எஃப் ஐ ஆர் (திரைப்பட விமர்சனம்)

6

படம்: எஃப் ஐ ஆர்

நடிப்பு: விஷ்ணு விஷால், கவுதம் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா, அமான், மாலா பார்வதி, ஆர் என் ஆர் மனோகர், கவுரவ் நாராயணன், பிரவீன் குமார், பிரசாந்த், அபிஷேக், ராம்,சி, பிரவீன் கே, ராகேஷ் பிரமானந்தன், வினோத் கைலாஷ்

இசை: அஸ்வத்

ஒளிப்பதிவு: அருள் வின்சென்ட்

இயக்கும்: மனு ஆனந்த்

தயாரிப்பு: சுபாரா, ஆர்யன் ரமேஷ், விஷ்ணு விஷால்

ரிலீஸ்: ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ்

முஸ்லிம் இளைஞர் விஷ்ணு விஷால் கெமிக்கல் என்ஜினியரிங் படித்துவிட்டு அதற்கேற்ற வேலை கிடைக்காததால் தெரிந்தவர் நடத்தும் மருந்து கம்பெனியில் சேர்கிறார். அவருக்கு கெமிக்கல்ஸ் வாங்கும் வேலை தரப்படுகிறது. கெமிக்கல்ஸ் வாங்குவதற்காக ஐதராபாத் செல்லும் அவரை விமான நிலையத்தில் போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்து தீவிரவாதி என்ற கோணத்தில் விசாரிக்கிறது. போலீஸ் தேடும் பயங்கர தீவிரவாதி இவர்தான் என முத்திரை குத்துகின்றனர். போலீஸ் பிடியிலிருந்து தப்பி வரும் விஷ்ணு வேறு வழியில்லாமல் தீவிரவாத கூட்டத்துடன் சேர்கிறார். அந்த கூட்டம் மக்களை அழிக்க விஷவாயு தயாரித்து அதை காற்றில் கலக்கவிட்டு கொல்ல திட்டமிடு கிறது. விஷவாயுவை விஷ்ணு விஷாலே தயாரித்து தருகிறார். இவர்களது சதி திட்டத்தை உயர் அதிகாரிகள் படை எப்படி முறியடிக்கிறது என்பதே கிளைமாக்ஸ்.

விஷ்ணு விஷாலுக்கு முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக மாறும் வாய்ப்பு தந்திருக்கும் படமாக எஃப் ஐ ஆர் உருவாகி இருக்கிறது. இஸ்லாம் மதத்தில் பிறந்ததால் தன் மீது தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அதிகாரிகளிடம் விஷ்ணு கேட்கும் கேள்விகள் ஊசியாக தைக்கிறது.

தீவிரவாதி என்று விஷ்ணுவை குற்றம் சுமத்தி அவரை தலைகீழாக தொங்கவிட்டு சித்ரவதை செய்து வாக்குமூலம் தரச் சொல்லி அதிகாரிகள் தரும் டார்ச்சர் பரபரப்பு. சண்டை காட்சிகளில் அதிரடியாக மோதி வெளுத்துகட்டியிருக்கிறார் விஷ்ணு. அதுமட்டுமல்லாமல் படத்தில் அவரது பாத்திரம் சஸ்பென்ஸாக கிளைமாக்ஸ் வரை வைக்கப்பட்டிருப்பது பிளஸ்.

தீவிரவாத தடுப்புபிரிவு தலைமை அதிகாரியாக நடித்திருக்கும் கவுதம் மேனன் தனது தோரணையான நடிப்பால் கவர்கிறார். அவரது பிரிவில் பணியாற்றும் அதிகாரியாக வரும் ரைசா வில்சனும் மாறுபட்ட நடிப்பில் பிரகாசிக்கிறார். மஞ்சிமா மோகன் வக்கீலாக வந்து விஷ்ணுவுக்கு உதவுகிறார்.

கவுதம் மேனனின் உதவியாளர் மனு ஆனந்த் இயக்கி இருக்கும் இப்படம் சில சர்ச்சைகளை கிளப்பும். கிளைமாக்ஸ் வரை பொறுமை காத்தால் இயக்குனர் சொல்ல வந்த விஷயத்துக்கு விடை கிடைக்கும்.

அஸ்வத் இசை, அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு பலம்.

எஃப் ஐ ஆர் – விவாதத்துக்கு உரிய படம்.

Leave A Reply

Your email address will not be published.