உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘கம்பெனி’

0

கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பேருந்துகளின் முழு வடிவமைப்பு தொழிற்சாலை ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக
வைத்து உருவாகியுள்ள
இப்படத்தை செ.தங்கராஜன் இயக்க, ஸ்ரீ மகானந்தா சினிமாஸ் சார்பில் ஆர்.முருகேசன் மிகப்பெரிய பொருட்ச்
செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகர்களாக ‘கோலி சோடா’ புகழ் பாண்டி, முருகேசன் மற்றும் அறிமுக நடிகர்கள் டிரிஷ் குமார், பிரித்வி ஆகியோர்
நடித்திருக்கிறார்கள்.
நாயகிகளாக ‘கன்னி மாடம்’ படத்தில் நடித்த வளினா மற்றும் ‘திரெளதி’ படத்தில் நடித்த காயத்ரி ஆகியோர்
நடித்திருக்கிறார்கள்.

பஸ்களை முழுமையாக வடிவமைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்யும் நண்பர்களான நான்கு இளைஞர்கள், ஒரு லட்சியத்தோடு
பயணிக்கிறார்கள்.
அவர்களுடைய அந்த லட்சிய பயணத்தில் வரும் பிரச்சனைகளும், அவர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்,
என்பது தான் படத்தின் கதை.

அந்த இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையின் பின்னணி என்ன? என்பது தான் நடந்த உண்மை சம்பவமாகும். மேலும், அந்த பிரச்சனையை திரைக்கதையாக்கி
இயக்குநர் காட்சிகளை வடிவமைத்திருப்பது, விறுவிறுப்பான ஆக்‌ஷன் படமாக மட்டும் இன்றி, சமூக பிரச்சனையை பேசும் ஒரு தரமான திரைப்படமாகவும்
‘கம்பெனி’ படத்தை உயர்த்தியுள்ளது.

மேலும், கதைக்களம் பஸ்களை முழுமையாக வடிவமைக்கும் தொழிற்சாலை என்பதால், நிஜமாகவே அப்படி ஒரு தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடத்த வேண்டும்,
என்று முடிவு செய்த இயக்குநர் செ.தங்கராஜன், அதற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள பல தொழிற்சாலைகளை அணுகியுள்ளார். ஆனால், தங்களது தொழில் ரகசியம்
மற்றும் புதுவகை பேருந்துகளின் வடிவமைப்பு போன்றவை வெளியே தெரிந்துவிடும் என்பதால் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கவில்லை.

கதைக்களத்தோடு மக்கள் பயணிக்க வேண்டும் என்றால், உண்மையான களத்தில் வைத்து தான் கதையை சொல்ல வேண்டும், என்பதில் உறுதியாக இருந்த
இயக்குநர் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து பல தொழிற்சாலைகளை அணுகிக்கொண்டிருக்க, கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மிகப்பெரிய பேருந்து
தொழிற்சாலையின் உரிமையாளர், இயக்குநரின் விடா முயற்சியால் ஈர்க்கப்பட்டதோடு, படம் பேசும் சமூக பிரச்சனைப் பற்றி அறிந்துக்கொண்டு, இந்த படம் நிச்சயம்
இயக்குநர் நினைத்தது போல வர வேண்டும், என்று கூறி தனது தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடத்த அனுமதியளித்துள்ளார்.

அதன்படி, சுமார் 10 நாட்கள் அந்த பேருந்து தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடத்திய இயக்குநர் செ.தங்கராஜன், இதுவரை எந்த ஒரு தமிழ்த் திரைப்படத்திலும் காட்டாத
ஒரு களத்தை தனது ‘கம்பெனி’ திரைப்படத்தில் காட்டியுள்ளார். பேருந்துகளின் முழு வடிவமைப்பு தொழிற்சாலை என்ற களத்தை இதுவரை பார்த்திராத
மக்களுக்கு, இது மிக புதிதாக இருப்பதோடு சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

பேருந்து தொழிற்சாலையில் நடந்த உண்மை சம்பவம் என்பதால், கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பல பேருந்து தொழிற்சாலைகள் மற்றும் அதன் ஊழியர்களின்
பார்வை ‘கம்பெனி’ திரைப்படம் மீது விழுந்திருப்பதோடு, சினிமா ரசிகர்களிடமும் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவுக்கு மட்டும் இன்றி ரசிகர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும் விதமாக உருவாகி வரும் ‘கம்பெனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு
முடிவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்க உள்ள படக்குழு
திரையரங்கங்களில் படத்தை
வெளியிட திட்டமிட்டுள்ளது.

இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் இசையமைப்பாளர் ஜுபினின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக
அமைந்திருக்கிறது. பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜுபின் நிச்சயம் பாராட்டு பெறுவார், என்று இயக்குநர் செ.தங்கராஜன் நம்பிக்கை
தெரிவித்துள்ளார்.

செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் படத்தொகுப்பு பணியை ஜி.சசிகுமார் கவனிக்கிறார். மிராக்கல் மைக்கேல்
சண்டைக்காட்சிகளை வடிவமைக்க,
பெஞ்சமின் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.

கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள ‘கம்பெனி’ திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கும் உண்மை சம்பவம் சர்ச்சை வெடிக்கிறதோ,
இல்லையோ, ‘ஜெய் பீம்’ போன்ற பெரும் அதிர்வலையை ‘கம்பெனி’ படம் ஏற்படுத்துவது உறுதி

Leave A Reply

Your email address will not be published.