எனிமி (திரைப்பட விமர்சனம்)

10

படம்: எனிமி
நடிப்பு: விஷால்,ஆர்யா, பிரகாஷ் ராஜ்,கருணாகரன், தம்பி ராமையா,மிர்னாளினி, மாளவிகா
இசை:தமன்.எஸ்.
பின்னணி இசை: சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர்
தயாரிப்பு: எஸ்.வினோத்குமார்
இயக்கம்: ஆனந்த் சங்கர்

சிறுவயது நண்பர்கள் விஷால், ஆர்யா. தந்தை பிரகாஷ்ராஜிடம் புத்திசாலித்தனமான பயிற்சிகளை ஆர்யா பெறுவதை கண்டு அதேபோல் தானும் பயிற்சி பெற விரும்புவதாக பிரகாஷ்ராஜிடம் கேட்கிறார் விஷால். மகனுக்கு சொல்லித்தருவதுபோலவே விஷாலுக்கும் சொல்லித் தருகிறார். அவரோ ஆர்யாவைவிட வேகமாக கற்றுக்கொள்கிறார்.அதை பிரகாஷ்ராஜ் பாராட்டுகிறார். இது ஆர்யாவுக்கு பிடிக்காமல் போகிறது.இவர்களின் சிறுவயது பகை வளர்ந்து ஆளான பிறகு பயங்கர மோதலாக வெடிக்கிறது. தன் ரகசிய காதலியை விஷால் கொன்று விட்டதாக எண்ணி அவரை பழிக்குபழி வாங்க ஆர்யா துடிக்கிறார். இந்த போரட்டத்தில் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றனர். மோதலில் ஜெயிப்பது யார் என்பதற்கு அதிரடி ஆக்‌ஷனுடன் கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது .

நிஜத்தில் நண்பர்களான விஷாலும் ஆர்யாவும் படத்தில் பரம விரோதிகளாக நடித்திருப்பதுதான் கதைக்கு பலம் சேர்க்கிறது. எந்தவொரு இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் இருவரும் சவாலுக்கு சவால் விட்டு மோதிக் கொள்வதும் ஆர்யா போடும் திட்டத்தை விஷால் சாதுர்யமாக சிந்தித்து முறியடிப்பதும் ஆரவத்தை தூண்டுகிறது.
அடுத்த சில நொடிகளில் சிறு குழந்தை மீது இருப்பு தகடுகளை விழ வைத்து கொல்லப் போவதாக ஆர்யா, மிரட்டும்போது யாரும் எதிர்பாராத விதமாக ஆர்யாவின் ரகசிய காதலி விஷயத்தை உடைத்து அவரை கொன்றுவிடுவதாக சொல்லி ஆர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்து அவரிடமிருந்து குழந்தையின் உயிரை விஷால் காப்பாற்றுவது சர்ப்ரைஸ்.

விஷாலும் ஆர்யாவும் பல அடுக்கு மாடியில் திறந்த வெளி கட்டிடத்தில் மோதிக்கொள்ளும் கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு வரவழைக்கிறது.

ரிஸ்க் ராமலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் வழக்கம்போல் தனது பண்பட்ட நடிப்பை வழங்கி இருக்கி றார் தம்பி ராமையா. ரிடயர்டு போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ் கதையின் தொடக்கத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுத்தருகிறார்.கதாநாயகி மிரணாளினியும் கருணாகரனும் டென்ஷனான காட்சிகளுக்கு இடையே டென்ஷன் குறைக்கும் மருந்தாக பயன்பட்டிருக்கின்றனர்.

இயக்குனர் ஆனந்த் சங்கர் கதையை ஒன்றுக்கு பலமுறை பட்டை தீட்டி வைரமாக காட்சிகளை ஜொலிக்க வைத்திருக்கிறார்.தயாரிப்பாளர் வினோத்குமாரின் அதிக பட்ஜெட் படம் என்பதை ஆர்.டி.ராஜசேகரின் கேமரா படம் பிடித்து காட்டி இருக்கிறது.
பாடல்களுக்கு தமன் இசை அமைத்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு சாம் சி.எஸ். பரபரப்பு  இசை அமைத்திருக்கிறார்.

எனிமி- தீபாவளி ஆக்‌ஷன் சரவெடி.

Leave A Reply

Your email address will not be published.