சக்ரா (பட விமர்சனம்)

14

படம்: சக்ரா
நடிப்பு: விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா, ரோபோ சங்கர், மனோபாலா,

ஒளிப்பதிவு:கே.டி.பாலசுப்ரமணியம்
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: விஷால் ஃபிலிம் பேக்டரி
இயக்கம்: எம்.எஸ்.ஆனந்தன்

சென்னையில் ஒரே நாளில் 50 வீடுகளில் பணம் நகை கொள்ளையடிக் கப்படுகிறது. வயதானவர்கள் தங்கி இருக்கும் வீடுகளாக பார்த்து இந்த கொள்ளை நிகழ்த்தப்படுகிறது. விஷாலின் பாட்டி வீடும் இதில் ஒன்று. விஷயம் அறிந்து ராணுவத்தில் பணிபுரியும் விஷால்  பாட்டி வீட்டுக்கு வருகிறார். இதற்கிடையில் போலீஸார் காயம் அடைந்திருக்கும் பாட்டியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். யார் கொள்ளை அடித்திருப்பார்கள் என்று குழப்பத்தில் இருக்கும் போலீஸாருக்கு உதவுகிறார் விஷால். இணையதளத்தில் உள்ள ஆப் பயன்படுத்தியும்,. போலி செல்போன் எண்களை வைத்தும் கொள்ளை நிகழ்த்தப்பட்டதை கண்டறிகிறார். கொள்ளை அடிக்க கம்ப்யூட்டர் டெக்னாலஜி தெரிந்த பெண் ஒருவர் சம்பந்தபட்டிருப்பதையும் கண்டறிகிறார். அதன்பிறகு அவரை வலைவீசி எப்படி விஷால் பிடிக்கிறார் என்பதே கதை.

இணைய தள மோசடிகள் வரிசையில் வந்திருக்கும் மற்றொரு விழிப்புணர்வு படமென்றும் சொல்லலாம். விஷாலின் ஆக்‌ஷன் காட்சிகளும், புத்திசாலித்தனமான துப்பறியும் காட்சிகளும்  படத்தின் விறுவிறுப்பான ஓட்டத்திற்கு தீனி போடுகிறது.

ஆன்லைனில் எப்படியெல்லாம் மோசடி நடக்கிறது எப்படியெல்லாம் கொள்ளை சம்பவத்துக்கு ரூட் பிடிக்கிறார்கள் என்பதை நூல் பிடித்து துல்லியமாக விஷால் கண்டுபிடிப்பது பரபரப்பு. பிளம்பர். எலக்ட்ரிஷியன் போன்றவர்களை ஆன்லைன் மூலமாக புக் செய்து வரவேற்பதில் உள்ள ஆபத்தை தெளிவாக விளக்குவதும் அதை கண்டதும்  இப்படிகூடவா நடக்கும் என்ற வியப்பை ஏற்படுத்துகிறது.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது ஒரு பெண் என்று விஷால் சொல்லும்போது அதிர்ச்சி பிறக்கிறது. அடுத்த நொடி ரெஜினாவின் எண்ட்ரியுடன் புது களத்துக்குள் நுழைகிறது கதை. ரெஜினாவை நேக்காக கண்டறியும் விஷால் அவரிடம் சவால் விட்டு துரத்துவது விறுவிறு.  தந்தையின் வீர சக்ரா விருதை கண்டுபிடிக்கப்போய் பலே  கொள்ளை கூட்டத்தையே சுற்றி வளைப்பது சுவாரஸ்யம்.

காதல் காட்சிகளில் ரொமான்ஸ் செய்துகொண்டிருந்த ரெஜினா கொள்ளைக்காரியாக புது அவதாரம் எடுத்திருக்கிறார். அசால்ட்டாக அவர் செய்யும் வில்லத்தனங்களில் சூடுபறக்கிறது. தன்னை யார் என்று விஷால் கண்டுபிடித்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரது பிடியிலிருந்து தப்பிக்க போடும் திட்டங்கள் எடுபடாமல் போவதை கண்டு விரக்தி அடைவதும் கடைசியில் விஷாலிடமிருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்தும் அது காமெடியாக முடிவது ரசிக்க வைக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கே. ஆர்.விஜயா திரையில் தோன்றி இருக்கிறார். விஷாலின் பாட்டியாக வந்து எதார்த்தமாக நடித்திருக்கிறார். ஏடாகூடமாக பேசி சிரிப்பூட்டுகிறார் ரோபோ சங்கர். ஷ்ரத்தா ஸ்ரீநாத் பெண் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

விஷால் ஃபிலிம் பேக்டரி படத்தை தயரித்திருக்கிறது.ஆனலைன் மோசடியின் இன்னொரு பரிமணத்தை காட்டி இருக்கிறார் இயக்குனர்   எம்.எஸ்.ஆனந்தன். யுவன் சங்கர் ராஜா இசை கூர் தீட்டுகிறது

சக்ரா- இணைய மோசடிக்கு சவுக்கடி.

Leave A Reply

Your email address will not be published.