அதிக மின் கட்டணம்: இயக்குனர் தங்கர்பச்சான் அரசுக்கு வேண்டுகோள்

3

அதிக மின் கட்டணம் கட்ட இயலாமல் தவிக்கும் நிலைகுறித்து பிரபல இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் வெளி யிட்டுள்ள அறிக்கை,

அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில்தான் ஊதியங்களைப் பெறுகின்றனர். அதுவும் ஒரே ஒரு நாள் கூட தாமதமாகாமல்! ஆனால் மின்சாரக்கட்டண கணக்கெடுப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிக்கப்படுகின்றன. மாதம் மாதம் கணக்கெடுத்திருந்தால் 16 ஆயிரம் மட்டுமே என் வீட்டிற்கு மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், கடந்த மாதத்தில் 36 ஆயிரம் ரூபாய் மின்சாரக் கட்டணமாக செலுத்தியுள்ளேன்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கெடுக்கப்படுவதால் இரண்டேகால் மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கைகளில் இந்த மின்சாரக் கட்டணக்கொள்ளையை தடுக்கும் விதமாக மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வருவோம் என முதலமைச்சர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அடுத்த மாத மின் கட்டணம் செலுத்தும் தேதியை எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கின்றேன். ஒரு வீட்டின் மின் கட்டண செலவே இவ்வளவு என்றால் மற்ற குடும்பச் செலவுகளை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியவில்லை. அடுத்த மின் கட்டணமும் இதேபோல் செலுத்தச்சொன்னால் அதற்கானத்திறன் தமிழ் நாட்டில் எத்தனைக் குடும்பங்களுக்கு இருக்கும் என்பதை முதலமைச்சர் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தொழில் வாய்ப்பின்றி, வேலை வாய்ப்பின்றி பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க இயலாமல் வருமானமின்றி தவித்துக் கொண்டிருக்கும் இம்மக்களுக்கு முதலமைச்சர் உடனடியாக மாதாந்திர மின் கட்டண முறையை அறிவித்து உதவ வேண்டுகின்றேன்.

இவ்வாறு தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.