எங்கள் குடும்ப திருமணங்களை நடத்திய முதல்வர்கள்!

26

 

வேல்ஸ் கல்விக் குழுமத்தின் தலைவர் ஐசரி கணேசன்: காலேஜ் படிச்சிட்டு இருக்கும் போதே அப்பா, நடிகர் ஐசரி வேலன் தவறிட்டார். அதன்பின் குடும்பச்சுமை என் மீது விழுந்துச்சு. அப்பா, சினிமாவுல நடிச்சிருந்தாலும், அரசியல் சார்ந்து வேலை பார்த்திருந்தாலும், அப்பாவுடைய இறப்புக்கு பின், வீட்டுல ஏழ்மையான நிலை தான்.

அந்த நேரத்துல எம்.ஜி.ஆரை சந்திச்சு, வீட்டோட நிலைமையை சொன்னேன். அவரின் உதவியால் தான், எங்க குடும்பம் இன்னைக்கு நல்ல நிலையில இருக்கு.எங்க வாழ்க்கைக்கு பெரும் உதவியா இருந்தது, எம்.ஜி.ஆர்., தான். அவர் தான் என் தங்கை மகாலட்சுமி திருமணத்தை நடத்தி வெச்சார். என் கல்யாணத்தை, ஜெயலலிதா நடத்தி வெச்சாங்க. இன்னொரு தங்கை அழகு தமிழ்ச்செல்வி திருமணத்தை, கருணாநிதி நடத்தி வெச்சாரு. மூன்று முதல்வர்கள் எங்க குடும்ப திருமணத்தை நடத்தி வெச்சது, பெருமையான விஷயம்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்ன்னு சொல்வாங்க. ஆர்த்தி, இறைவனால் எனக்கு கிடைச்ச வரம். வேல்ஸ் குரூப் ஆப் ஸ்கூல்சை பார்த்துக்குறாங்க. இந்த வருஷத்துல தான் எங்களுடைய, சில்வர் ஜூப்ளி திருமண விழாவை கொண்டாடினோம். எங்க வீட்டுல சந்தோஷத்தை நிரப்புறது எங்களுடைய குழந்தைகள் தான். என் மூத்த பொண்ணு ப்ரீத்தா, படிப்புல கில்லி. லண்டன் வரை போய் படிச்சுட்டு, பட்டம் வாங்கிட்டு வந்துட்டா. இப்போ வேல்ஸ் குரூப் ஆப் இன்ஸ்டிடியூட்டின் துணைத் தலைவரா இருக்காங்க.

லண்டன் கல்வித்தரம் மாதிரியே நம்ம யுனிவர்சிட்டியையும் மாத்தணும்ன்னு ஆசைப்படுறாள்; நிச்சயமா நிறைவேற்றுவாள். சின்னப்பொண்ணு குஷ்மிதா, லாயருக்கு படிச்சிட்டு இருக்காள். வீட்டோட சுட்டிப்பையன் சர்வேஷ். நான் எவ்வளவு பிசியா இருந்தாலும், குடும்பத்தோட நேரம் செலவழிக்க தவறியது இல்லை. என் பெரிய பொண்ணு மேற்படிப்பு படிக்க, லண்டன் போனப்ப, அவளை பிரிய முடியாம நான் ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனா, அவள் படித்து, பட்டம் வாங்கும் போது, ரொம்பவே சந்தோஷப்பட்டோம். அவள் பட்டம் வாங்குறப்போ லண்டன் போயிட்டு வந்தது தான், எங்களோட கடைசி பாரின் ட்ரிப்.

நான் படங்கள் தயாரிக்க வந்ததுக்கு, மிக முக்கிய காரணமே, பிரபுதேவா மாஸ்டர் தான். நான் வாழ்க்கையில சந்திச்ச பல மனிதர்கள் என்னோட சந்தோஷத்துல உறுதுணையா இருந்திருக்காங்க. அதுல முக்கியமானவர் பிரபுதேவா. என் கடைசி பையன் பிறந்தப்போ மருத்துவமனையில என் கூடவே இருந்தார். என்னை பிரபுதேவா ஸ்டுடியோஸ்ங்கிற நிறுவனத்தை துவங்க வெச்சதும் அவர் தான்!

Leave A Reply

Your email address will not be published.