ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் விக்னேஷ், நயந்தாரா வாழ்த்து

0

கடந்த 2021-ஆம் ஆண்டு எங்கள் ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு ஆண்டாக அமைந்துள்ளது. உலகெங்கிலும் இருக்கும் தமிழர்களுக்கு பெருமை தேடித் தரக் கூடிய தனித்துவமான படைப்புகளையும், அதே சமயம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடக்கூடிய ஜனரஞ்சகமான படைப்புகளையும் ஒருசேர அளித்திட வேண்டும் என்ற பெருங்கனவோடும் மிகுந்த ஆவலோடும் துவங்கப்பட்ட எங்கள் நிறுவனத்திற்கு முதல் ஆண்டே வெற்றிகரமான ஆண்டாக அமைந்திருப்பதை உங்களிடம் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் எங்கள் நிறுவனத்தின் முதல் பெருமைமிகு தயாரிப்பாக அமைந்த ‘கூழாங்கல்’ திரைப்படம்  பல உலக சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி,  ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் டைகர் விருது உட்பட பல உயரிய விருதுகளையும் வென்று, பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டுக்களையும்  குவித்தது. ஆஸ்கார் விருதின் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான போட்டிப் பிரிவில் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக தேர்வானதும், தற்போது ஃபிலிம் இண்டிபெண்டென்ட் ஸ்பிரிட் விருதுக்கு இறுதிச் சுற்றில் தேர்வாகி இருப்பதும் எங்கள் நிறுவனத்தை மேலும் பெருமை அடையச் செய்துள்ளது.
எங்கள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பும், முதல் வெளியீடுமான ‘நெற்றிக்கண்’ திரைப்படமானது, நயன்தாரா நடிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளிவந்து விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றதோடு ரசிகர்களின் பேராதரவையும் பெற்றது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த ‘ராக்கி’ திரைப்படமும் வித்தியாசமான ஒரு படைப்பாக ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று எங்கள் நிறுவனத்திற்கு மற்றுமொரு பெயர் சொல்லும் படமாக அமைந்துள்ளது.
இந்த வெற்றிகள் தந்த உற்சாகத்தோடு வரும் புத்தாண்டில் 4 புதிய படங்களுடன் களமிறங்குவதில் ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் மென்மேலும் மகிழ்ச்சி கொள்கிறது.
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் எஸ். எஸ். லலித்குமாருடன் இணைந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’; அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, சத்யராஜ், பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேர் ஆகியோர் நடிக்கும் திகில் படமான ‘கனெக்ட்’ ; மற்றும் அறிமுக இயக்குனர் விநாயக் இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ புகழ் கிருஷ்ண குமார், பாடகி ஜொனிதா காந்தி, மால்தி சாஹர், வைஷ்ணவி அந்தேல், ரச்சேல் டேவிட் போன்ற இளம் நட்சத்திரங்கள் நடிக்கும் ரொமாண்டிக் படமான ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்’ ஆகிய படங்கள் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அறிமுக இயக்குனர் அருண் இயக்கத்தில் கவின் நாயகனாக நடிக்கும் ‘ஊர் குருவி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
எங்களின் இந்த வெற்றிப் பயணத்தில் உறுதுணையாக இருக்கும் ரசிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊடகத் துறையை சேர்ந்த நண்பர்கள் ஆகிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு எதிர்வரும் இந்தப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் வளமான ஒரு ஆண்டாக அமையவும் மனதார வாழ்த்துகிறோம்.

இப்படிக்கு,
விக்னேஷ் சிவன் – நயன்தாரா

Leave A Reply

Your email address will not be published.