பார்வதி அம்மாளுக்கு அரசு கட்டிதரும் வீடு: லாரன்ஸ் வாழ்த்து

0

ஜெய்பீம் உண்மை சம்பவத்தில் பங்கேற்றவர் பார்வதி அம்மாள். அவருக்கு அரசு வீடு கட்டி தருவதாக  அறிவித்துள்ளதற்கு நடிகர் லார்ன்ஸ்  நன்றி கூறியுள்ளதாவது:

ஜெய்பீம் படத்தின் உண்மைக்கதைநாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமைநிலையில் வாழ்ந்து வருவதை ‘வலைப்பேச்சு’ மூலம் அறிந்த பிறகு, பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தேன்.
பார்வதி அம்மாவை நேரில் சந்தித்தும் அவரிடம் இதுபற்றி தெரிவித்தேன். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள, கீழ நத்தம் கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது என்றும் அந்த இடத்தில் வீடு கட்டித்தரும்படி கேட்டுக்கொண்டனர்.
அதன்படி சில நாட்களுக்குமுன் கீழநத்தம் கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்தோம். விரைவில் வீடுகட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் இருந்தநிலையில்,பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாக தொலைக்காட்சி செய்தி மூலம் அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.
பார்வதி அம்மாவின் இன்றைய வறுமைநிலையை அறிந்து அவருக்கு வாழ்விடத்தை கட்டிக்கொடுக்க முன்வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தருவதற்காக நான் ஒதுக்கிய 5 லட்சத்துடன் மேலும் 3 லட்சம் சேர்த்து, பார்வதி அம்மாள், அவருடைய மகள், மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சங்களை வழங்க முடிவு செய்துள்ளேன்.
பார்வதி அம்மாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நல்லது நடப்பதற்கு காரணமாக இருந்த ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை தயாரித்த திரு.சூர்யா, திருமதி.ஜோதிகா, இயக்குநர் திரு. த.செ. ஞானவேல் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைவுகூர்வோம்.

அன்புடன்
ராகவா லாரன்ஸ்.

Leave A Reply

Your email address will not be published.