமுறை விதார்த் நடித்தாலும் அக்காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தவில்லை. எப்படியாவது பாதியில் முடிந்த கனவு மீண்டும் விதார்த்துக்கு தொடர்ச்சியாக வராதா? தனது தந்தையை கொல்ல முயன்ற கார் டிரைவர் யார் என்பது தெரிந்துவிடாதா? என்ற பரபரப்பு அரங்கு முழுவதும் பரவிவிடுகிறது.

விதார்த்தின் தந்தையாக மாரிமுத்து குப்பை வண்டி டிரைவராக நடித்திருக் கிறார். மகன் மீது இருக்கும் பாசத்தை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தும் போது நிஜ தந்தையாக மாறிவிடுகிறார்.

தான்யா பாலகிருஷ்ணன் ஹீரோயினாக இருந்தாலும் வில்லித்தன மாகவும் தனது நடிப்பை வெளியிட்டு அசத்தி இருக்கிறார்.

விஜய் ஆண்டனி நடித்த அண்ணாதுரை படத்தை இயக்கிய சீனுவாசன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். பட டைட்டிலை வித்தியாசமாக வைத்தது போல் கதை திரைக்கதையையும் வித்தியாசப்படுத்தி ஆர்வத்தை தூண்டி விடுகிறார்.

ஒளிபதிவாளர் விவேக் ஆனந்தம் சந்தோஷ், இசை அமைப்பாளர் சாம் சி.எஸ் ஆகியோரின் பணிகளும் படத்தின் விறுவிறுப்புக்கு துணை நிற்கின்றன.

கார்பன் – சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர்.

Leave A Reply

Your email address will not be published.