டி.எம்.சவுந்தரராஜன் அ முதல் அஃகு வரை.

7

 

டி.எம்.சவுந்தரராஜன், சினிமாவில் பாட வாய்ப்பு தேடி அலைந்த காலம் அது. சேலம் மாடர்ன் தியேட்டர்சில் உருவான, தேவகி (1951) படத்தில், தீராத துயராலே பாழாகியே… என்ற பாடலை பாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு பிச்சைக்காரன், பெண்களின் பரிதாப நிலையை எண்ணி, கண்ணீர் வடிக்கும் பாடல் அது! சவுந்தரராஜனே பிச்சைக்காரன் வேடத்தில் வந்து பாடலை பாடுவார். இப்படத்தின் பாட்டுப் புத்தகத்தில், நடிகர்கள் பட்டியலில் அவர் பெயர், ‘டி.எம்.சவுந்தரராஜன் – பிச்சைக்காரன்’ என்றே உள்ளது.

ஒருநாள், கமலவல்லி பட இயக்குனர் முருகன் மற்றும் அப்படத்தின் வசனகர்த்தாவான எழுத்தாளர் புதுமைப்பித்தன் ஆகியோர், அந்த படத்தில் நடிக்கயிருந்த ஒரு நடிகையின் வீட்டுக்கு சென்றனர். அந்த நடிகையின் தாய்மொழி, தெலுங்கு; பேசியதோ கொச்சைத் தமிழ். புதுமைப்பித்தன், அவரோடு கதை சம்பந்தமாக பேச நேர்ந்தது. பின், அவரது வீட்டை விட்டு வெளியே வந்து காரில் ஏறியவுடன், ‘இயக்குனர் சார்… எனக்கு ஒரு யோசனை தோணுது; இந்த அம்மா தான் கதாநாயகியாக நடிக்கணும்ன்னா, நான், என் கதாநாயகிய ஊமையாகவே ஆக்கிடுறேன். வீணாக தமிழ் சாக வேணாம்…’ என்றார்.

சபாஷ் மீனா படத்தில், சந்திரபாபுவிற்காக, இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பா போட்ட டியூனுக்கு எழுதப்பட்ட பாட்டுதான், ‘குங்குமப் பூவே… கொஞ்சும் புறாவே…’ பாடல்!

இப்பாடலின் ரிகார்டிங் அன்று, பாட வந்திருந்த சந்திரபாபு, படத்தின் தயாரிப்பாளர் பந்துலு மீதிருந்த பழைய கோபத்தில், ‘பாட்டுக்கு வாத்தியம் வாசிக்க வந்திருப்போர் ரொம்ப குறைவாக இருக்கின்றனர்…’ என்று குறை கூறி, திரும்பி சென்று விட்டார்.

பின், சந்திரபாபு நடித்த, மரகதம் படத்தில், அதே பாட்டை, அதே மெட்டில் பாடி, ரிகார்ட் செய்து, படத்திலும் சேர்த்து விட்டனர். அந்த படத்திற்கு இசை, கே.வி.மகாதேவன்.

பின், கே.வி.மகாதேவனை, லிங்கப்பா நேரில் சந்தித்தபோது, இதற்காக அவரிடம் கோபித்துக் கொண்டார்.

பாசவலை (1956) படத்தின், டைட்டிலில், பின்னணி பாடகர்களின் வரிசை இப்படி குறிக்கப்பட்டிருந்தது… ‘சிதம்பரம் ஜெயராமன், சுசீலா, ஜிக்கி, ஸ்ரீநிவாசாச்சாரி…’

யார் இந்த ஸ்ரீநிவாச்சாரி…

பி.பி.ஸ்ரீநிவாசின் அப்போதைய பெயர் தான் அது!

கொஞ்சும் சலங்கை படத்திற்கு இசை, சுப்பையா நாயுடு; இதில், ‘சிங்கார வேலனே தேவா…’ பாட்டுக்கு, முதலில் நாதஸ்வர கலைஞர் காருகுறிச்சி அருணாசலத்தை அழைத்து, அவர் வாசிப்பில் முழு பாட்டையும் பதிவு செய்து விடுவது, பின், பாடகியை அழைத்து, அப்பாடலை வாய்பாட்டாக பாடச் செய்து, இரண்டையும் அடுத்தடுத்து, வெட்டி, ஒட்டி மாஜிக் பண்ணுவது என முடிவு செய்தனர். காருகுறிச்சியை அழைத்து நாதஸ்வரம் வாசிப்பை பதிவு செய்து, அனுப்பி விட்டனர்.

அதன்பின், நாயனத்திற்கு ஈடுகொடுத்து, அதே சுருதியில் பாடக்கூடிய குரலை தேட ஆரம்பித்தனர்.

அங்குதான் பிரச்னை… அவ்வளவு உச்ச சுருதியில் தங்களால் பாட முடியாது என்று பல பாடகிகள், பாட மறுத்தனர். பி.லீலாவும் நிராகரித்தார்; ஆனால், ஜானகியால் முடியும் என்று கை காட்டினார்.

‘சிங்கார வேலனே தேவா’வை, ஜானகி, எவ்வளவு சிறப்பாக பாடினார் என்பதை தமிழ்நாடு அறியும்!

அ முதல் அஃகு வரை

Leave A Reply

Your email address will not be published.